
ஜூன் 20 தந்தையர் தினம்
தாயுமானவர்!
என் பிரம்மன் அவர்
என் அன்னையின்
மன்னன் அவர்!
தாயின் கருவறை ஸ்பரிசத்தை
மார்பிலும், தோளிலும்
உணரச் செய்த
தாயுமானவர்!
எங்கள் வாழ்வில்
பசுமை தங்க
வாழ்நாள் முழுதும்
சுமை தாங்கியாக
சுழலும் அன்பு சக்கரமவர்!
சில நேரங்களில்
கண்டிப்பு அதிகமாய் இருக்கும்
பல நேரங்களில்
கனிவு அதீதமாய் இருக்கும்!
அக்கறையை அனைவரிடமும்
சமமாய் பகிர்ந்தளிக்கும்
நியாய தராசு அவர்!
படிப்பறிவை தாண்டிய பட்டறிவால்
பேரறிவை வழங்கிய ஆசான் அவர்!
தான் நடந்த பாதையின்
முட்கள் அகற்றி
நான் நடக்க ஏதுவாய்
பூப்பாதையாய் மாற்றி
உலகத்தை காட்டியவர்!
அவர் வியர்வையின் வாசமே
என் சுவாசத்தின் மணம் கூட்டி!
உப்பு படிந்த சட்டையுடனும்
களைப்பில் சிவந்த கண்களுடனும்
நாள்தோறும் நான் கண்ட
என் நிஜ கதாநாயகனவர்!
இந்நிலை நான் உயர
எந்நிலையிலும்
தன்நிலை உயர்த்த விரும்பா
உன் விரலே என் ஆதாரம்!
முப்பிறவியில் எத்தவம் செய்தேனோ
இப்பிறவியில் எந்தையாய் நீ கிடைக்க
எப்பிறவியாயினும் உன் மகவாய்
நான் பிறப்பேன்...
உன் வழிதனில் நான் நடப்பேன்...
உன் பெயர் சொல்லும் பிள்ளையாக!
தமிழ்கவி சுவாசன், மதுரை.