sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : பிப் 02, 2020

Google News

PUBLISHED ON : பிப் 02, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்பு சகோதரிக்கு -

என் வயது: 43, கணவரின் வயது: 48. சொந்த தொழில் செய்கிறார், கணவர். எங்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் என, இரு குழந்தைகள்.

பொறுப்பான அம்மாவாக அத்தனை கடமைகளையும் செய்து வருகிறேன். கணவரும் எங்கள் மீது அன்பும், ஆதரவுமாக இருக்கிறார்.

என் மகள், படிப்பு, விளையாட்டு என, சகலத்திலும் கெட்டிக்காரி. உறவினர்கள் மத்தியிலும் அவள் ஒரு ராஜகுமாரியாகவே வலம் வந்தாள். 18வது வயதில், அவளை, புற்றுநோய் தாக்கியபோது, துடித்துப் போனோம்.

புற்றுநோயின் தீவிரத்தால் அலறி துடிப்பவளை பார்த்து, ரத்தக் கண்ணீர் வடித்தோம்.

அவளை எப்படியாவது காப்பாற்ற எண்ணி, நகை, வீடு என, அனைத்தையும் அடமானம் வைத்து, வைத்தியம் செய்தோம். முதல் கட்ட சிகிச்சையில், புற்றுநோய் கட்டியை அகற்றி, அவளை குணப்படுத்தினோம்.

சிகிச்சைக்கு பின், சில நாட்கள் நன்றாக இருந்தாள். ஆனால், வேகமாக பரவிய புற்றுநோய் அவளை அரிக்க ஆரம்பித்தது. 'எங்கள் வீட்டு ராஜகுமாரி' என்று கொண்டாடிய உறவினர்கள் விலகினர். தன்னை சுற்றி நடப்பவற்றை கண்டு, மனதளவில் ஒடுங்கினாள், மகள்.

புற்றுநோய் முழுதாய் அவளை ஆட்கொள்ள, எங்கள் கண் முன்பாகவே வலியால் துடித்து, கொஞ்ச கொஞ்சமாய் அடங்கினாள்.

அவளது இழப்பை தாங்க முடியாமல், குடும்பமே நிலை குலைந்தது. வீடெங்கும் அவள் குரல் ஒலிப்பது போலவே இருக்கிறது. வேறு ஊருக்கு சென்று விடலாம் என்றால், மகனின் பிளஸ் 2 படிப்பு தடை போடுகிறது.

மகளின் இழப்பை தாங்க முடியாமல், தற்கொலை எண்ணம் தலை துாக்குகிறது. கணவரும், தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கிறார்.

இந்த சோகத்தின் கோரப்பிடியிலிருந்து மீண்டு வர, நல்ல வழி சொல்லுங்கள் சகோதரி.

இப்படிக்கு,

உங்கள் சகோதரி.


அன்பு சகோதரிக்கு —

உன் மகள் இறந்ததற்கு, என் ஆழ்ந்த இரங்கல்கள். அவளது ஆன்மா சாந்தியடைய, இறைவனை பிரார்த்திக்கிறேன், சகோதரி.

மனித வாழ்க்கை அநித்தியமானது. நாமெல்லாம் நாளை மரணிக்கப் போகும், நடமாடும் பிணங்கள். நேற்று உன் மகள். இன்று யாரோ, நாளை நாம். அனைவருமே இப்பூமியின் வழிப் போக்கர்கள்.

உன் மகள் இறந்தாலும், அரூப வடிவில் உன் வீட்டை சுற்றி சுற்றிதான் வருவாள் என நம்புகிறேன். இறந்தவளை நினைத்து, அழுது அழுது, உன் குடும்பத்தை பாழ்படுத்திக் கொள்ளாதே.

இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா...

* உன் முழு கவனத்தையும், கணவர் மற்றும் பிளஸ் 2 படிக்கும் மகன் மீது திருப்பு. கணவருக்கும், மகனுக்கும் நீ ஆறுதலாய் இரு. அவர்கள், உனக்கு ஆறுதலாய் இருக்கட்டும். மகனின் எதிர்காலம் சிறப்பாக அமைய பாடுபடு. மகனின் படிப்பு, அதன் பின், வேலை, அவனுக்கு தகுந்த பெண்ணை பார்த்து திருமணம்- என, உன் அடுத்த, 10 ஆண்டுகளை திட்டமிடு

* மகளின் நினைவுநாளில் புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு சென்று, அங்குள்ள நோயாளிகளுக்கு ஆறுதல் கூறு. உன்னால் முடிந்தளவு பொருளுதவியை புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு செய்

* நண்பர்களிடையேயும், உறவினர்களிடையேயும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கு. எவ்வகை புற்றுநோயாக இருந்தாலும் ஆரம்ப நிலையில் இருந்தால், தகுந்த சிகிச்சை செய்து குணப்படுத்தி விடலாம் என்கிற உண்மையை பரப்பு

* இறைவனிடம் அவநம்பிக்கை கொள்ளாதே. மனித வாழ்க்கையில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுகளுக்கும், நமக்கு புரிபடாத ஒரு அர்த்தம் இருக்கும் என நம்பு. 'மகனுக்காவது நீண்ட ஆயுளை கொடு இறைவனே...'- என, வேண்டு

* காலமும், மறதியும், துக்கங்களுக்கான சிறந்த மருந்துகள். மகளின் மரணத்தையே சதா அசை போடாமல், நினைவுகளிடமிருந்து சற்றே விலகி நில்

* இசை கேள். வீட்டை சுற்றி தோட்டமிடு. வீட்டில் பூனை, நாய் அல்லது கிளி வளர். வாரா வாரம் கோவிலுக்கு போய் கதாகாலட்சேபங்கள் மற்றும் உபன்னியாசங்கள் கேள்

* மகனின் படிப்புக்கும், கணவரின் தொழிலுக்கும், இடமாற்றம் பாதிக்க செய்யும் என்றால், அதை தவிர்

* புற்றுநோய் தொற்று நோயல்ல, மகனையும் பீடித்து விடுமோ என, வீண் பயம் கொள்ளாதே

* அக்காவுக்கோ, தங்கைக்கோ மகள்கள் இருந்தால், வீட்டில், 15 நாள், ஒரு மாதம் தங்க வைத்து விருந்துபசரித்து அளவளாவு

* மகள் கட்டாயம் தேவை என்றால், சட்டப்படி ஒரு பெண் குழந்தையை தத்தெடு. எல்லாம் கடந்து போகும் சகோதரி.

-— என்றென்றும் தாமையுடன்

சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us