
ஒவ்வொருவர் நோக்கம் ஒவ்வொரு விதமாக இருக்கும். உயர்ந்தவர்களுக்கோ, அவர்கள் பலவாறாக இருந்தாலும், நோக்கம் ஒன்றாகத்தான் இருக்கும். அனைவரிடத்திலும் அவர்கள், நல்லதை மட்டும் தான் பார்ப்பர்.
பாகவதம் சொன்ன, பாகவதம் கேட்ட இருவர் பற்றிய வரலாற்றை பார்க்கலாம்.
கதாதர பட்டர் என்பவர், பாகவதம் சொல்லிக் கொண்டிருந்தார். உள்ளம் உருக சொல்வதில் திறமைசாலியான அவர், பாகவதம் சொல்லும்போது, அனைவரும் கேட்டு உள்ளம் உருகி மெய்மறந்து கண்ணீர் வடிப்பர்.
துறவி ஒருவரும், தினமும் வந்து, கதாதர பட்டரின் பாகவதத்தை கேட்பதை, வழக்கமாக வைத்திருந்தார். ஆனால், அவருக்கென்னவோ கண்ணீரே வராது.
'அனைவரும் கேட்டு, கண்ணீர் வடிக்கும்போது, எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறது...' என, எண்ணியவர், ஒரு தீர்மானத்திற்கு வந்தார்.
அதன்படி, கதை கேட்க போகும்போது, ஒரு சிறு துணியில், கொஞ்சம் மிளகாய் பொடியை கட்டி எடுத்துப் போனார்.
கதை போக்கில், எல்லாரும் தங்களை மறந்து கண்ணீர் வடிக்கும்போது, மிளகாய் பொடி துணியை எடுத்து, முகத்தை துடைப்பதை போல, கண்களுக்கு
அருகில் எடுத்து செல்வார்.
மிளகாய் பொடி நெடி பட்டு, கண்ணீர் வழியும். நான்கைந்து நாட்களாயின. ஒரு நாள், துறவியின் அருகில் உட்கார்ந்து கதை கேட்டுக் கொண்டிருந்த ஒருவர், அவரின் செயலை பார்த்து விட்டார்.
'ஆகா... கண்ணீர் வரவில்லை என்பதற்காக, இவர், மிளகாய் பொடியால் கண்ணீர் வரவழைத்து கொள்கிறார். நல்ல தந்திரம் இது...' என்று எண்ணினார்; கதை முடிந்ததும், கதாதர பட்டரிடம் போய், தான் கண்டதை அப்படியே விவரித்தார்.
உடனே எழுந்த, கதாதர பட்டர், 'அப்படியா... உடனே அவரை பார்க்க வேண்டும். வாருங்கள்...' என்று, தகவல் சொல்லியவரை அழைத்து, துறவி தங்கியிருந்த இடத்திற்குப் போனார்; அவரது கால்களில் விழுந்து வணங்கினார்.
சற்று பின்வாங்கிய துறவி, 'என்ன இது... என்னை விட மிகவும் பெரியவர் தாங்கள். நீங்கள் போய் என்னை வணங்கலாமா...' என்றார்.
கைகளை கூப்பியபடியே, 'இல்லை சுவாமி... என்னை விட, தாங்கள் தான் பெரியவர். பகவானுடைய லீலைகளையும், குணங்களையும் கேட்டு, எந்த கண்கள் கண்ணீர் வடிக்கவில்லையோ, அவற்றை தண்டிக்க வேண்டும் என்று, பெரியவர்கள் சொல்வர். அதன்படி, மிளகாய் பொடி எடுத்து வந்து, கண்களை தண்டித்துக் கொள்ளும் தாங்கள் தான் உத்தமமான பக்தர்...' என்று, ஆத்மார்த்தமாக சொன்னார், கதாதர பட்டர்.
ஆகையால், யார் யாரிடமோ போய், துயரங்களைச் சொல்லி கண்ணீர் வடிப்பதை விட, ஆண்டவனிடம், கண்ணீர் மல்க நம் துயரங்களை முறையிட்டால், அல்லல்கள் தீரும்.
பி. என். பரசுராமன்