
கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்!
ஓட்டுக்கு
பணம் கொடுப்பதையும்,
வாங்குவதையும்
வரலாற்றில்
இடம்பெறச் செய்த
வல்லமை படைத்தவர்கள்
நாங்கள்!
சிறப்பு வசதிகள்
அனைத்தையும்
சிறையில்
அமைத்து தந்த
சிங்கார வேலவர்கள்
நாங்கள்!
மணல் கொண்டு தான்
மாடி வீடு கட்ட முடியும்
என்பதை மாற்றி
மணல் கொள்ளை மூலமும்
மாட மாளிகைகள்
கட்ட முடியும் என
மாற்றிக் காட்டிய
மண்ணின் மைந்தர்கள்
நாங்கள்!
கைத்தொழில் ஒன்றை
கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை
ஒத்துக்கொள் என்பதை
கையூட்டு வாங்கக்
கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை
ஒத்துக்கொள் என,
காட்சிப்படுத்திய கனவான்கள்
நாங்கள்!
பட்டம் வழங்கும் பல்கலைக்
கழகங்களை
பணம் வாங்கும் பல்கலைக்
களங்களாக
பரிமளிக்கச் செய்த
பகலவ வேந்தர்கள்
நாங்கள்!
வேண்டாத விஷயங்களுக்காக
விசாரணைக் கமிஷன் அமைத்து
பணத்தை வீணாக
விரயம் செய்யும்
வேடிக்கை மனிதர்கள்
நாங்கள்!
கொள்கையை குழிதோண்டி
புதைத்து விட்டு
கொள்ளையை கொலுவில் ஏற்றி
கோடி கோடியாய் குவிக்கும்
கோமான்கள்
நாங்கள்!
ஓதாமல் ஒரு நாளும்
இருக்க வேண்டாம்
என்பதை
ஊழல் புரியாமல்
ஒரு நாளும் இருக்க வேண்டாம்
என்று உலகுக்கு
உணர்த்திக் காட்டிய
உத்தம சீலர்கள்
நாங்கள்!
இத்தனை சாதனை
புரிந்த எங்களை
எதுவும்
செய்து விடாதீர்கள்
ஏனென்றால்...
கோடிகளைக் கொட்டி
கோலோச்ச
வந்திருப்பவர்கள்
நாங்கள்
கொட்டிய கோடிகளை
எடுக்க கொஞ்சம்
அவகாசம் கொடுங்கள்!
பெ.கருணைவள்ளல், சென்னை.