PUBLISHED ON : அக் 31, 2021

நவீன தீபாவளி!
தீபாவளி என்பது விடுமுறையோ
தொலைக்காட்சி ஆக்கிரமிப்போ அல்ல!
கோபம், துரோகங்களை தலை முழுகி
இன - மன மாசுகளை கொளுத்தி
அக்கிரமங்களுக்கு எதிராக
கொண்டாடும் ஒளி திருநாள்!
நண்பர்களுக்கு புன்னகையும்
எதிரிகளுக்கு பூக்களையும்
பரிசளிக்கும் இனிய நாள்!
வீடுதோறும் பலகாரம் செய்து
இல்லாதவரோடு பகிர்ந்துண்ணும்
ஒளி திருவிழா!
அன்று
ஒரு நரகாசுரன் தான்...
இன்றோ
நாற்காலி ஆசையில்
சகுனியானவன்
கல்வியை சந்தையாக்குபவன்
வட்டி என்ற பெயரால்
ஏழையின் வயிற்றை சுரண்டுபவன்
ஜாதி - மத பேத தீக்கு
பெட்ரோல் ஊற்றுபவன்
உழைப்பாளரின் ரத்தத்தை
உறிஞ்சுபவன்...
இத்தனை அசுரன்களை அழிக்க
சபதம் எடுக்கும்
மகா தீபாவளி!
தீபாவளி இனிப்பாக
இணையட்டும் இதயங்கள்...
சரவெடியாய் பொசுங்கட்டும்
பிரிவினைகள்!
மத்தாப்பாய் மலரட்டும்
அன்பெனும் மலர்...
பூசல்கள்
புஸ்வானமாகட்டும்!
கலவர மனதை
கட்டுக்குள் வைக்க
சாட்டை ஏற்றுவோம்!
சிறுமைகள் தீர்ந்து
மனையெங்கும் மங்களம்
தழைக்கட்டும்!
இனி, தீபாவளி திருநாள்
மக்கள் மாண்பு பெற
தேவர்கள் போற்ற
கர்வத்தோடு கொண்டாடும்
ஒளித் திருநாளாகட்டும்!
- செல்வி நடேசன், சென்னை.
