
இருபது... இருபது!
பிறக்கும்
இருபது இருபது
மும்மாரி கொடுக்க
முளைப்பாரி எடுக்குமோ...
முயற்சிகள் ஜெயிக்க
முன்மாதிரி படைக்குமோ!
இருபது இருபது
இறகுகள் விரித்து
கனவில் பறக்குமோ...
இருபது இருபது
எனும் அறிவைக் கொடுக்குமோ!
இருபது இருபது
விளையாட்டில் இந்தியா
விஸ்வரூபம் எடுக்குமோ...
விசுவாமித்ர சூளின்
விலா எலும்பு முறிக்குமோ!
இருபது இருபது
ஆணுக்கு பெண்ணை
சமமென ஆக்குமோ...
சமத்துவ எதிரிகட்கு
சமாதி வைக்குமோ!
இருபது இருபது
பெறுவதும், தருவதும்
குறைபடாது நடக்குமோ...
குரோத மனப்பான்மையின்
குடலினைச் சரிக்குமோ!
இருபது இருபது
'இந்தியா... இப்படி' எனும்
அணு விஞ்ஞானி கனவை
அரங்கேற்றி வைக்குமோ...
அறிவியல் ஆபத்துகளை
அடியோடு அழிக்குமோ!
இருபது இருபது
சந்தத்தில் இருப்பதால்
சங்கீதம் இசைக்குமோ...
சரித்திர ஏடுகளைச்
சாலமிட அழைக்குமோ!
இருபது இருபது
நீதியும், நேர்மையும்
கைகோர்த்து நடக்குமோ...
நிழலுலக, 'தாதா'க்கள்
மென்னியை நெரிக்குமோ!
இருபது இருபது
ஆழ்துளை கிணறுகளின்
ஆபத்தை குறைக்குமோ...
அருகாடும் பிள்ளைகள் முன்
வாய் மூடி கிடக்குமோ!
இருபது இருபது
நேசத்தை துாவி
நிம்மதி கொடுக்குமோ...
நித்திரை கெடுக்கின்ற
நீசரை முடிக்குமோ!
இருபது இருபது
வெற்றிக் கொடி நாட்டும்
ஆண்டாய் இருக்கட்டும்...
விண்ணுலக சொர்க்கத்தை
மண்ணுலகம் பார்க்கட்டும்!
வளர்கவி, கோவை.