PUBLISHED ON : ஆக 15, 2021

சுவாசம் கொடுப்போம்!
ஆர்ப்பரித்து வரும் ஆழிப்பேரலை கண்டு
அஞ்சி நடுங்குவதில்லை
என் இந்திய தேசம்!
அவ்வப்போது வரும்
அணுகுண்டு பேச்சு கேட்டு
அச்சம் கொள்வதில்லை
என் இந்திய தேசம்!
புயலாய் வரும் பூகம்பம் பார்த்து
புறமுதுகிட்டு ஓடுவதில்லை
என் இந்திய தேசம்!
விழுந்தவர்களை விரல் பிடித்து
எழுப்பிவிட துடிப்பது
என் இந்திய தேசம்!
அழுதவர்களை அரவணைத்து
அன்னமிட நினைப்பது
என் இந்திய தேசம்!
உயிர்களனைத்தையும் உயர்த்திடவே
விருட்சமாய் விரிந்து கிடக்கிறது அங்கே
என் இந்திய தேசம்!
இன்பமெனும் இலைகள் அசைந்தால்
உலகத்துக்கு உயிர் கொடுக்கும்
என் இந்திய தேசம்!
அன்பெனும் பூக்கள் பூத்தால்
உலகத்துக்கு வாசம் கொடுக்கும்
என் இந்திய தேசம்!
ஆசையெனும் கிளைகள் விரிந்தால்
உலகத்துக்கே நிழல் கொடுக்கும்
என் இந்திய தேசம்!
பாசமெனும் வேர்கள் படர்ந்தால்
உலகத்துக்கே உணவு கொடுக்கும்
என் இந்திய தேசம்!
தேனெனும் தென்றல் தவழ்ந்தால்
இயற்கைக்கே சுவாசம் கொடுக்கும்
என் இந்திய தேசம்!
அ. ரேவந்த், கொச்சி.
வெளிச்ச பாதையில்...
தாய்மையைப் போற்றுவோம்
தாய்நாட்டை காப்போம்
வீரம் செறிந்த மண்ணில்
சோரம் போக வாழ்ந்திட வேண்டாம்!
கடந்து வந்த நாட்களில்
நிகழ்ந்த துயரங்களை மறப்போம்
எதிரிகளின் சூழ்ச்சிகளை அறிவோம்
இன்னல் பிணிகளை களைவோம்!
புறமுதுகு காட்டி வாழ்ந்தது போதும்
நேர்கொண்ட பார்வை வேண்டும்
உரிமைக்கு குரல் கொடுத்திட வேண்டும்
உயிரென நாட்டை மதித்திட வேண்டும்!
அன்னிய வரவை தவிர்த்திட வேண்டும்
இந்திய பொருளை நுகர்ந்திட வேண்டும்
பன்னாட்டு சந்தையை மறந்திட வேண்டும்
இந்நாட்டு சந்தையை வளர்த்திட வேண்டும்!
ஜாதி, மத பேதமின்றி வாழ்ந்திட வேண்டும்
ஒரு தாய் பிள்ளையாய் இருந்திட வேண்டும்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
கூட்டுறவில் இருக்கிறது நம் நாட்டுயர்வு!
லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்துவோம்
கொஞ்சம் வாழ்வில் உலகை உயர்த்துவோம்
பஞ்சம் பசியை தீர்க்கும் மருந்தாய்
ஏழை எளியோருக்கு விருந்தாய் இருப்போம்!
குருட்டு வாழ்க்கை களைந்திட வேண்டும்
வெளிச்ச பாதையில் நடந்திட வேண்டும்
சுபிட்சம் நீயென வாழ்ந்திட வேண்டும்
நாட்டை செழுமையாய் ஆக்கிட வேண்டும்!
— சங்கீதா சுரேஷ், தர்மபுரி
