தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அம்பிகா - அர்ச்சனா - ஆராதனா! (6)

அம்பிகா - அர்ச்சனா - ஆராதனா! (6)

அம்பிகா - அர்ச்சனா - ஆராதனா! (6)


PUBLISHED ON : அக் 31, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை சுருக்கம்: வேலை விஷயமாக செல்வதாக அம்பிகாவிடம் கூறி, கோல்கட்டா சென்றான், விக்ரம். நடன ஆசிரியை அர்ச்சனா தங்கியிருக்கும் வீட்டின் முதல் மாடியில் வாடகைக்கு குடியேறினான். அம்பிகாவை மொபைலில் அழைத்து சமாதானமாக பேசிய பின், அசதியில் படுத்து துாங்கினான் -

மாடியிலிருந்து சலங்கை ஒலிகளும், குழந்தைகள் சத்தமும் கேட்டு கண் விழித்தான்.

பிற்பகல் 4:00 மணி...

முகத்தை கழுவினான். டவலால் துடைத்தபடியே வாசலருகே வந்து நின்றான்.

அப்போது தான் படி ஏறி வந்து கொண்டிருந்தாள், அர்ச்சனா. நீல நிற புடவை, தலை பின்னி பூ வைத்து பார்ப்பதற்கு, அழகாக தேவதை போல் இருந்தாள்.

அவளை கவனிக்காதது போல் நின்றிருந்தான், விக்ரம்.

''ஹலோ!'' என்றாள் அர்ச்சனா. 'பெர்ப்யூம்' வாசனை அடித்தது.

''ஹலோ!''

''புதுசா குடி வரப்போறார்ன்னு, ஓனர் சொன்னாரு... நீங்க தானா அது?''

''ஆமா... நீங்க மேல குடியிருக்கீங்களா?''

''மாடியில் டான்ஸ் கிளாஸ் நடத்தறேன்.''

''டான்ஸ் கிளாஸா?'' தாடையை தடவிக் கொண்டான்.

''ஆமா, ஏன்?''

கைகளை மூடித் திறந்து, ''டான்ஸ் கிளாஸை வேற எங்கேயாவது நடத்திக்கலாமே...''

''ஏன்?''

''எனக்கு பிடிக்கல.''

''ஸாரி... இதுல எல்லாம் நீங்க தலையிடாதீங்க,'' என்ற அவளை முறைத்து பார்த்து, சிறிது மவுனத்திற்கு பின், ''ஓ.கே., ஓ.கே.,'' என சொல்லியபடி, உள்ளே போனான்.

'இங்க டான்ஸ் கிளாஸ் நடந்தா இவனுக்கு என்ன... ஏதாவது மென்டல் பிராப்ளமா?' என நினைத்தபடி, அவன் செய்கை புரியாமல் மாடிக்கு போனாள், அர்ச்சனா.

மூன்று வாரமாக அவன் டிபன், சாப்பாட்டுக்கு வெளியே போவதும், கீழே இறங்கி போகும் போது ஹவுஸ் ஓனரை பார்த்து, 'ஹலோ' சொல்வதுமாக இருந்தான். பிடி கிடைக்கவில்லை. 10 நாட்களுக்கு பின், ஒரு சனிக்கிழமை, குழந்தைகளுக்கு மும்முரமாக டான்ஸ் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தாள், அர்ச்சனா.

'யூ டியூபில்' அம்பாள் பற்றி பாடல் ஓடிக்கொண்டிருந்தது.

மாடிக்கு வந்த விக்ரம், கதவு ஓரமாக நின்றான். அவனை கவனிக்கவில்லை, அர்ச்சனா.

''டீச்சர்... யாரோ அங்கிள் வந்திருக்கார்,'' என்றது, குழந்தை ஒன்று.

பாட்டை நிறுத்தி விட்டு, 'என்ன...' என்பது போல் அபிநயத்தில் கேட்டாள்.

சத்தம் அதிகமாக இருக்கிறது என்பது போல், காதருகே கை வைத்து ஜாடை காட்டினான், விக்ரம்.

''என்னது?'' எரிச்சலாக கேட்டாள், அர்ச்சனா

''சத்தம் ஜாஸ்தியா வருது. என்னால வேலை பண்ண முடியல. நான் நிறைய எழுதணும்.''

''அதுக்கு என்ன செய்யணும்?''

''ப்ளீஸ்... உங்க டான்ஸ் கிளாஸ வேற எங்கேயாவது நடத்திக்குங்க. எனக்கு சத்தம் இல்லாம இருக்கணும்.''

அர்ச்சனாவுக்கு ஆத்திரம் வந்தது.

''சத்தம் ஜாஸ்தியா இருக்குன்னா, கதவை சாத்திக்குங்க... தொந்தரவு பண்ணாதீங்க,'' என கோபமாக சொல்லிவிட்டு, குழந்தைகள் பக்கம் திரும்பி, ''ம்... ஆடுங்க,'' என, பாட்டை போட்டு விட்டாள்.

எதுவும் சொல்லாமல் போய் விட்டான், விக்ரம்.

அடுத்த ஒரு வாரம் குழந்தைகளோ, அர்ச்சனாவோ, மாடிக்கு போகும்போதும், வரும்போதும், விக்ரம் இருக்கும் அறைப்பக்கம் கூட, திரும்பி பார்க்காமல் போய் வந்தனர்.

ஒருநாள், இரண்டாவது மாடிக்கு வரும் மாடிப்படியின் கீழ் படியில், விக்ரம் உட்கார்ந்து, தன் கையிலிருந்த போனிலிருந்து சத்தமாக ஒரு ஹிந்தி பாட்டை ஒலிக்க விட்டான்.

அர்ச்சனாவுக்கு கோபம் தலைக்கேறியது.

''மிஸ்டர்!''

அவன் கவனிக்காமல் பாட்டை ரசித்துக் கொண்டிருந்தான். அவள் வேகமாக இறங்கி வந்து கையை தட்டினாள்.

நிமிர்ந்த விக்ரம், என்ன என்பது போல் பார்த்தான்.

''பாட்டு சத்தம் மாடி வரைக்கும் கேட்குது,'' என்றாள்.

''கதவை சாத்திக்குங்க.''

இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.

''நீங்க, எனக்கு சொன்னது தான்,'' என்றான்.

''பிரச்னை பண்ண வந்திருக்கீங்களா?'' என்றாள்.

''டான்ஸ் கிளாசுக்கு வேற இடம் பார்த்துக்குங்க. இங்க நடத்துறது எனக்கு பிடிக்கல,'' திமிராக சொன்னான்.

ஆத்திரத்தை அடக்கி, மாடிக்கு போய் கதவை இழுத்து பூட்டினாள்.

'ஓரளவு அவளை கோபப்படுத்தி விட்டோம். இனி, அடுத்த மூவ்?' என, யோசித்தபடி உட்கார்ந்திருந்தான்.

தன் வீட்டில் கோபத்தில் மொபைலை சோபா மீது எறிந்தாள், அர்ச்சனா.

'எவனோ ஒரு கிறுக்கன். பிரச்னை பண்றான். குழந்தைங்க பயந்துகிட்டு கிளாசுக்கு வராம போயிட்டா...' யோசித்தபடியே, துாக்கம் வராமல் படுத்திருந்தாள்.

ஏற்கனவே நடந்த விஷயங்களை, ஹவுஸ் ஓனரிடம் சொல்லியிருந்தாள்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை. மழை பெய்து கொண்டிருந்தது.

'இன்னிக்கு அவன் பிரச்னை பண்ணினா அறைஞ்சுடணும்...' என, உறுதியாக இருந்தாள், அர்ச்சனா.

'தாயே யசோதா...' பாட்டுக்கு குழந்தைகள் ஆடிக்கொண்டிருந்தன. 'ஜல் ஜல்' என, பெரிதாக சலங்கை ஒலி.

''ஸ்டாப் இட்!'' திடீரென கேட்ட குரலில், அத்தனை பேரும் உறைந்து நின்றனர்.

கண்ணில் கோபத்துடன், ''சலங்கை சத்தம் என்னை கொல்லுது. எனக்கு பிடிக்கல. வேண்டாம் போயிடுங்க,'' என கத்திக்கொண்டே இருந்தான், விக்ரம்.

பரபரப்பாக மேலே வந்தார், எத்திராஜ்.

''எல்லா சலங்கையையும் கழட்டி துாக்கிப் போடுங்க. டான்ஸ் வேண்டாம். போயிடுங்க,'' என்று காதை மூடி கத்தினான்.

பார்த்து கொண்டிருந்த எத்திராஜ், இவன் சட்டையை பிடித்து, ''ஏன்டா கலாட்டா பண்ற?'' என்று கத்தினார்.

''சலங்கை சத்தம் ரொம்ப, 'டிஸ்டர்ப்' பண்ணுது. இவங்களை போக சொல்லுங்க அங்கிள்,'' என்று, அவர் கையை பிடித்தபடி சொன்னான்.

சில குழந்தைகள் அழ துவங்கின. அர்ச்சனா அவர்களை சமாதானப்படுத்த முயன்றாள். இவன் தொடர்ந்து இங்கிருந்தால், சரி வராது என முடிவு செய்த எத்திராஜ், ''டேய் வெளியே போ... போடா,'' என்றார்.

''இல்லை அங்கிள்... நான் சொல்றத கேளுங்க. அந்த சலங்கை...''

வேகமாக படி இறங்கி வந்த எத்திராஜ், விக்ரமுடைய போர்ஷனிலிருந்து அவன் உடைமைகளை எடுத்து வெளியே வீசினார்.

''அங்கிள்... என்ன பண்றீங்க... ப்ளீஸ்,'' என்று கெஞ்சினான்.

''இன்னொரு தடவை உன்னை இந்த பக்கம் பாத்தேன். போலீஸ் கம்ப்ளெயின்ட் தான்,'' எனக் கத்திக்கொண்டே, பாக்கெட்டிலிருந்து இவன் கொடுத்த, 'அட்வான்ஸ்' பணத்தை, அவன் மீது வீசிவிட்டு உள்ளே போனார்.

மழை நன்றாகவே பெய்து கொண்டிருந்தது.

மாடியிலிருந்து அர்ச்சனாவும், குழந்தைகளும் அவனை பார்த்து கொண்டிருந்தனர். சிதறி கிடந்த பணம், பெட்டி, பை என, தொப்பமாக நனைந்து, மழையில் நின்றிருந்தான், விக்ரம்.

'இப்படி பண்ணிட்டீங்களே...' என்ற, பாவனையில் பரிதாபமாக அவளைப் பார்த்தான்.

அவளுக்கு இவனை பார்த்ததும் பாவமாக இருந்தது. எதுவும் பேசாமல் உள்ளே போய் விட்டாள்.

''அம்மா... வீடு பெருக்கட்டுமா?'' வேலைக்காரி கேட்டாள்.

பால்கனியில் உட்கார்ந்து எங்கோ பார்த்தபடி இருந்த அர்ச்சனா, ''ம்...'' என்றாள்.

''என்னம்மா ஒரு மாதிரி இருக்கீங்க... உடம்பு முடியலையா?''

''இல்லை,'' என, தலையை ஆட்டினாள்.

விக்ரம், பரிதாபமாக மழையில் நின்றிருந்த காட்சி, மீண்டும் மீண்டும் அவள் நினைவுக்கு வந்தது.

'ஏன் அப்படி செஞ்சான்... பார்க்க ஒழுக்கமானவனா, புத்திசாலியா தானே இருந்தான். திடீர்னு, 'ஹிஸ்டிரியா' வந்த மாதிரி ஏன் நடந்துக்கணும்... சலங்கை வேண்டாம்ன்னு கத்தினானே... அவனுக்கு ஏதாவது பாதிப்பா... நான் தான் புரிஞ்சுக்காம அவசரபட்டுட்டேனோ... ஓனர் அவனை தள்ளி விடும்போது கூட, எனக்கு தடுக்க தோணலியே...'

அவனை பற்றியே அவள் நினைவுகள் ஓடிக்கொண்டிருந்தது. டான்ஸ் கிளாசுக்கும் ஒரு மாதம் விடுமுறை விட்டு விட்டாள்.

பிரசித்தி பெற்ற கோல்கட்டா காளி கோவிலில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, அமைதியாக ஒரு இடத்தில் கண்ணை மூடி உட்கார்ந்திருந்தான், விக்ரம். கூட்டமாக இருந்த கோவிலில் எல்லாரும் சாமியை வேண்டி, பிரகாரத்தை சுற்றி வந்து கொண்டிருந்த எதுவும் இவனை பாதிக்கவில்லை. ஆழ்ந்த தியானத்தில் இருப்பது போல் இருந்தான்.

'மறுபடி ஆரம்பிக்கணுமே... அவளை எங்கே பார்ப்பது? ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு காட்சி தந்த தெய்வமே! மஹா சக்தி பராசக்தி!' என, மனம் ஜபித்துக் கொண்டே இருந்தது.

'அத்தை... இந்த சாமி ஏன் நாக்கை நீட்டிகிட்டு, பெரிய கண்ணோட கோபமா இருக்கு?' ஊரில் ஒரு சின்ன கோவிலில், அத்தையுடன் நின்றிருந்த சிறுவனான விக்ரம் கேட்டான்.

'இது காளி... பவானி அம்மன் பார்த்தோம் இல்லையா... அதே தான்...'

'பயமா இருக்கு அத்தை...'

'நமக்கென்ன பயம்... தப்பு பண்ணவங்க தான் காளியை பார்த்து பயப்படணும். தப்பு பண்ணவங்களை, கண்டிப்பா காளியம்மன் தண்டிக்கும்...'

'அத்தை... இப்படியே வந்து காளியம்மன் தப்பு பண்ணவங்களை தண்டிக்குமா?'

'இப்படியே வராது பா... ஏதாவது மனுஷ ரூபத்துல வரும்...'

ஆழ் மனதில் பதிந்திருந்த காட்சி கலைந்து, கண் திறந்தான். காளி பார்த்துக் கொண்டிருந்தாள்.

மனம் லேசாகி இருந்தது. எத்தனை விதமான மனிதர்கள். எத்தனை எத்தனை பிரார்த்தனைகள் காளியை கும்பிட்டு, கிளம்பினான்.

- தொடரும்.

கோபு பாபு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us