
இன்புற்றிருப்போம்!
இதய வாசலை
எப்போதும் திறந்தே வைத்திருங்கள்
எதிரியாய் வருபவர்களும்
கொஞ்சம் இளைப்பாறிச் செல்லட்டும்!
இன்ப நாடகத்தை
எப்போதும் நடத்திக் கொண்டேயிருங்கள்
துன்பத்தோடு வருபவர்களும்
கொஞ்சம் தொலைத்து விட்டு செல்லட்டும்!
அன்பு வார்த்தைகளை
எப்போதும் அளித்துக் கொண்டேயிருங்கள்
அம்பெடுத்து வருபவர்களும்
கொஞ்சம் அயர்ந்து செல்லட்டும்!
வாசப் பூக்களை
எப்போதும் வீசிக் கொண்டேயிருங்கள்
வஞ்சனையோடு வருபவர்களும்
கொஞ்சம் வாசமெடுத்து செல்லட்டும்!
பாசப் பார்வையை
எப்போதும் பூசிக் கொண்டேயிருங்கள்
வேஷமிட்டு வருபவர்களும்
கொஞ்சம் விழுந்து விட்டு செல்லட்டும்!
பொறுமை பந்தலை
எப்போதும் போட்டுக் கொண்டேயிருங்கள்
பொறாமையில் வருபவர்களும்
கொஞ்சம் பெருமை பேசி செல்லட்டும்!
நல்ல நட்பை
எப்போதும் நல்கி கொண்டேயிருங்கள்
நன்றி மறந்தவர்களும்
கொஞ்சம் நண்பர்களாகி செல்லட்டும்!
இன்று போலவே என்றும்
நல் எண்ண விதைகளை
நடை பாதையெல்லாம் நட்டு வையுங்கள்
நாளைய உலகம் நந்தவனமாகட்டும்
நாம் இன்புற்றிருப்போம்
இனிய உறவுகளால் என்றென்றும்!
அ.ரேவந்த், கொச்சி.

