sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கேள்வியும், பதிலும்!

/

கேள்வியும், பதிலும்!

கேள்வியும், பதிலும்!

கேள்வியும், பதிலும்!


PUBLISHED ON : பிப் 02, 2020

Google News

PUBLISHED ON : பிப் 02, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தெய்வத்திடம் முழுமையான சரணாகதி, தெய்வீக அனுபவம் என்பவையெல்லாம் சொல்லால் விளக்க முடியாதவை. அனுபவத்தில் வந்தாலொழிய ஆண்டவனை உணர, மனம் மறுக்கும். மிகவும் உயர்ந்த ஞானிகள், தெய்வத்தை எப்படி அனுபவித்தனர், வெளிப்படுத்தினர் என்பதைப் பார்த்தால், உண்மை விளங்கும்.

மகா ஞானியான ஒருவர், ஏதோ ஒரு சிறு தவறு செய்ததால், மீண்டும் மனிதனாக பிறவியெடுக்க வேண்டி வந்தது; மனிதனாகப் பிறந்தாலும், அவருக்குப் பூர்வ ஜென்ம நினைவு இருந்தது. அதன் காரணமாக, அவர் சிறு வயதிலேயே தெய்வ சிந்தனையுடன் இருந்தார்.

ஒருநாள், ஞானச்சிறுவன் என அழைக்கப்பட்ட அவர், மண்ணில் புரண்டு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்தப் பக்கமாக வந்த மன்னர், 'ஏனப்பா... இப்படி மண்ணில் புரண்டு விளையாடுகிறாய்...' என்று கேட்டார்.

'இந்த உடம்பு, மண்ணால் ஆனது தானே... எப்படியும் மறுபடியும் மண்ணுக்குள் தான், போகப் போகிறது. அப்படி இருக்கும்போது, மண்ணில் புரண்டு விளையாடினால் என்ன...' என, பதில் சொன்னார், ஞானச்சிறுவன்.

மன்னருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

'சிறுவனே... நீ என்னுடனேயே இருக்க சம்மதமா...' என, கேட்டார்.

'இருப்பேன்; நான்கு விதமான கட்டுப்பாடுகளுக்கு, நீங்கள் சம்மதித்தால், நான் உங்களுடன் இருப்பேன்...' என்றார்.

மன்னரின் மகிழ்ச்சி அதிகமானது.

'கட்டுப்பாடுகள், அதுவும் நான்கு... என்ன அது, சொல்...' என்றார்.

'நான் துாங்கும்போது, நீங்கள் துாங்கக் கூடாது; விழித்திருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும். நான் சாப்பிட்டால், நீங்கள் சாப்பிடக் கூடாது. நான் ஆடை உடுத்திக் கொள்வேன்; ஆனால், நீங்கள் எதுவும் உடுத்திக் கொள்ளக் கூடாது. நான்காவதாக, நான் எங்கு சென்றாலும், நீங்களும் என்னுடன் வர வேண்டும்...' என்றார், ஞானச்சிறுவன்.

குழம்பினார், மன்னர்.

'இது எப்படி சாத்தியமாகும்... நீ சொல்லும் கட்டுப்பாடுகள், வேடிக்கையும், விசித்திரமுமாக இருக்கின்றன; எப்படி நடைமுறைப்படுத்த முடியும்...' என, கேட்டார்.

'ஏன் முடியாது, மன்னா... நான் துாங்கினால், என் தெய்வம் துாங்காது; விழித்திருந்து என்னைக் காக்கும். நான் உண்டால், அவர் எதுவும் உண்ண மாட்டார். நான் ஆடை அணிந்தால், அவர் எதுவும் அணிய மாட்டார்; எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் இறைவனுக்கு, எப்படி ஆடை அணிவிக்க முடியும். நான் எங்கு போனாலும், கடவுள் என் கூட வருவார்...' என்ற ஞானச்சிறுவன், சற்று நிறுத்தினார்.

மன்னரின் மன உருக்கம், அவர் முகத்தில் தெரிந்தது.

ஞானச்சிறுவன் தொடர்ந்தார்...

'மன்னா... அப்படி எல்லா விதங்களிலும் என்னுடன் இருக்கும் தெய்வத்தை விட்டு விட்டு, நான் எதற்காக உங்களுடன் வர வேண்டும்...' என, கேட்டார்.

அவரை உள்ளன்போடு வணங்கிய மன்னர், அங்கிருந்து திரும்பினார்.

எதற்கும் ஆசைப்படாமல், மன்னரிடமிருந்தே அழைப்பு வந்தும், அதை ஒதுக்கித்தள்ளி, மன நிறைவோடு வாழ்ந்து, தெய்வம் தன்னுடன் இருப்பதை உணர்ந்த ஒரு ஜீவனின் வரலாறு இது.

பி. என். பரசுராமன்






      Dinamalar
      Follow us