
குலபூடண பாண்டியர் என்பவர், மதுரையை அரசாண்டு வந்த சமயம், சுந்தர சாமந்தன் என்பவர், படைத்தலைவராகப் பணிபுரிந்து வந்தார். தினமும், மதுரை சோமசுந்தர கடவுளைத் தரிசித்து, தன் பணியைத் துவங்குவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார், படைத்தலைவர்.
ஏற்கனவே பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து தோற்றுப்போய் ஓடிய, சேதிராயன் என்பவன், மறுபடியும் படையெடுக்கத் தீர்மானித்தான்.
ஒற்றர்கள் மூலம் அதையறிந்த பாண்டிய மன்னர், சுந்தர சாமந்தனை அழைத்து, 'பொக்கிஷ அறையில் இருந்து தேவையான பொருளை எடுத்து, படைபலத்தை அதிகரிக்கச் செய்...' என்றார்.
மன்னர் உத்தரவுப்படி, பொக்கிஷ அறையில் இருந்த அவ்வளவு பொருட்களையும் எடுத்து சென்று, அடியார்களுக்கும், ஏழை -எளியவர்களுக்கும் உணவிடுவதற்காக செலவு செய்தார், படைத் தலைவர்.
இத்தகவல், ஒற்றர் மூலம் மன்னருக்கு தெரிந்தது.
உடனே, படைத் தலைவரை அழைத்து, 'படைகளை அதிகரிப்பதற்காகப் பொருள் எடுத்துச் சென்று, நாட்களாகி விட்டன. நாளை காலையில் படைகள் தயாராக இருக்க வேண்டும்...' என, உத்தரவிட்டார்.
இதையடுத்து கோவிலுக்கு சென்ற சுந்தர சாமந்தன், 'சோமசுந்தரக் கடவுளே... அரசர் அளித்த பொருட்களை எல்லாம், அடியார்களுக்கும், ஏழை- எளியவர்களுக்கும் உணவிடுவதில் செலவழித்து விட்டேன். அடியேனை காப்பாற்றி, அருளுங்கள்...' என, வேண்டினார்.
மறுநாள் காலையில், தம் பூதகணங்களைப் படை வீரர்களாக்கி, அவர்களின் தலைவராக குதிரைமேல் ஏறி வந்து, ஒரு பெரும் அணிவகுப்பையே நடத்திக் காட்டினார், சிவபெருமான்.
அதை கண்டு மகிழ்ந்தார், மன்னர்; தெய்வம், தன்னைக் காப்பாற்றியதை எண்ணி உள்ளம் உருகினார், சுந்தர சாமந்தன்.
அதே சமயம், மன்னரை நெருங்கி ஏதோ ரகசியமாகச் சொன்னார், ஒற்றர் தலைவர்.
'தோற்று ஓடிய சேதிராயனை எதிர்கொள்ளவே படைத்திறனை அதிகரிக்கச் சொன்னேன். ஆனால், முறைகேடாக நம் மீது படையெடுக்க எண்ணிய சேதிராயன், எதிர்பாராமல் இறந்துபோய் விட்டதாக, ஒற்றர் தலைவர் இப்போது சொன்னார். படையெடுக்க வேண்டிய தேவையில்லாமல் போய் விட்டது...' என அறிவித்தார், மன்னர்.
அதே விநாடியில், படைகளோடு அங்கிருந்து மறைந்தார், சிவபெருமான்.
படைகளுடன் வந்தது பரம்பொருள் என, உணர்ந்தார், மன்னர்.
தோற்று ஓடிப்போன சேதிராயன், மறுபடியும் சேதம் விளைவிக்க வந்ததைப் போல, அடங்கிக் கிடந்த கொடிய வியாதி, மறுபடியும் சேதம் விளைவிக்க படர்ந்து வருகிறது.
உத்தம அடியாரான சுந்தர சாமந்தனுக்காக, தெய்வம், பகை ஒழித்து அருள் செய்ததைப் போல, வாசக அன்பர்கள் வேண்டுவோம்; வாட்டும் நோய் விலகும்.
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
வீட்டுக்குள் வரும் சுமங்கலி பெண்களுக்கு, குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கொடுப்பதால் பாவங்கள் விலகி பாக்கியங்கள் பெருகும்.