தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஜூலை 11, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 11, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இப்படி இருங்கள்!

சொல்லாய் இருங்கள்

சுடுசொல்லாய் சுட்டெரிக்காமல்

சுவை கூட்டி சொக்க வைக்கும்

சொல்லாய் இருங்கள்!

முள்ளாய் இருங்கள்

காலில் குத்துவதாய் இல்லாமல்

காலம் காட்டும்

கடிகார முள்ளாய் இருங்கள்!

மரமாய் இருங்கள்

உயரமாய் வளர்ந்தும்

ஒன்றுக்கும் உதவாத

அசோக மரமாய் இல்லாமல்

பலருக்கும் உதவும்

பழ மரமாய் இருங்கள்!

காகமாய் இருங்கள்

தான் மட்டும் உண்ணும்

திருட்டுக் காகமாய் இல்லாமல்

பகிர்ந்து உண்ணும் காகமாய் இருங்கள்!

மழையாய் இருங்கள்

கடலில் பெய்து கலந்துபோகாமல்

வயல்வெளிகளில் பெய்து

வளம் சேர்க்கும் மழையாய் இருங்கள்!

செடியாய் இருங்கள்

அழகுக்கான குரோட்டன்சாக இல்லாமல்

நோய்க்கு மருந்தாகும்

மூலிகைச் செடியாய் இருங்கள்!

கற்களாய் இருங்கள்

கலைந்து கிடக்கும் கூழாங்கற்களாய் அல்ல

பட்டை தீட்டி பளபளக்கும்

வைரக் கற்களாய் இருங்கள்!

நெருப்பாய் இருங்கள்

கண்டதை எரித்து நாசம் செய்யாமல்

கட்டுக்குள் இருந்து உதவும்

கருணை நெருப்பாய் இருங்கள்!

காற்றாய் இருங்கள்

புரட்டிப் போட்டு நாசம் செய்யும்

புயலாய் இல்லாமல்

வருடிச் செல்லும் தென்றலாய் இருங்கள்!

மூங்கிலாய் இருங்கள்

மூர்க்கமாய் தாக்கும் லத்தியாய் இல்லாமல்

பொங்கும் இசை பொழியும்

புல்லாங்குழலாய் இருங்கள்!

பேனாவாக இருங்கள்

கண்டதையெல்லாம் கிறுக்கி

காகிதத்தை குப்பையாக்காமல்

காவியம் படைக்கும்

பேனாவாக இருங்கள்!

இளசை சுந்தரம், மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us