
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காத்துக்கிடப்பேன்!
நீ தடம் பதித்து
கடந்து போன
பாதைகளில்
வெள்ளரி வல்லிகளாய்
படர்ந்திருப்பேன்!
நீ ஆடை களைந்து
மேனி கழுவிய
தடாகத்தில்
தாமரைப் பூக்களாய்
தளிர்த்து நிற்பேன்!
நீ இரை காட்டி
சிறை பிடிக்கும்
துாண்டி முள்ளில்
தொங்கும் மீன்களாய்
துாங்கி கிடப்பேன்!
நீ தொட்டு நட்ட
வாசப் பூக்களின்
வாசல்களில்
வளமாய்
வந்து கிடப்பேன்!
நீ தேசம் கடந்து
துாரம் போன
காலங்களில்
முற்றும் துறந்த முனிவனாய்
தியானித்திருப்பேன்!
நீ முத்தம் கொடுத்து
இச்சை தீர்த்த
ஆசைகளை
பிச்சை வேண்டுபவனாய்
யாசித்திருப்பேன்!
நீ மரித்து புதைந்து
மண் சுமக்கும்
மயான பூமியில்
நிழல் தரும் மரமாய்
நின்றிருப்பேன்!
நீ சொல்லாமலே சென்ற
சொர்க்கலோக
வாசல்படிகளில்
கால் செருப்பாய்
காத்துக் கிடப்பேன்!
க.அழகர்சாமி,
கொச்சி.