PUBLISHED ON : அக் 31, 2021

கேசர் பேடா!
தேவையானவை: சர்க்கரை, பால் பவுடர் - தலா ஒரு கப், பால், நெய் - தலா அரை கப், குங்குமப்பூ - 2 சிட்டிகை.
செய்முறை: சூடான பாலை, 2 தேக்கரண்டி எடுத்து, அதில் குங்குமப்பூவை ஊற வைக்கவும். கடாயில் நெய் சேர்த்து சூடாக்கி, பால் சேர்க்கவும். பால் கொதிக்கும்போது, பால் பவுடரை சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். கலவையானது இறுகி வரும்போது சர்க்கரை சேர்க்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் கலவை சுருண்டு வரும்போது, பாலில் ஊறிய குங்குமப்பூ சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
ஆறியதும் சிறிய உருண்டைகளாக எடுத்து, நன்றாக கலந்து, உள்ளங்கையில் வைத்து அழுத்தி தட்டில் அடுக்கவும். முதலில் தளர இருந்தாலும், நேரம் ஆக ஆக இறுகி விடும்.
குறிப்பு: இந்த இனிப்பு, கோல்கட்டா ஸ்பெஷல். பால் பவுடர் சேர்ப்பதற்கு பதிலாக, 4 கப் பால் சேர்த்து சுண்ட கிளறியும் செய்யலாம்.
சிவப்பு அவல் மிக்சர்!
தேவையான பொருட்கள்:
சிவப்பு கெட்டி அவல் - ஒரு கப்;
வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா ஒரு கப், கறிவேப்பிலை - சிறிதளவு,
மிளகாய் துாள், மஞ்சள் துாள் - தலா கால் தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு. பொரித்து எடுக்க - எண்ணெய், முந்திரி - 10, நெய் - அரை தேக்கரண்டி.
செய்முறை:
சிவப்பு அவலிலுள்ள உமி, கல்லை நீக்கி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை மிதமான சூடாக்கி, மெல்லிய ஸ்டீல் ஜல்லடையில் அவலை ஒவ்வொரு முறையும் கைப்பிடியளவு போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
டிஷ்யூ பேப்பரில் போட்டு, அதிகமான எண்ணெயை எடுத்து விடவும். வேர்க்கடலை, பொட்டுக்கடலை, முந்திரி, கறிவேப்பிலை ஆகியவற்றையும் பொரித்து எடுத்து, அவலுடன் சேர்த்துக் கொள்ளவும். பின்னர், உப்பு, மிளகாய் துாள், மஞ்சள் துாள் சேர்த்து நன்றாக குலுக்கி கலந்து, காற்று புகாத டப்பாவில் எடுத்து வைத்து, தேவைப்படும்போது பரிமாறவும்.
