PUBLISHED ON : மார் 20, 2022

மறப்போம், மன்னிப்போம்!
வாழ்க்கையில் எப்போதும் ஜெயிப்பவர் சிலரே
வாசல் தோறும் வேதனை அனுபவிப்பவர் பலரே
குணமும், கொள்கையும் நல்லதானால்
குறைவென்பது இல்லாமல் போய் விடும்!
நன்றி கெட்ட உலகமடா இது
நல்லதை பிறருக்கு நினைக்காத காலமடா
உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவோர்
கள்ளம் கபடம் மிக்க கயவர்களே!
நினைப்பதெல்லாம் நடப்பதற்கு
கொடுப்பினை வேண்டும்
நிம்மதி வேண்டுமெனில் நல்லவை
எண்ண வேண்டும்
சேரிடம் அறிந்து சேராவிடில் உன் வாழ்வு
சேற்றினில் மூழ்கி சிதைந்து போய்விடும்!
கொடுமைகளை களைய மன உறுதி வேண்டும்
கொட்டம் அடிப்போரைத் திருத்துதல் கடினம்
மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கிட
மறத்தல் ஒன்றே மா மருந்தாகும்!
கவலையை மறந்தால் ஆறுதல் கிட்டும்
கஷ்டங்களைப் போக்கும் முதற்படி அதுவேயாகும்
மன்னிக்கும் குணம் உன்னுள் தோன்றினால்
மட்டற்ற மகிழ்ச்சி காண்பது திண்ணம்!
எண்ணத்தில் பிறரின் தீமைகளை
மறக்க முயல்வாய்
எப்போதும் பிறரின் தவறுகளை மன்னிக்க
நீ இறைவனாவாய்
மறக்கவும், மன்னிக்கவும் மனம் ஒன்றே வேண்டும்
மனித வாழ்வு நிறைவு காண அது ஒன்றே போதும்!
எம்.ஆர். ஐஸ்வர்யா, காரைக்குடி
