
''நிஜமாவா சொல்றே?'' ஆச்சரியத்துடன் கேட்டார், அப்பா.
''சத்தியமா நான் சொல்றது உண்மைதாம்பா!'' என்றான், ராகவ்.
''உங்க அம்மாவுக்கு தெரியுமா?''
''சொல்லலை!''
''சொல்ல வேண்டாம். அண்ணன் செத்து, ஆறு மாசத்துக்கு பின், உங்க அண்ணி பேசற முதல் வார்த்தை இதான்... அவள் சொன்னதை செய்!''
''அம்மாவுக்கு தெரிந்தால்?''
''அம்மாவை நான் பார்த்துக்கறேன்!''
''எங்கே போறீங்கன்னு கேட்டால்?''
''அண்ணியோட பிறந்த வீட்டிற்கு என்கிறேன்!''
''அண்ணன் செத்த பிறகு, எவ்வளவோ முறை யார் யாரோ கேட்டும், தன் பிறந்த வீட்டுக்கு போக விரும்பாத அண்ணி, இப்போ போகிறேன் என்று நாம் சொல்வது, அம்மாவை நம்ப வைக்குமா?''
''அண்ணி ஏதாவது பேச மாட்டாளா என்று, இவ்வளவு நாள், உன் அம்மா காத்துக் கொண்டிருந்தாள். அதனால, நிச்சயம் நம்பி விடுவாள்; சந்தோஷப்படுவாள். அண்ணியோட நீ கிளம்பு... அவள் மனசு மாற நிறைய வாய்ப்பிருக்கு... அதை மாற்றும் சக்தி உன்னிடம் இருக்கு... எந்த முடிவுக்கும் நான் தயாராக இருக்கிறேன்... அது, நல்ல முடிவாக இருந்தால், வரவேற்பேன்,'' என்றார், அப்பா.
''எனக்கு பயமா இருக்குப்பா.''
''பயப்படாதே... அவளே ஒரு முடிவுக்கு வந்த பின், அதை மாற்ற விரும்பலை, நான். கொடைக்கானலுக்கு இரண்டு டிக்கெட் எடுக்க ஏற்பாடு செய்,'' என, சொல்லி, அப்பா போய் விட்டார்.
அவர், மீண்டும் கொடைக்கானல் பெயரை சொன்னபோது, மனம் முழுக்க பீதி பரவியது.
அண்ணனும், அண்ணியும், தேன்நிலவுக்காக, கொடைக்கானலுக்கு போய், அண்ணி மட்டும் விதவையாக திரும்ப செய்த இடம், கொடைக்கானல்.
நிறைய படித்தவள்; அழகானவள்; அதிகம் பேச மாட்டாள், அண்ணி. அதுவும் அண்ணன் இறந்த பிறகு பேசவே இல்லை. ஆறு மாதத்திற்கு பின், அவள் பேசிய முதல் வார்த்தையே இது தான்...'எனக்கு, ஓர் உதவி செய்வியா, ராகவ்?'
நம்ப முடியாமல், அவள் முகத்தை பார்த்தேன்.
'கொடைக்கானலுக்கு என்னை அழைச்சிட்டு போவியா?'
பதில் சொல்லவில்லை. அந்த நேரத்தில், மறு பேச்சு பேசும் நிலையில் நான் இல்லை.
அப்பாவிடம் பேசிய கொஞ்ச நேரத்திற்கு பின், தாழ்வாரத்தின் ஓரத்தில் நின்றிருந்த அண்ணியிடம், தயங்கியபடி, ''நாளைக்கு சாயந்திரம், 6:45க்கு கிளம்புகிற விரைவு அரசு பேருந்தில், கொடைக்கானலுக்கு போறோம்,'' என்றான்.
பேருந்து, திருச்சியில் நின்றபோது, அதிகாலை, 2:00 மணி.
அண்ணி உறங்கவில்லை என்பது தெரிந்து, ''பிளாஸ்க்கை எடுங்கள்... டீ வாங்கி வெச்சுப்போம்,'' என்று, நான் சொல்ல, சட்டென்று பையிலிருந்த பிளாஸ்க்கை எடுத்தவள், ''அப்படியே, இங்க சாப்பிட டீ வாங்கிக்க,'' என்றாள்.
வாங்கி வந்தேன்; சாப்பிட்டோம். வேறு எதுவும் பேசவில்லை.
பேருந்து புறப்பட்டு திண்டுக்கல்லை அடைந்தது. வண்டியை விட்டு இறங்கினேன். அதிகாலை, 4:30 மணி. சிறுநீர் கழித்து, வண்டியில் ஏறி பார்த்தால், அவள் இருந்த இடம், காலியாக இருந்தது; மனதில் பயம் கவ்வியது.
துாரத்தில், எதிர் முனையிலிருந்த அண்ணி, ''ராகவ்... எங்கே அலையறே... வா, காபி சாப்பிடு... சூடு ஆறிப் போச்சு,'' என்றாள்.
ஓடிச் சென்று காபி டம்ளரை எடுத்தேன். ஒன்றும் சொல்லவில்லை. காபியை குடித்து, பேருந்தினுள் அமர்ந்தோம்.
அதிகாலை, 5:30 மணிக்கு, வத்தலகுண்டை தாண்டி, மலை மீது பயணப்பட்ட பேருந்து, வளைந்து, நெளிந்து, உயர்ந்து, தாழ்ந்து, 8:00 மணிக்கு, கொடைக்கானலை அடைந்தது.
வீசிய காற்றில், நீர்த் துளிகள் கலந்திருந்தன. திசைகளை யூகிக்க முடியாத மந்தகாச நிலை. ஒரு பக்கம் தாழ்ந்து, எதிர்புறம் மிக உயர்ந்து ஆங்காங்கே முடிச்சு முடிச்சாய் வீடுகள். வெண் பனி மேகங்கள்.
மாருதி வேனை வாடகைக்கு அமர்த்தியவள், 'செட்டியார் பார்க்' போகச் சொன்னாள். 'பார்க்'கின் அருகில் இருந்த விடுதியை அடைந்து, வண்டியை விட்டு இறங்கும்போது, ''ஊரை சுற்றி பார்க்கணும். நீயே வர்றியா?'' மாருதி வேன் டிரைவரிடம், அண்ணியே நேரிடையாக பேசியது,
வியப்பாக இருந்தது.
அதே சமயம், இன்னும் விடுதிக்குள்ளே போகும் முன்னே, ஊரை சுற்றிப் பார்க்க அப்படி என்ன அவசரம் என்றும் தோன்றியது.
'அண்ணி பேசுகிறாள்; அதுவே போதும்...'
''சைட் ஸீயிங்கில், 12 இடம் இருக்கு... எட்டு இடம் இருக்கு... எது வசதி உங்களுக்கு,'' கேட்டார், டிரைவர்.
''எட்டு இடத்தில் தற்கொலை பாறை வருதா?''
''வருது மேடம்!''
''போயிட்டு, 11:00 மணிக்கு வா... குளிச்சிட்டு தயாராக இருக்கோம்,'' என்றாள்.
என்னிடம் திரும்பி, ''டிரைவரிடம், 200 ரூபாய் கொடு,'' என்றாள்.
''டிரைவர் மறந்திடாதே... 11:00 மணி!'' கிளம்பினார், டிரைவர்.
சரியாக, காலை, 11:00 மணிக்கு, மாருதி வேன் வந்தது.
'ஷாம்பு'வால் அலைபாய்ந்த கூந்தல். மெல்லிய நுாலிழை சேலையில், சின்ன சின்ன பூக்கள்.
''நாம் போவது, குறிஞ்சி ஆண்டவர் கோவில். 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ, இந்த ஆண்டு பூத்திருக்கு,'' என்றார், டிரைவர்.
டிரைவருக்கு பின் சீட்டில், என் அருகே அமர்ந்திருந்தவள், தன் பக்கத்தில் வைத்திருந்த கைப்பையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள். சேலை முந்தானையை கொசுவி இறுக்கினாள்.
''உன் அண்ணனுடன் இங்கே வந்தபோது, இதே சேலையை தான் கட்டியிருந்தேன். இப்போ நாம போகிற இடத்துக்கு தான், முதன் முதலாக வந்தோம். குறிஞ்சி மலர் பார்க்கணும்ன்னு ஆசைப்பட்டார். முடியலை. பார்க்க தான் பூ அழகா இருக்கே தவிர, வாசம் இருக்காது... இப்போ பூத்திருக்காம்,'' என்றாள்.
நான் பதில் சொல்லவில்லை.
கோவிலுக்கு முன் நின்றது, வண்டி.
''நீ போயிட்டு வா, ராகவ். நான் வரலை,'' என்றாள்.
''ஏன்?''
''போன தடவை அவரோட வந்தப்ப, உள்ளே போகலை. வெளியே இதோ, எதிர் கடையில் உட்கார்ந்து மெதுவடை சாப்பிட்டோம்,'' என்றாள்.
''வாங்க... மெதுவடையே சாப்பிடலாம்,'' என்றான்.
சாப்பிட்டதும், ''நீயாவது கோவிலுக்கு போயிருக்கலாம், ராகவ்!'' என்றாள்.
''வேண்டாம். உங்களை தனியே விட மனசு வரலை.''
'இதழ்களை பிரிக்காத சிரிப்பு. இதற்கு முன் இந்த சிரிப்பை நான் பார்த்ததில்லை. இதுவரை யாருடனும் ஒன்றுமே பேசாத அவளிடம், இதோ என்னுடன் பேசிக் கொண்டிருப்பதே ஒரு பெரிய விஷயமாக இருக்க, சிரிப்பு... மாபெரும் மாற்றம் தான்...'
''வா, கிளம்பலாம்!''
வண்டி புறப்பட்டு, பள்ளத்தில் இறங்கி திரும்பியபோது, 'செட்டியார் பார்க்' வந்தது.
''செட்டியார், 'பார்க்'கும், 'டூரிஸ்ட் ஸ்பாட்' தான் மேடம்! நாம பார்க்கிற இடங்களில் இரண்டாவது இடம்,'' என்றார், டிரைவர்.
''வேண்டாம்... நேரம் கிடைக்கிற போது நடந்து வந்து பார்த்துக்கலாம்... அடுத்த இடத்துக்கு போ,'' என்றாள்.
வேன் சட்டென்று உருமி, அந்த மேட்டைத் தாண்டியது.
அவளை பார்த்தேன். பக்கவாட்டு கண்ணாடியை திறந்து, துாரத்தில் தெரிந்த மலை உச்சிகளை பார்த்தபடி வியந்தாள். வண்டியின், 15 நிமிட ஓட்டத்திற்கு பின், 'கோக்கர்ஸ் வாக்' வந்தது.
''அதோ மேலே இருக்கிற அறையிலிருந்து தொலைநோக்கி கருவி மூலம் பார்த்தால், வைகை அணையும், பெரிய குளமும் தெரியும். போ, போய் பாரு, ராகவ்! நான் இங்கே இப்படி காலார நடக்கிறேன்,'' என்றாள்.
''நீங்க வரலையா?''
''நீ போ!''
தயக்கமாய் இரும்பு கதவுகளை கடந்து, தொலைநோக்கி கருவி இருக்கும் அறையின் படிகளில் ஏறியபோது, வழியில் நின்ற ஆள், ''சார்... மேலே போய் பார்க்க, டிக்கெட், ஐந்து ரூபாய்,'' என்றான்.
''இந்தாங்க.''
''கீழே இருக்கற அறையில் டிக்கெட் வாங்கி வாங்க,'' என்றான்.
படியை விட்டு கீழே வந்தேன். இறக்கத்திற்கு அந்த பக்கம் அதல பாதாளம். மேக மூட்டம் மொத்தமாய், கொத்துகளாய் போய் கொண்டிருந்தன. மேக மூட்டத்திற்கு இடையிடையே தெரிந்த தெளிவில், பாதாளத்தின் பயங்கரம் புரிந்தது.
சட்டென்று அண்ணியின் ஞாபகம் வர, திரும்பி வேனுக்கு ஓட முயன்றேன்.
''ஏய்... எங்கே ஓடறே,'' எனக்கு மிக அருகில் இருந்தவள், தடுத்து நிறுத்தி, ''பார்த்தியா... இதுநாள் வரை, மேகத்தை அண்ணாந்து பார்த்தே பழக்கப்பட்ட நமக்கு, இங்கே பார், குனிந்து கீழே பார்க்கிறோம்,'' என்றாள்.
சிரிக்க முயன்றேன்.
''என்ன... 'உம்'முன்னு இருக்கே... முன்பு அவரோட வந்தப்ப, அந்த பக்கம் கம்பி வலையெல்லாம் போடலை... ரொம்ப கிட்டே போய் பார்த்தேன். 'த்ரில்'லிங்கா இருந்தது. வாயேன், போய் எட்டி பார்ப்போம்,'' என்றாள்.
''வேண்டாம்... வாங்க, அடுத்த இடம் போகலாம்,'' என்றான், ராகவ்.
''ஏன் பயப்படறே... ஆம்பளை தானே நீ?''
'அவளின் ஒவ்வொரு பேச்சும், அதன் வேகமும் பிரமிப்பாய் இருந்தது. எதற்கு இதெல்லாம்... ஆனால், ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. கடந்த ஆறு மாதங்களாக பார்த்த அவளுக்கும், இப்போது பார்க்கும் அவளுக்கும் மாற்றங்கள் தான் எத்தனை... அந்த மாற்றம் வினாடிக்கு வினாடி உற்சாகமாக உயர்ந்து கொண்டே சென்றது. சந்தோஷப்படலாமா... முடியுமா?'
''வா, ராகவ்... 'பில்லர்ஸ் ராக்' போவோம்... ரொம்ப நல்ல இடம்... பார்த்துட்டே இருக்கலாம்,'' என்றாள்.
கோல்ப் மைதானம், பச்சை மரகதமாய் விரிந்து படர்ந்திருக்க, 'பில்லர்ஸ் ராக்' வந்தது.
''சார்... கம்பிக்கு அந்த பக்கம் போகாதீங்க... மேக மூட்டம் அதிகமாயிருக்கு, எட்டியிருந்தே பார்க்கலாம்; நல்லா தெரியும். இந்த, 'பில்லர்ஸ் ராக்'கிற்கு அந்த பக்கம் தான், கமல்ஹாசனோட, அபிராமி படம் எடுத்தாங்க,'' என்றார், டிரைவர்.
''அபிராமி இல்லை டிரைவர், குணா,'' என்றாள்.
''அது... அதான் மேடம்,'' என்றான்.
''வா, ராகவ்... கிட்டயே போய் பார்க்கலாம். ஆனாலும், இந்த, மூடுபனி ரொம்ப மறைக்குது. 'ராக்ஸ் வியூ' துல்லியமாக தெரியலை,'' என்றாள்.
''டீ சாப்பிடலாமா,'' என்றான்.
''போய் பார்த்துட்டு, வந்து சாப்பிடலாம் வா,'' என, ஏறக்குறைய கையை பிடித்து இழுக்காத குறையாக அழைத்து சென்றாள்.
ஆவலாய், அதிசயமாய்; பார்த்தபடியே இருந்தாள். கண்களில் நீர் துளிர்த்திருக்குமா... இல்லை, புன்னகை பூத்திருந்தது.
அவளை பாதுகாக்கிற தோரணை, என்னை வியாபித்திருந்தது.
''போகலாம் ராகவ்... அடுத்த இடம், 'கிரீன் வாலிஸ்...' அதான், தற்கொலை பாறை. உங்க அண்ணன், கால் தவறி விழுந்த இடம்,'' என, சொல்லி, மாருதி வேனை நோக்கி, வேகமாய் நடந்தாள்.
நான் அவளுடன் ஓடினேன்.
தற்கொலை பாறை வரும் வரை ஒன்றுமே பேசவில்லை; சூன்யமான சூழல். பாதை நெடுக தோளுடன் தோள் உரசி, தேனிலவு தம்பதியர்.
மாருதி வேன் நிற்பதற்கு முன்பே, கதவை திறந்து இறங்கினாள்.
''ராகவ்... மேக மூட்டம் குறைஞ்சிருக்கு. 'வியூ' நல்லா இருக்கு... படி ஏறி போனால், கொஞ்ச துாரம் தான் வா,'' என்றாள்.
பின் தொடர்ந்தேன்.
பலமான கம்பி வலைகள் பூட்டப்பட்டிருந்தன. வலைக்கு அந்த பக்கம், ஆழத்தை அளவிட முடியாத பாதாளம். கீழே பார்த்தபோது, கழுகு ஒன்று வட்டமிட்டது.
அண்ணன் விழுந்த இடம். அதே இடத்திற்கு வந்திருக்கிறாள், அண்ணி.
சிந்தனை முடிச்சு இறுகியது.
''சார்... கொஞ்சம் தள்ளி நிற்கிறீர்களா... போட்டோ எடுக்கணும்,'' என்றான்,
இள மனைவியுடன், வெளிநாட்டு இளைஞன் ஒருவன்.
''வித் பிளஷர்,'' என்று சொல்லி, நகர்ந்தேன்.
பலமான நீண்ட சுவரின் அந்த முனையில், அண்ணி நிற்பது தெரிந்தது. சுவரின் முடிவில் சிறு இடைவெளி. ஓர் ஆண் போகிற இடைவெளி. அவள் உள்ளே புக முயலுகிற மாதிரி பிரமை. நிஜமா... நிஜம் தான். முயன்றாள்.
ஓடிச் சென்று, கையை பிடித்து இழுத்து, வெளியே தள்ளினேன்.
''என்ன காரியம் செய்ய இருந்தீங்க... இதுக்காகவா இந்த இடத்திற்கு என்னை அழைச்சிட்டு வந்தீங்க... போதும், நடத்திய நாடகம்... இதுநாள் வரை, பேசாமல் இருந்துட்டு, நீங்க செய்த சூழ்ச்சி போதும்,'' என்றேன்.
''என்ன, ராகவ்... நான் விழுந்துடுவேன்னு பயந்துட்டியா... கீழே, 'கர்சீப்' விழுந்துட்டது, எடுத்தேன். விழற அளவுக்கு நான் கோழை இல்லை. நினைத்திருந்தால், வீட்டிலேயே தற்கொலை செய்துக்க என்னால் முடியும்... என்னை சுற்றி ஒரு வளையத்தை போட்டுக்கிட்டு நிற்காமல், வெளியேயும் பரந்த உலகம் இருப்பதை பார்க்க தான் வந்தேன்.
''அவர் இல்லாமலும், என்னால் சந்தோஷமாயிருக்க முடியுது... அவரோட இருந்த சில நாட்களை பற்றி மீண்டும் மீண்டும் நினைத்து புழுங்காமல், தனியாக வந்த அதே இடங்கள், இனிமையாக தான் இருக்கும். அந்த மாதிரி இருக்க முடியுமான்னு பார்க்க தான், மீண்டும் ஒரு தரம் அதே இடத்திற்கு வந்தேன். முடியுது... என்னால் முடியும்ங்கிற நம்பிக்கையிருக்கு. டீ சாப்பிடலாம் வா,'' என்றாள்.
அவள் மேல் மரியாதை கூடியிருந்தது.
''சுட்ட சோளம் சாப்பிடுவீங்களா?''
''வாங்கி தா... சாப்பிடுகிறேன்,'' என்றாள்.
ரகு.பாலமுருகன்