
அன்புள்ள அம்மாவுக்கு —
தென் மாவட்டத்தை சேர்ந்தவள். வயது, 29, படிப்பு, எம்.காம்., சென்னையில் வேலை கிடைக்கவே, மகளிர் விடுதியில் தங்கியுள்ளேன். பெற்றோர், சொந்த ஊரில் உள்ளனர். நான் ஒரே பெண். பார்க்க சுமாராக தான் இருப்பேன்; நிறமும் குறைவு. எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர், என் பெற்றோர்.
வரும் வரன்கள் அனைத்துமே, என்னை விட குறைவாக படித்தவர், கறுப்பானவர், பெட்டிக் கடை வைத்திருப்பவர், 'கூரியர்' அலுவலகத்தில் பணிபுரிபவர், பல்பொருள் அங்காடியில், 'சூப்பரவைசராக' இருப்பவராகவே வந்தன. இதில், யாரையாவது தேர்ந்தெடுக்க சொல்லி வற்புறுத்தினர்.
'எம்.காம்., படித்து, நல்ல வேலையில் இருக்கும் எனக்கு, இப்படிப்பட்டோரை திருமணம் பண்ணிக்க சொல்றீங்களே...' என்று சண்டை போட்டேன்.
'உன் மொகரைக்கு இவன்கள் கிடைக்கிறதே பெரிய விஷயம்; ஏழு கழுதை வயசாச்சு...' என்று பெற்றோரே சொல்ல, நொந்து போனேன்.
மேற்கூறிய வரன்களை இளக்காரமாகவோ, தாழ்வானவராகவோ நினைக்கவில்லை. அதற்காக, சற்றும் பொருந்தாத, என் மனதுக்கு ஒத்து வராத வரனை, எப்படி ஏற்க முடியும்.
மனக்கசப்போடு ஒருவனை கைப்பிடிப்பதை விட, திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.
என் முடிவு சரிதானா... தகுந்த ஆலோசனை தாருங்கள் அம்மா.
— இப்படிக்கு, உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
முதுகலை பட்ட படிப்போ, இளங்கலை பட்டப் படிப்போ முடித்து, அரசு வேலை கிடைக்காமல், பெட்டிக்கடை வைத்து, தினம், 2,000 ரூபாய் லாபம் சம்பாதிக்கும் இளைஞர்களை சந்தித்திருக்கிறேன்.
நன்கு பரிச்சயமான பெண்ணின் மகன், பெட்டிக்கடை வைத்திருக்கிறார். நல்ல வருமானம், சொந்தமாக கார் வைத்துள்ளார். தரைதளம், 1,200 சதுரடி, முதல்தளம், 1,200 சதுரடியுடன் கூடிய சொந்த வீடு கட்டியுள்ளார். தாய்க்கு, கழுத்திலும், கையிலும் நகை வாங்கி போட்டு, அழகு பார்க்கிறார்.
'கூரியர்' அலுவலகத்தில் பணிபுரிவோரும், பல்பொருள் அங்காடியில், 'சூப்பரவைசராக' பணிபுரிவோரும், இழிவான வரன்கள் அல்ல. முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் கூடிய தொடர் உழைப்பு இருந்தால், யாரும் வெற்றிக்கொடி நாட்டலாம்.
திருமண வயதை தாண்டி சென்று கொண்டிருக்கிறாய். வயது, 29 ஆகிறது. 'முதுகலை வணிகவியல் படித்த உனக்கு, வேறு முதுகலை பட்டம் பெற்ற மாப்பிள்ளை தான் பொருத்தமாய் இருப்பார்...' என்ற வாதம் சரியானதல்ல.
புற அழகை, படிப்பை, வருமானத்தை வைத்து, வரனை முடிவு பண்ணாதே. திருமண வாழ்க்கை என்பது, இரட்டை மாட்டு வண்டி போன்றது.
தகுந்த வயதில் திருமணம் செய்து கொள்ளாமல், 40 வயதை நெருங்கி விட்டால், தனிமையில் வாடுவாய்; ரயிலை தவற விட்ட பயணி போல் பரிதவிப்பாய். 'கூட்டம் இல்லாத டவுன் பஸ்சில் ஏறுவோம்...' என, டவுன் பஸ்களை தவற விட்டால், கடைசி பஸ்சும் போய், பேருந்து நிறுத்தத்தில் தனி மரமாய் நிற்பாய்.
'எனக்கு தகுந்த வரன் பார்க்க பெற்றோருக்கு தெரியவில்லை...' என, நீ தொடர்ந்து கூறினால், கீழ்க்கண்ட முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
பணிபுரியும் அலுவலகத்தில், உனக்கு பொருத்தமான வரன் இருந்தால், 'மீடியேட்டர்' மூலம் பேசு. மற்ற கிளை அலுவலகங்களில் தகுதியான வரன் இருக்கிறதா என, விசாரி.
தமிழகத்தில், நுாற்றுக்கணக்கான, 'மேட்ரிமோனியல்' அலுவலகங்கள் உள்ளன. அவைகளில் சிறப்பான ஒன்றை தேர்ந்தெடுத்து, உன், 'பயோடேட்டா' மற்றும் குடும்ப பின்னணி, என்னவிதமான மாப்பிள்ளையை எதிர்பார்க்கிறாய் என்ற விபரங்களை பட்டியலிடு.
மூன்று மாதத்தில், 50 - 60 வரன்களை காட்டுவர். உனக்கு பிடித்த வரனை தேர்ந்தெடு. அதை உன் பெற்றோரிடம் தெரிவி, மேற்கொண்டு பேச சொல்.
உன் சொந்த பந்தங்களில், அத்தை மகன், மாமன் மகன் யாராவது இளங்கலை, முதுகலை பட்டம் பெற்று, நல்ல வேலையில் இருந்தால், அவர்களை பரிசீலி.
'மேட்ரிமோனியல்' இல்லாது, சிறப்பான வரன்களை பார்த்துக் கொடுக்கும் மரபு சார்ந்த திருமண தரகர்கள் உள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டு, நீயோ, பெற்றோரோ, தகுந்த வரன்களை கொண்டு வர செல்லலாம்.
திருமணம் என்றவுடன், யதார்த்தத்தை மீறிய கற்பனையில் மிதக்காதே; நிறைய எதிர்பார்க்காதே.
சினிமா படம் எடுப்பதற்கு தான் ஹீரோவை தேட வேண்டும். திருமணத்திற்கு, 'ஈகோ' இல்லாத சராசரி ஆண் போதும். சகிப்புத்தன்மையையும், வளைந்து கொடுக்கும் குணத்தையும், சுயநலமின்மையையும், ஆணுக்கும் - பெண்ணுக்கும் பரிசளிக்கும் ஏற்பாடே, திருமணம்.
சம்சார சாகரத்தில் அனைவரும் மூழ்கி களிப்போமாக!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.