PUBLISHED ON : மார் 22, 2020

அ நிறம் | அளவு
உன்னை பார்க்கும் மழை!
சடசடவென்று முற்றத்தில்
வந்து விளையாடும் மழை
முதலில் உன்னைத்தான் பார்க்கிறது!
காற்றின் கரம் பிடித்து
ஜன்னல் அருகே வந்தமரும்
மரமல்லியின் கண்கள்
தேடுவது உன்னைத்தான்!
குளிர் மழையில் குணுகுணுக்கும்
புறாக்களின் கதையிலும்
நீதான் மையப் புள்ளி!
விலாசம் தொலைத்து
வீட்டிற்குள் நுழைந்த
வண்ணத்துப் பூச்சியும்
தேன் சொட்டலாய் பார்க்கிறது
உன்னையே மரபு மீறி!
கிணற்றடியில் கீச்சிடும் அணில்களும்
தங்கள் மொழியில்
உன்னைப் பற்றியே பேசி
ஆவலை தீர்த்துக் கொள்கின்றன!
நான் என்ன செய்வது...
உனக்கு சுற்றி போடவா
அன்றி உன்னைச் சுற்றும்
எல்லாவற்றுக்கும்
ஒரு சூட்டுக்கோல் வைக்கவா!
இ.எஸ்.லலிதாமதி, சென்னை.
