
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாராட்டுங்கள்!
நடை தவழும் குழந்தையை
நயமாய் பாராட்டுங்கள் - அதன்
நடை வேகம் அதிகரிக்கும்!
கற்பவனின் கற்றலை
கனிவாக பாராட்டுங்கள் - அவன்
கற்கும் வேகம் இரு மடங்காகும்!
கலைஞனின் கலைத்திறனை
கண்ணியமாய் பாராட்டுங்கள் - அவன்
படைப்பாற்றல் பன்மடங்காகும்!
உழைப்பவனின் உடல் உழைப்பை
உயர்வாய் பாராட்டுங்கள் - அவன்
உடல் வலிமை கூடி விடும்!
உறவுகளின் உன்னதத்தை
உண்மையாய் பாராட்டுங்கள் - அவர்களின்
அன்பும், அக்கறையும் அதிகரிக்கும்!
வெட்டியானின் வேலையை
வெட்கமின்றி பாராட்டுங்கள் - அவர் தம்
வேதனைகள் தீர்ந்து விடும்!
எதிராளியின் ஏற்றத்தை
எகத்தாளமில்லாமல் பாராட்டுங்கள் - அவன்
எண்ணத்தில் மாற்றம் வரும்!
உங்களை நீங்களே
உயர்வாய் பாராட்டுங்கள் - உங்கள்
உத்வேகம் எழுச்சி பெறும்!
பாராட்டுங்கள்...
மனமார்ந்த பாராட்டு,
பெறுபவனுக்கு உந்துகோல்!
எஸ்.ஆர். சாந்தி, மதுரை.