PUBLISHED ON : ஜூன் 16, 2019

நம் மகிழ்ச்சி
தந்தையர்களே
தாய்மார்களே...
நீங்கள் வாழ்ந்த
காலம் வேறு!
நம் பிள்ளைகள் வாழும்
இக்காலம் வேறு
கலாசாரம் வேறு
நாகரிகம் வேறு!
நகராட்சி தண்ணீர் வந்தாலும்,
'கேன் வாட்டர்' தான்
குடிப்பர்
நம் பிள்ளைகள்!
வீட்டில் அறுசுவை
உணவிருந்தும்
'பீட்சா'விற்கு தான்
'ஆர்டர்' கொடுப்பர்!
குறைந்தது, 2 கி.மீ.,
போவதாக இருந்தாலும்
'கால் டாக்சி'யை தான்
அழைப்பர்!
லட்சம் லட்சமாக
பணம் புடுங்கும்
'கான்வென்ட்'டில் தான்
படிப்பர்!
சுக்கு, மிளகில் குணமாகும்
நோய்களுக்கும்
பெரிய மருத்துவமனைகளில்
சிகிச்சை பெறுவர்!
பெரிய பெரிய, 'மால்'களில் தான்
ஆடை வாங்குவர்
பண அட்டையை
தேய்ப்பர்!
எதையும் கண்டும்
காணாமல் இருங்கள்
எதுவும் பேசாதீர்
அறிவுரை கூறாதீர்!
அப்போது தான்
வயதான காலத்தில்
சண்டை சச்சரவின்றி
காலம் தள்ள முடியும்!
பெற்று வளர்த்தது
யாருக்காக...
பிள்ளைகள் மகிழ்ச்சி தானே
நம் மகிழ்ச்சி!
சொல்கேளான் ஏ.வி.கிரி,
சென்னை.
