
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நேற்றும், இன்றும், நாளையும்!
கொடிய விஷமுள்ள
பாம்புக்கு
நல்ல பாம்பு
என்று பெயர்...
ஒன்றாகவே விஷம் குடித்து
உயிரை விட்டாலும்
கள்ளக் காதல்
என்பர்...
நேர்மையற்ற
கணக்குகளை எல்லாம்
காந்தி கணக்கு என
சொல்வதுண்டு...
சாகசம் செய்யும்
கலைஞர்களை
கூசாமல், 'டூப்' என்று
பெயரிடுவர்...
இரக்கமின்றி லட்சங்கள்
வாங்கும் கல்வியாளர்களை
கல்வி வள்ளல் என
வணங்குவர்...
பணத்தாசை இல்லாமல்
கடமையை செய்பவரை
பிழைக்கத் தெரியாதவன்
என்பர்...
திரையில் நல்லவராகவே
நடிப்பவர்களை
நல்லவராகவே
நினைப்பர்...
முரண்பாடுகளின்
மொத்த உருவமே
மனிதர்கள் தான்...
நேற்றும், இன்றும், நாளையும்!
சொல்கேளான் ஏ.வி.கிரி,
சென்னை.

