
எழுத்தாளர் பாரதிகாந்தன் எழுதிய, 'தீரர் சத்தியமூர்த்தி' நுாலிலிருந்து: தமிழக காங்கிரசின் ஒரே பேச்சாளர், தீரர் சத்தியமூர்த்தி என, அந்த காலத்தில் காங்கிரசார் அழைப்பர். அந்த அளவுக்கு பேச்சாற்றல் மிக்கவர்.
சத்தியமூர்த்தியின் பேச்சை கண்டு வியந்த, காந்திஜி, 'காங்கிரஸ் கட்சியின் சார்பில், சத்தியமூர்த்தி ஒருவர் மட்டுமே சட்டசபைக்கு போனால் போதும்...' என, பொதுக்குழுவிலேயே கூறினார்.
வட்டமேஜை மாநாட்டிற்கு, காந்திஜியுடன், சத்தியமூர்த்தியும் சென்றிருந்தார். காந்திஜியின் ஆடை, தோற்றம் கண்டு அங்கிருந்த சில வெள்ளையர்கள், 'அரை நிர்வாண பக்கிரி...' என, கேலி செய்தனர்.
அருகில் இருந்த, சத்தியமூர்த்திக்கு கோபம் வந்துவிட்டது...
'உங்களின் முழு ஆடை கயவாளித்தனத்தை விட, எங்களுடைய அரை ஆடை பக்கிரித்தனம் மேலானது...' எனக்கூற, கிண்டலடித்தவர்கள், வாய் மூடி மவுனமாயினர்.
ஒருமுறை, அயர்லாந்து சென்றபோது, அங்கு, ஒரு பொது கூட்டத்தில் பங்கேற்றார், சத்தியமூர்த்தி. இந்தியாவிற்கு சுயராஜ்யம் எத்தனை முக்கியம் என்பது பற்றி பேசினார்.
கூட்டத்தின் மத்தியிலிருந்து ஒரு வெள்ளைக்காரன், 'இந்தியாவில் ஒற்றுமை உண்டா... அங்கு தான் வகுப்பு கலவரங்கள் நடக்கின்றனவே...' என, குரல் கொடுத்தான்.
உடனே, சத்தியமூர்த்தி, 'அப்படியே வைத்துக் கொண்டாலும், இறைவன், ஆங்கிலேயனை எப்போது சிறப்பு போலீஸ்காரனாக நியமித்தான் என்பது தான் தெரியவில்லை...' எனக்கூற, குரல் கொடுத்தவன், 'கப்சிப்!'
ஒருமுறை, சட்டசபையில், காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த தீர்மானம் ஒன்றை விளக்கிக் கொண்டிருந்தார், சத்தியமூர்த்தி. அந்த தீர்மானம், ஆங்கிலேய அரசின் அடக்குமுறை சட்டங்களை நீக்குவது குறித்தானது. கடும் விவாதம் நடந்தது.
அப்போது, இந்திய உறுப்பினர், என்.என்.சர்க்கார் இடைமறித்து, 'பதவி என்று வந்தால், நீங்களும், மாறித்தான் போவீர்கள்...' என்றார்.
இதை ஆட்சேபித்து, 'தனிப்பட்ட முறையில் தாக்குவது, இங்கே மிகுந்து வருகிறது...' என்றார், அவைத் தலைவர்.
உடனே, 'தாக்கட்டும் தாக்கட்டும்; அவர், தாக்குவதை நான் பொருட்படுத்துவது இல்லை...' என்றார், சர்க்கார்.
'அப்படியானால், நான் பேச்சை நிறுத்திக் கொள்கிறேன். அவர், கொஞ்சம் சூடு உள்ளவர் என்று தான், இவ்வளவு நேரமும் பேசினேன். அது, அவருக்கு இல்லையென்றால், நான் பேசி என்ன பயன்...' எனக்கூறி அமர்ந்து விட்டார், சத்தியமூர்த்தி.
மு.வரதராசனார் எழுதிய, 'அறிஞர் பெர்னார்ட்ஷா' நுாலிலிருந்து: 'நான், ஷாவை போல் நாத்திகன்...' என்று, சொல்லிக் கொள்வர், பலர். உண்மையாகவே சமயப் பற்றுடையவர், ஷா. ஆனால், அவருடைய சமயம் தனிப்பட்டது. இயற்கையையே சமயமாக கொண்டவர்.
வாழ்க்கையில் அழியாமல் விளங்கி, எல்லாரையும் இயக்கும் சக்தி ஒன்று உண்டு என்பதை, 'மனிதனும் உயர்நிலை மனிதனும்' மற்றும் 'திரும்பவும் மெதுசெலாவுக்கு' எனும் நாடகத்தில் வலியுறுத்தியுள்ளார், பெர்னார்ட்ஷா.
ஆக, ஒரு சக்தி உண்டு என்பது, அவர் வாதம்.
நடுத்தெரு நாராயணன்

