தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஆக 15, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 15, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாய் மண்ணே வணக்கம்!

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு வந்த காலத்தில், ஒவ்வொரு இந்தியனும் தேசிய பாடலாக, 'காட் சேவ் தி குயின்' என்ற ஆங்கில பாடலை பாடும்படி வற்புறுத்தப்பட்டனர். இதை எதிர்த்து, மேற்கு வங்கத்தை சேர்ந்த பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவர், நவம்பர் 7, 1875ல், 'வந்தே மாதரம்' என்ற பாடலை எழுதினார்.

'இந்த பாடல் பிரபலமாகும்போது, நான் உயிருடன் இருக்க மாட்டேன். ஆனால், இந்த பாடல் ஒவ்வொரு இந்தியனும் பாடும் வேத மந்திரமாக இருக்கும்...' என்று கூறினார்.

'வந்தே மாதரம்' என்ற வார்த்தையும், பாடலும், பிரபலமடைவதை விரும்பாத பிரிட்டிஷார், இந்த பாடலை தடை செய்தனர். உடனே, பங்கிம் சந்திர சட்டர்ஜி, இந்த பாடலை அவர் எழுதிய, 'ஆனந்த மடம்' என்ற நாவலில் வருவது போல், இடம்பெறச் செய்தார்.

இந்திய மக்கள், இதை ஏற்றுக்கொண்டதோடு, 'வந்தே மாதரம்' என்ற சொல், தேச பக்தர்களிடையே சுதந்திர வேட்கையை அதிகப்படுத்தியது.

பீடான் சதுக்கத்தில், 1896ல் நடந்த, இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில், ரவீந்திரநாத் தாகூர், இந்த பாடலுக்கு இசையமைத்து பாடினார்.

இந்த பாடலின் முதல் இரண்டு வரிகள் சமஸ்கிருதத்திலும், மற்ற வரிகள் வங்காள மொழியிலும் இருந்ததால், முதலிரு வரிகள் வேத மந்திரத்தை குறிக்கிறது என்ற காரணம் காட்டி, முதலிரண்டு வரிகளை பாட எங்களுக்கு உரிமை உண்டு என்று கூறி, போராடினர், மக்கள்.

அக்டோபர் 28, 1937ல், கூடிய காங்கிரஸ் செயற்குழுவில், 'வந்தே மாதரம்' பாடலின் முதல் இரண்டு வரிகள், தாய் மண்ணின் பெருமையையும், அவள் அளித்துள்ள வளங்களையும் குறிப்பதாகும். இதில், எவ்வித அரசியலும் இல்லை என்று கூறி, தடையை திரும்ப பெற வைத்தது.

ஜனவரி 24, 1950ல் கூடிய அரசியலமைப்பு கூட்டத்தில், இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், 'ஜன கன மன பாடல் தேசிய கீதமாகவும், 'வந்தே மாதரம்' பாடல், நாட்டு பாடலாகவும் தொடர்ந்து இருக்கும்...' என, அறிவித்தார்.

இந்தியர்களை பொறுத்தவரை, தேசிய கீதமோ, நாட்டு பாடலோ இரண்டையுமே பாடி வந்தனர்.

நவம்பர், 2002ல், பி.பி.சி., நிறுவனம், 70 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, உலகின் மிகச்சிறந்த, 10 பாடல்கள் எவை என்று ஆய்வு செய்தது. அப்போது, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், இந்தியில் வெளியான, 'மா துஜே சலாம்' (தமிழில், தாய் மண்ணே வணக்கம்) என்ற பாடல், சிறந்த, 10 பாடல் வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பதாக, அறிவித்தது.

கடந்த, 1905ம் ஆண்டிலிருந்து, பலர், 'வந்தே மாதரம்' பாடலுக்கு இசையமைத்திருந்தாலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், பல முன்னணி பாடகர்கள் பாடிய, 'வந்தே மாதரம்' பாடல் இந்தியர்களை பெருமைப்படுத்தியது உண்மை.

இந்திய விடுதலைக்காக போராடிய, வ.உ.சிதம்பரம் பிள்ளையை சிறையில் அடைத்து, செக்கிழுக்க வைத்து கொடுமைப்படுத்தியது, ஆங்கிலேய அரசு.

விடுதலை வீரர்கள் மட்டுமல்ல, இந்திய கைதிகளையும் மிரட்டி, வேலை வாங்கிட, தங்களுக்கு, திறமை இல்லை என்பதை உணர்ந்திருந்தது, ஆங்கில அரசு. அதற்காக, சிறைக்கு வருகிற பலசாலி கைதிகளை, 'கன்விக்ட் வார்டர்' என்கிற போர்வையில், வார விடுமுறை உள்ளிட்ட பல சலுகைகளை வழங்கி, தங்களுடைய ஆட்களாக வைத்துக் கொண்டது.

அப்படிப்பட்டவர்களில் ஒருவரான, வடுகுராமன் என்பவர், சிறையில், வ.உ.சி., நிலையை கண்டு வருந்தினார்.

ஒருமுறை, சிறை அலுவலகத்துக்கு சென்று, வ.உ.சி., திரும்பி வந்தபோது, தலை குனிந்து, கையெடுத்து அவரை வணங்கினார், வடுகுராமன்.

அதை கவனித்த ஜெயிலர், 'அவரை ஏன் வணங்கினாய்...' என்று கேட்டான்.

'நான் யாரையும் வணங்கவில்லை...' என்று சொல்லி நழுவினார், வடுகுராமன்.

வ.உ.சி.,யை நெருங்கிய ஜெயிலர், 'இவன் உம்மை வணங்கினானா...' என்று கேட்க, 'எல்லாரும் என்னை என்றும் வணங்குவர்; நானோ யார் யார் வணங்கினர் என்று, கணக்கு வைத்துக் கொள்வதில்லை...' என்றார்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us