
அன்புள்ள சகோதரிக்கு,
நான், 50 வயது பெண்மணி. படிப்பு: எம்.ஏ., - எம்.பில்., தனியார் நிறுவனத்தில், உயர் பதவியில் இருக்கிறேன். கணவர் வயது: 52, படிப்பு: எம்.ஏ., சுயதொழில் செய்கிறார். பெற்றோர் பார்த்து நடத்திய திருமணம் தான். எங்களுக்கு ஒரு மகன், கல்லுாரியில் படிக்கிறான்.
தற்சமயம், எங்கள் இருவருக்குமே பெற்றோர் இல்லை. உடன் பிறந்தவர்கள் அனைவருக்கும் திருமணமாகி, தனித்தனியாக உள்ளனர்.
திருமணம் ஆனதிலிருந்தே, கணவருக்கு, ஆணாதிக்கம், தாழ்வு மனப்பான்மை மற்றும் 'ஈகோ'வும் அதிகம். அவரது செயல்பாடுகள் மற்றும் பேச்சு அனைத்துமே, என்னை மட்டம் தட்டுவதிலேயே குறியாக இருக்கும். மனைவி என்ற அந்தஸ்தை கொடுக்காமல், சமையல்காரி மாதிரியே நடத்துவார்.
திருமணமாகி, 23 ஆண்டுகள் ஆகின்றன; இதுவரை, ஒருமுறை கூட, அன்பாக ஒரு வார்த்தை பேசியதில்லை. ஆசையாக, ஒரு புடவையோ, நகையோ வாங்கிக் கொடுத்ததில்லை. வெளியூர் மற்றும் சுற்றுலாவுக்கு அழைத்து சென்றதும் இல்லை.
மதுவுக்கு அடிமையானவர். மது அருந்தி விட்டால், வாயிலிருந்து வரும் வார்த்தைகள் படு மட்டமாக, வக்கிரமாக இருக்கும். வெளியாட்கள் முன், தான் ஒரு சிறந்த குடும்ப தலைவனாக இருப்பது போல் வேஷம் போடுவார். ஒரு சின்ன வேலையை கூட சுயமாக, திறமையாக செய்ய தெரியாது. சம்பாதிப்பதை சேர்த்து வைக்கவோ, உருப்படியாக முதலீடு செய்யவோ தெரியாது.
நான் ஏதாவது யோசனை கூறினால், 'நீ ரொம்ப புத்திசாலியா... சமையல் வேலையை மட்டும் பார்...' என்று அலட்சியப்படுத்துவார்.
வீட்டு வாடகை மற்றும் மின்சார கட்டணம், அவர் தான் கட்டுவார். அதற்காகவே, மாத இறுதியில் பொறுப்பாக வேலை செய்வார். அந்த தேவை முடிந்ததும், மீதமுள்ள பணத்தை, மது அருந்தி, வீண் செலவழித்தும், துாங்கியும் பொழுதை கழிப்பார்.
மகன் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து, ஒன்றுக்கும் உதவாதவனாக ஆக்கிவிட்டார். நான் ஏதாவது அறிவுறுத்தினால், மகனும் என்னை எதிர்த்து பேசி, அவர் பக்கம் சேர்ந்து கொள்வான்.
சந்தேக பிசாசு. அலுவலகம் செல்லும்போது, யாரையாவது பின்தொடர வைத்து, என்னை கண்காணிக்க சொல்வார். அப்படி ஒருமுறை என்னை கண்காணித்தவர், எனக்கு அறிமுகமானவர் தான். என் கண்ணில் பட்டுவிட, என்ன என்று விசாரிக்கும்போது, தட்டுத்தடுமாறி முன்னுக்கு பின் முரணாக பேசி, உளறி கொட்டி, மாட்டிக் கொண்டார். அதிலிருந்து, அந்த பழக்கத்தை விட்டார், கணவர்.
திருமணமான புதிதில், என் சம்பள பணத்தை கொடுப்பேன். அவர் முழு சோம்பேறியாகி, மதுவுக்கும், நண்பர்களுக்கு செலவிடுவதை அறிந்து, பணம் கொடுப்பதை நிறுத்தினேன்.
தன் உடன் பிறந்தவர்களிடம், என்னை பற்றி குறை கூறி, 'நடுவில் வந்த உறவு நடுவிலேயே போகட்டும். நாம் தான் நிரந்தரம். இவளுக்கு எதற்கு செலவு செய்யணும்...' என்று, மனம் நோகும்படி பேசுவார். என் வீட்டினர் யாராவது வந்தால், 'நான் யார் வீட்டுக்காவது போகிறேனா... எதுக்கு என் வீட்டுக்கு வரணும்...' என்று கேவலமாக பேசுவார். இதன் காரணமாக யாரும் வரமாட்டார்கள்.
குடும்ப நண்பர் ஒருவரின் மனைவியுடன் பழக்கம் வைத்திருந்தார். அப்பெண்மணியின் கணவர், ஒருமுறை, என்னுடன் அதேபோல் பேசி, பழக முயற்சி செய்தபோது, செருப்பால் அடிக்காத குறையாக துரத்தியடித்தேன்.
திருமணமான ஓரிரு மாதம் தவிர, இன்று வரை வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் உட்பட அனைத்துக்கும், நான் தான் செலவு செய்கிறேன். நிலைமை இப்படியிருக்க, 'மூன்று வேளை சோறு போட்டு, பங்களாவில் தங்க வைத்துள்ளேன்...' என்று எகத்தாளமாக பேசுவார்.
நான், பார்ப்பதற்கு லட்சணமாக இருப்பேன். 'நீட்'டாக உடை உடுத்துவேன். ஆனால், 'உன் மனைவி அழகாக இருக்கிறாள்' என, இவரது நண்பர்கள் யாரும் கூறவில்லை என்பதற்காக, சண்டை போடுவார்.
வீட்டில் நிம்மதியோ, அமைதியோ இல்லை. நம்மை விட கஷ்டப்படுகிறவர் நிறைய பேர் இருக்கின்றனர் என்று, முன்பெல்லாம், என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்வேன். ஆனால், இப்போதெல்லாம் எதையுமே தாங்கிக்கொள்ள இயலவில்லை. வெற்று வாழ்க்கை வாழ்வது போல் தோன்றுகிறது.
தன்னம்பிக்கையும் குறைந்து வருகிறது. எதிர்காலம் ரொம்பவே பயமுறுத்துகிறது. இதிலிருந்து மீள்வது எப்படி சகோதரி.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரி,
திருமணமான ஆண்களை தொற்றிக் கொள்ளும் கெட்ட பழக்க வழக்கங்களில், பத்தில் எட்டு, உன் கணவரிடம் இருக்கின்றன. கணவரை விட அதிகம் படித்திருக்கிறாய். தனியார் நிறுவனத்தில், நிரந்தர பணியில் இருக்கிறாய். உன் கணவர், சுயதொழில் செய்கிறார்.
தெளிவான திட்டமிடலும், தொடர் கடின உழைப்பும், முறையாக கணக்கு வழக்கு பார்த்தலுமே சுய தொழிலில் மிகப்பெரிய வெற்றியை தரும். சுயதொழில் செய்யும் பலர், தினமும் வரும் வருமானத்தை தாறுமாறாய் செலவு செய்து, முதலுக்கு மோசம் செய்து விடுகின்றனர்.
ஊளை முட்டையினுாடே இருக்கும் நல்ல முட்டை கெட்டு விடுவது போல, அழுகிய தக்காளிகளுக்கிடையே இருக்கும் நல்ல தக்காளி அழுகி விடுவது போல, துர் நடத்தை உள்ள தந்தையின் அருகாமையில் இருந்த உன் மகனும், கெட்டு குட்டிச்சுவர் ஆகியுள்ளான்.
மகளை பெற்றிருந்தால், உன் கணவர் ஓரளவு திருந்தியிருப்பார். தங்கையோ, அக்காவோ இருந்திருந்தால், மகன் ஓரளவு பொறுப்புணர்வுடன் காண கிடைத்திருப்பான்.
இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா...
* மகனை, உண்டு உறைவிட கல்லுாரியில் சேர்த்து படிக்க வை. தந்தையின் சகவாசம் இல்லாமல், அவன் வெளி உலகை தெரிந்து கொள்ளட்டும். மூன்று ஆண்டுகள், மகன், உண்டு உறைவிட கல்லுாரியில் தங்கி படித்து வந்தால், உனக்கும், கணவருக்கும் சேர்த்தே அறிவுரை கூறுவான்
* கணவரை தனிமையில் அழைத்து, 'நாம் இருவரும், 50 வயதை தாண்டி விட்டோம். இனி, நமக்காக வாழாது, மகனுக்காக வாழ்வோம். தாழ்வு மனப்பான்மையும், உயர்வு மனப்பான்மையும் இல்லாமல் இயல்பாய் இருங்கள். உங்கள் சுயதொழிலின் தினசரி கணக்கு வழக்கை, அன்றைய இரவே சரி பாருங்கள். குடி பழக்கத்தை அறவே நிறுத்த முடியாவிட்டால், மாதம் இருமுறை குடியுங்கள்.
'கல்லுாரியில் படிக்கும் மகனை வைத்துக்கொண்டா, தடம் புரள்வேன். என் மீதான வீண் சந்தேகத்தை நிறுத்திக் கொள்ளுங்கள். இருதரப்பு சொந்த பந்தங்கள் வந்தால், முகம் சுளிக்காமல் விருந்துபசரிக்க கற்றுக் கொள்ளுங்கள். யாரிடமும் என்னை பற்றி குறை பேசாதீர்.
'இவ்வளவு ஆண்டுகள், மனம் விரும்பிய விதங்களில் எல்லாம் வாழ்ந்தீர். இனி, மகனின் எதிர்காலத்துக்காக, ஒரு சைவ வாழ்க்கை வாழ பாருங்கள். நீங்கள் திருந்தவே மாட்டேன் என, பிடிவாதம் பிடித்தால், உங்களிடமிருந்து விவாகரத்து பெற்று, நானும், மகனும் சுதந்திர காற்றை சுவாசிப்போம். எப்படி, உங்கள் வசதி...' எனக் கேள்
* ஒரு ஐந்தாண்டு திட்டத்தை யோசி. அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்குள் சொந்தமாய் வீடு கட்டி குடி போ. மகனின் படிப்பை முடித்து, வேலைக்கு அனுப்பி, திருமணம் செய்து வை
* இருபது ஆண்டுகள், கணவர் குட்ட குட்ட குனிந்து விட்டாய். இப்போது உன் முறை, திருப்பி வேகமாக தாக்கு. இரு கைகளையும் உயர்த்தி, சரணாகதி அடைந்து விடுவார், உன் கணவர்
* முழு உடல் பரிசோதனை செய்து கொள். யோகா வகுப்புக்கு போ. வாரா வாரம் கோவிலுக்கு சென்று, மன ஆறுதல் பெறு. உபயோகரமான பொழுதுபோக்குகளில் ஈடுபடு. மகனுக்கு, தொடர்ந்து, திருக்குறள் அளவு, அறிவுரைகளை கூறு
* தமிழகத்தில் உன்னை போல லட்சக்கணக்கான மனைவியர் உள்ளனர். பிரச்னையை தீர்க்க பார். கணவரும், மகனும் திருந்தாவிட்டால், உன் சுயத்தை பாதுகாத்துக் கொள். எல்லாவற்றுக்கும் இறைவன் போதுமானவன்.
- என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.