
உழைப்பால் வாழ்க்கை இனிக்கிறது!
அன்பும், கோபமும்
எல்லாரிடமும் இருக்கிறது
ஏழைகளிடம் காட்டுவதற்கே
அன்பு என்று பெயர்!
பாசமும், வெறுப்பும்
எல்லாரிடமும் இருக்கிறது
அனாதைகளிடம் காட்டுவதற்கே
பாசம் என்று பெயர்!
பணமும், நேசமும்
எல்லாரிடமும் இருக்கிறது
பணியாளரிடம் காட்டுவதற்கே
நேசம் என்று பெயர்!
அறிவும், அடக்கமும்
எல்லாரிடமும் இருக்கிறது
முதலாளியை மதிப்பதற்கே
அடக்கம் என்று பெயர்!
உழைப்பும், திறமையும்
எல்லாரிடமும் இருக்கிறது
உச்சத்தை தொடுவதற்கே
திறமை என்று பெயர்!
இன்பமும், துன்பமும்
எல்லாருக்கும் இருக்கிறது
துன்பத்தை மறைப்பதற்கே
இன்பம் என்று பெயர்!
இல்லறமும், துறவறமும்
எல்லாருக்கும் தெரிகிறது
இருப்பதை இழப்பதற்கே
துறவறம் என்று பெயர்!
ஆசையும், பொறாமையும்
எல்லாரிடமும் இருக்கிறது
அடைய முடியாததற்கே
பொறாமை என்று பெயர்!
தீமை, நன்மை
எல்லாரிடமும் இருக்கிறது
தீமையை மறப்பதற்கே
நன்மை என்று பெயர்!
எண்ணம், மனம்
எல்லாரிடமும் இருக்கிறது
குறைகளை களைவதற்கே
மனம் என்று பெயர்!
தோல்வியும், வெற்றியும்
எல்லாருக்கும் இருக்கிறது
தவறுகளை ஒழிப்பதற்கே
வெற்றி என்று பெயர்!
வரவும், செலவும்
எல்லாருக்கும் இருக்கிறது
வரவை பெருக்கும் உழைப்பால்
வாழ்க்கை இனிக்கிறது!
பாரதி சேகர், சென்னை.