PUBLISHED ON : ஜூலை 11, 2021

துாக்கி வழித்திருந்த தலைமுடியை, மென்மையாக விரித்து, கட்டிலில் சாய்ந்தாள், அபர்ணா. நேற்றைய இரவின், 'ஸ்காட்சின்' மிச்சம் கண்களில் மிதந்தது. மெல்ல மூச்சை உள்ளிழுத்தாள். சுவாசம் சீர்பட்ட போது, மனசுக்கு இதமாக இருந்தது.
கதவு தட்டப்பட்டதும், மெத்தையில் கிடந்த, 'ஹவுஸ் கோட்'டை எடுத்து மேலே போட்டு, முகத்தை சரி செய்து கொண்டாள்.
நளினமான குரலில், ''வாங்க, தாயம்மா,'' என்றாள்.
இன்னும் சில ஆண்டுகளில், 60களின் மிச்சத்தை கடந்து விடுவதுபோல் இருந்தாள், தாயம்மா.
சூடான டீயை, டேபிளில் வைத்தாள். பார்வை, அனிச்சையாக டேபிளைத் தடவி மீண்டது. மிச்சமாய் கிடந்த பொருட்கள், அவளை முகம் சுளிக்க வைத்திருக்க வேண்டும்.
கணப்பொழுதில் அபர்ணாவை பார்த்து, தலை தாழ்த்தினாள், தாயம்மா.
''என்ன தாயம்மா அப்படி பாக்கிறீங்க?'' என்றாள், அபர்ணா.
''ஒண்ணுல்ல பாப்பா... உன்னை மாதிரி ஒரு நல்ல மனுஷி, இந்த உலகத்தில இல்லை. ஆனா, உனக்கு எதுக்கு இந்த கெட்ட பழக்கமெல்லாம்?'' வார்த்தையில், விசுவாசத்தின் நேர்மை தெரிந்தது.
''என்ன பண்ண... ஆம்பளைக்குத் தான் வலியும், வெறுமையுமா... எல்லாத்துக்கும் பொதுதானே... அதுவும், என்ன மாதிரி சதா நேரமும் அலுப்பும், சலிப்புமா வாழ்ற பொம்பளைக்கு, இன்னும் பைத்தியம் பிடிக்காம இருக்குன்னா, அதுக்கு அடிக்கடி நான் என்னை மறக்கறது தான் காரணம்.''
அவள் மனசை இதற்கு மேலும் கீறிப் பார்க்க பிரியப்படாத தாயம்மா, கீழே இறங்கினாள்.
சில கோடிகளை முழுங்கி இருந்தது, அந்த பிரமாண்ட பங்களா. 'போர்ட்டிகோ'வில் சீமைப் பசு போல் வெளிநாட்டு கார்கள் அணிவகுத்து, காத்திருந்தன. ஆனால், அதில் ஏறி பயணம் செய்யத்தான் யாரும் இல்லை.
''அபர்ணா மேடம் இருக்காங்களா?'' விசாரித்த வண்ணம், ஆட்கள் வரத் துவங்கினர்.
இது, வழக்கமான விசாரிப்பு தான். தினமும், 20 - 30 பேர்களாவது வந்து போவர். 15 - 20 ஆண்டுகளுக்கு முன்பென்றால் கேட்கவே வேண்டாம். அரசியல்வாதி வீடு போல், வாசலில் கூட்டம் மொய்க்கும். அபர்ணா, ஒரு படத்தில் தலை காட்டினாலே, அது, 'சூப்பர் டூப்பர் ஹிட்' தான். சினிமாவில் எப்போதும் தனி மதிப்பு.
ஆரம்ப பள்ளியில் வேலையில் இருந்தவளை கட்டிக்கொண்ட, மதன் தான், முதலில் அவளை சினிமாவுக்கு தாரை வார்த்தான்.
புகழ் போதை வந்தபின், எல்லாவற்றையும் கடந்து தான், அவளால் இந்த வெற்றியை எட்ட முடிந்தது. அவள் விரும்பாமலே புகழுக்குள் கொண்டு வந்து அழுத்தினான், மதன். அதற்காக அவள் இழந்த, அவனுக்கேயான பிரத்யேகங்கள், அவனுக்கு பெரிதாகத் தெரிந்ததில்லை.
'கட்டி வச்சு பாதுகாக்க இங்கே பெருசா எதுவுமில்லை, அபர்ணா... பாதுகாத்து வச்ச உடம்பு கூட, ஒருநாள்ல அழுகி நாத்தமடிச்சுடும். இந்த உலகத்துல, நமக்கு அனுபவ பாத்தியம் மட்டும் தான்...' என்று சொல்லிச் சொல்லியே, அவள் தேகத்தை, தீயில் கரைத்தான்.
அவளுடைய நல்ல காலமோ என்னவோ, இந்த துறைக்கு வருவதற்கு முன்பே பிறந்து விட்டாள், பவித்ரா. ஆனால், அவளை மகள் என்று காட்டாமலே தான் வளர்த்தான். வெகு காலமாக, அபர்ணா கணவன் என்று சொல்லிக் கொண்டதில்லை. பாதி கிணறு தாண்டிய பிறகுதான், அவள் கணவன் என்றான்.
அப்போதும், உறவு கொண்டாட, பவித்ராவிற்கு அனுமதி இல்லை. தங்கக்கூண்டில் உயிருள்ள கிளியாக வளர்ந்தாள்.
காலப்போக்கில் அத்தனையும் வெறுத்துப் போனது பவித்ராவுக்கு. ஆடம்பரத்தை விட அங்கீகாரம் இதமாக இருந்தது. சுகத்தை விட சுதந்திரம் சொர்க்கமாய்த் தெரிந்தது. வெளியுலக காற்று ஏகாந்த சுகந்தமாக மணந்தது.
அதற்காக ஏங்கி ஏங்கி, ஒருநாள் அவளுக்கு ஆறுதலையும், தேறுதலையும் தந்த மனோவைக் கட்டிக் கொண்டாள்.
பவித்ரா படித்த கம்ப்யூட்டர் சென்ட்டரின், பகுதி நேர ட்யூட்டர், மனோ.
அன்பை பிரதானமாகக் கொண்டு வாழும், ஒரு எளிய நடுத்தர குடும்பத்தின் மகன். மனிதர்கள் நிறைந்த குடும்பம். அம்மா, அப்பா, அக்கா, தங்கை என்று பிரதிநிதிகள் நிறைந்து கிடந்தனர். சண்டை சச்சரவும், உறவாடவும், பகையாடவும் அங்கே ஆயிரம் காரணங்கள் இருந்தன. அதெல்லாம் கண்டு மலைத்து, ஏங்கி, அவனுடைய அன்பிற்குள் தன்னை அடைக்கலப்படுத்தி வெளியேறினாள், பவித்ரா.
வெளியில் சொல்லி, வழக்குப் போட்டு, அவளை தக்க வைத்துக் கொள்ளும் நிலையில் இல்லாததால், திருடனுக்கு கொட்டிய தேள் போல் அமைதியாகி விட்டான், மதன்.
மதனுக்கு தேவையான சந்தோஷங்களை, அபர்ணாவின் சம்பாத்தியமும், புகழும் தந்தபோது, பவித்ரா ஒரு பொருட்டாய் தெரியவில்லை. ஆனால், எப்போது அந்த அசோசியட் டைரக்டர், பவித்ராவைப் பார்த்தானோ, அப்போதே மதனின் பார்வை மாறிப் போனது.
ஏதோ வேலையாய் இவன் வீட்டுக்கு வந்தவன் கண்கள், பவித்ராவை மொய்த்தது.
'யாரு மதன் இது... இத்தனை அழகான முகவெட்டு, இளமை... என்னய்யா இது?' அவன் கண்கள் அலைபாய்ந்தது.
தான் பெற்ற மகள் மீது தான் என்பது, மதனுக்கு உரைக்கவில்லை.
தலை சொறிந்து, 'ஹி, ஹி துாரத்து சொந்தம்...' என, பல் இளித்தான்.
பழம் தின்று கொட்டை போட்ட அசோசியட்டுக்கா புரியாது. மையமாய் சிரித்தான்.
'ஓ.கே., யோவ், டைரக்டர் புதுமுகத்துக்கு காத்துட்டு இருக்கார்யா. கொஞ்சம் அப்பாவித்தனமான முகம்னா ரொம்ப இஷ்டம். இன்னும், 20 ஆண்டுக்கு இந்த முகம், சினிமாவை ஆளும். நீ வேனா எழுதி வச்சுக்க...'
ஆனால், இது எதுக்கும் வாய்ப்பே இல்லாமல், மனோவைத் தேடி ஓடி விட்டாள், பவித்ரா. மகளைப் பிரிந்து, ஊமையாய் அழுதாலும், உள்ளுக்குள் அழுந்திய கட்டி ஒன்று உடைபட்டது போல் இருந்தது, அபர்ணாவுக்கு.
வலையை விரித்து காத்திருந்தான், மதன். பணத்தில் குளித்து, வசதியின் வாத்சல்யத்தில் வளர்ந்த பவித்ராவால் நிச்சயம் மனோவிடம் தாக்கு பிடிக்க முடியாது. காதலின் ருசி தீர்ந்ததும், கண்டிப்பாய் இங்கே ஓடி வருவாள். பணத்தையும், அது தரும் சுகத்தையும் வெறுக்க அவள் ஒன்றும் பட்டினத்தார் இல்லை என்று, அவன் உணர்ந்திருந்தான்.
ஆனால், மூன்று ஆண்டுகள் ஓடியது. பவித்ராவின் நிழல் கூட திரும்ப வரவில்லை. அந்த நிமிர்வு, மதனுக்கு கொஞ்சம் ஆச்சர்யமாகத் தான் இருந்தது.
அபர்ணாவிற்கு, இன்று எந்த ஷூட்டிங்கும் இல்லை. வாழ்க்கையை மென்று துப்புவது அத்தனை கஷ்டமாய் இருந்தது. நித்தமும் ஒப்பனை செய்து, முகத்தை விற்பனை செய்து அலுத்துக் கிடந்தாள். கொஞ்சம் அழுக்காக இருந்தால், அழகாக இருக்கும் போல் தோன்றியது. அவ்வளவு பெரிய வீட்டை, ஒற்றை விழியில் பார்த்து ஓய்வது அலுப்பாக இருந்தது.
லெமன் ஜூஸ் எடுத்து வந்த, தாயம்மா. அபர்ணாவுக்கு தந்து, சிறிது நேரம் அவளைப் பார்த்தபடியே நின்றிருந்தாள்.
கண்ணாடி டம்ளரில் முகம் பார்த்தபடி, ''என்னாச்சு தாயம்மா, எதுவும் சொல்லணுமா?'' என்றாள்.
''பவி பாப்பாவை மார்க்கெட்டுல பார்த்தேன். மெலிஞ்சு, ஆளே அடையாளம் தெரியல. செல்வத்துல வளர்ந்த பொண்ணு. மனசு வலிக்குது. கூட அந்த பயலும் வந்திருந்தான். பார்க்க நல்லாத்தான் இருக்கான். வயித்து சுமையைத் தவிர, எந்தச் சுமையையும் குழந்தையைத் துாக்க அனுமதிக்கல. ஆறேழு மாசம் இருக்கும் போல. 'நீ ஏங்கண்ணு இப்படி சிரமப்பட்டு வந்தே'ன்னு கேட்டேன்.
''ஆயா, அவருக்கு மீனெல்லாம் பார்த்து வாங்கத் தெரியாது. என்ன இருந்தாலும் பொம்பளைங்க பார்த்து வாங்குற மாதிரி வருமா... ஒரு காலத்துல, யாருன்னே அடையாளம் காட்டாம வாழ்ந்தேன். ஆனா, இன்னைக்கு மனோ பொண்டாட்டின்னு தெருவெல்லாம் கூப்பிடும்போது, அத்தனை இனிக்குது.
''நாளைக்கு என் குழந்தை பேரைச் சொல்லி அதோட அம்மான்னு சொல்வாங்க. அதுக்காக, நானும் ஒண்ணும் செய்யாம இல்ல... குழந்தை பிறந்ததும், வேலைக்குப் போகப் போறேன். நான் சொல்றதெல்லாம் எல்லாருக்கும் ரொம்ப வேடிக்கையாய் தெரியும். ஏன்னா அவங்களுக்கெல்லாம் இந்த அடையாளம் சுலபமா வந்திருக்கும்.
''எனக்கு, இப்போ சொர்க்கமா தெரியுதுன்னு சொல்லுது. ஆனா, கடைசி வரைக்கும் உன்னைப் பத்தியோ, அவங்க அப்பாவைப் பத்தியோ ஒரு வார்த்தை கேட்கல. அதுதான் வலிச்சது,'' என்றாள், தாயம்மா.
''ரொம்ப சந்தோஷமா இருக்கு தாயம்மா, என் பொண்ணு கஷ்டப்படறான்னு கேட்கும்போது.''
''ஐயோ, பாப்பா இதென்ன வஞ்சம்?''
''வஞ்சமில்லை, நிம்மதி. இங்கே ஒரு கொக்கு, மீனுக்காக ஒத்தைக் கால்ல தவம் இருக்கு. புழுவைக் காட்டி, மீனைப் பிடிக்கிற வேடனும் காத்து இருக்கான். ஆனா, அவள் இஷ்டப்பட்டதாலே கஷ்டப்படறா. இன்னும் கஷ்டப்படட்டும். அந்த கஷ்டங்கள் அவள் இல்லறத்தை வஜ்ரம் ஆக்கட்டும். இந்த அம்மாவால, அவள் சந்தோஷப்படல... அவள் அம்மாவாகி, சந்தோஷமா இருக்கட்டும்,'' ஆனந்தத்தில் ஆர்ப்பரித்தபடி, அருகே செடியில் இருந்து சிறு மலர்களை பறித்து, இலக்கின்றி வீசி எறிந்தாள்.
அது, எங்கோ இருந்த தன் மகளின் தலையில், அட்சதையாய் விழும் என்ற நம்பிக்கை அவளுக்கு.
ப. மானஸா
