
ஆரோக்கியமாக இருக்க கடைப்பிடிக்க வேண்டியவை...
* காலையிலும், இரவு உணவுக்கு முன், கட்டாயம் மலம் கழிக்க வேண்டும். கண்ட நேரத்தில் கழிப்பது, மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்
* காலை, மாலை இருவேளை குளிக்கலாம். மழைக்காலங்களில், காலையில் குளித்தால் போதும்
* ஊற வைத்த வெந்தயத்தை, சிறுவர்கள் - ஒரு ஸ்பூன், பெரியவர்கள் - இரண்டு ஸ்பூன், வெறும் வயிற்றில் மென்று விழுங்க, சர்க்கரை நோயும், ரத்தக் கொதிப்பும் வராமல் கட்டுக்குள் இருக்கும்
* காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன், தோல் நீக்கிய இஞ்சித் துண்டை சாப்பிடலாம். இது, கொழுப்பை குறைக்கும், தொப்பையைக் கரைக்கும்
* உணவை நன்றாக மென்று, பொறுமையாக உண்ண வேண்டும்
* மைதா மாவில் செய்யப்பட்ட பரோட்டா, வாழ்நாளைக் குறைக்கும். குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்
* 'பிராய்லர்' கோழிக்கறி வேண்டாம். மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடலாம். மது, புகை கூடாது
* மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன், சுக்கு காபி சாப்பிடுவது நல்லது
* உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன், அடுத்த திட உணவு கூடாது
* பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லேட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம் மற்றும் சோற்றுக்கற்றாழையை சுத்தம் செய்து, தேன் கலந்து தினமும் சாப்பிடலாம்
* 'பயோட்டின் - எச்' வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகம் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான் மற்றும் மோர் தினமும் எடுத்துக் கொள்வது நல்லது
* காலை அல்லது மாலை, ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்
* இரவு, 11:00 மணி முதல், காலை, 5:00 மணி வரை, கட்டாயம் உறங்க வேண்டும்
* குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப் பிரியமா... வேர்க்கடலை, பேரீச்சம்பழத்தை தினமும், தின்பண்டங்களாக கொடுக்கலாம். கீரையை, வாரம் மூன்று முறை பருப்புக் கூட்டாகவும்; கேழ்வரகை, சேமியா, கொழுக்கட்டை மற்றும் ரொட்டியாக, வாரம் இருமுறை கொடுக்கலாம். ஆப்பிள், ஆரஞ்சை விட, பப்பாளி, கொய்யாவில் சத்துக்கள் அதிகம். தினமும் சாப்பிடக் கொடுக்கலாம்
* மனைவியின் ஆரோக்கியத்தின் மீது, அதிக அக்கறை கொண்டவரா... மண் சட்டியும், இரும்பு கடாயும், மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கிக் கொடுக்கலாம். தினமும், பேரீச்சம்பழம் சாப்பிடக் கட்டாயப்படுத்தலாம். கருப்பு அரிசி, கருப்பு எள், கருப்பட்டி, கருப்பு உளுந்து மற்றும் மண் பானை தண்ணீர் குடிக்க வலியுறுத்தலாம்
* கணவர் மீது அதிக அக்கறையுள்ள மனைவியா... 'பிரிஜ்'ஜில் வைத்த குழம்பு மற்றும் மாவு வகைகளை சாப்பிட கொடுக்க வேண்டாம். சோம்பு, சீரகத் தண்ணீர் குடிக்கக் கொடுக்கலாம்.
முன்னோர் பயன்படுத்திய உணவுப் பழக்கங்களை முடிந்த அளவிற்கு பயன்படுத்துவோம். இழந்த ஆரோக்கியத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும், 50 சதவீத ஆரோக்கியத்தை மீட்டெடுக்க, நம் முன்னோர் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவதன் மூலம் சாத்தியமாகும்.
தொகுப்பு: ஜோ.ஜெயக்குமார்