
வீழ்வேனென்று நினைத்தாயோ!
தாய் மொழியும், தமிழ் மொழியும் உணர்வில் கலந்திட
முதுகெலும்பான விவசாயம் சுவாசம் தர
தாய் பாசமும், தாய் மண்ணும் உரம் கொடுக்க
வீரமும், விவேகமும் பக்கபலமாய் நிலைத்திட...
போராடும் குணமும், மனிதநேயமும் மலர்ந்திட
உழைப்பின் வேகம் மூலதனமாய் முன்செல்ல
ஆக்கப் பாதையே எதிர்கால தேடலாய்
வீழ்வேனென்று நினைத்தாயோ; துளியும் இல்லை!
காதலும், கனிவும் மனதில் வெளிப்பட
சரித்திரமும், சாதனையும் வழி காட்டிட
எண்ணத்தில் என்றும் துாய்மை நிலவிட
பஞ்ச பூதங்கள் நிலைத்து பாதுகாக்க...
வேற்றுமை ஆயினும் ஒற்றுமை துளிர்த்திட
சமத்துவம் கண்டு சமாதானம் உலா வர
அறிவியலும், விஞ்ஞானமும் கையில் தவழ
வீழ்வேனென்று நினைத்தாயோ அற்ப அந்நியரிடம்!
பழமைக்கும், புதுமைக்கும் பாலமாய் நின்றிட
இலக்கணமும், காவியமும் கண்ணில் தோன்றிட
வீறிட்டெழும் விதை எதிர்கால விருட்சமாய்
எதிர்நீச்சல் போட்டு விழித்தெழ நாளும்...
கடமையும், கண்ணியமும் முதல் படியாய்
தனி மனித ஒழுக்கமே ஊன்றுகோலாய்
தொடரும் பயணம் வீழ்வேனென்று நினைத்தாயோ
வெல்வேன், வளர்வேன், வாழ்வேன் தலை நிமிர்ந்து!
ஆர். சீதாராமன், சீர்காழி.

