தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆக்கிரமிப்பு!

ஆக்கிரமிப்பு!

ஆக்கிரமிப்பு!


PUBLISHED ON : மார் 20, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 20, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரபரப்பாய் இருந்தது, 'எச்- 2' காவல் நிலையம். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், நில அளவைத் துறை உதவி இயக்குனரும் அடுத்தடுத்த கார்களில் வந்து இறங்கினர்.

இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே, மாவட்ட ஆட்சியரும் வந்து சேர்ந்தார்.

மூவரையும் வரவேற்று, காவல் நிலையத்தின் சிறு கூட்ட அரங்கில் அமர வைத்தார், இன்ஸ்பெக்டர்.

மூன்று அதிகாரிகளுடன் வந்திருந்த அரசு ஊழியர்கள், வெளியில் மரத்தடியில் கூடி நின்றிருந்தனர்.

உதவியாளரிடம், ''ஆக்கிரமிப்பு இடம், இங்கிருந்து எவ்வளவு துாரம்,'' கேட்டார், ஆட்சியர்.

''அரை கிலோ மீட்டர் சார்.''

''எல்லாரும் வந்துட்டாங்களா?''

''தாசில்தாரும், வருவாய் கோட்டாட்சியரும் அங்கதான் இருக்காங்க சார்.''

''சரி, நீங்க எல்லாத்தையும் ஒருமுறை, 'ஆர்டரா' சொல்லிருங்க.''

உதவியாளர் கையில் இருந்த, 'பைலை' புரட்டிப் பார்த்து, ''சார்... இங்கேயிருந்து அரை கி.மீ., துாரத்தில் இருக்கிற வரத்தேரிங்கிற ஏரிக்கரையில், 2 ஏக்கர் அரசு நிலம், மக்களோட ஆக்கிரமிப்பில் இருக்கிறதா, கமலநாதன் என்பவர் தாசில்தாருக்கு மனு அனுப்பியிருந்தார்.

''சர்வேயரை வெச்சு அளந்து, ஆக்கிரமிப்பை உறுதிப்படுத்தியிருக்கிறார், தாசில்தார். அதுக்கே இரண்டு மாசம் ஆனதால, 'தாசில்தார் நடவடிக்கை எடுக்கலை'ன்னு வருவாய் கோட்டாட்சியர்கிட்ட மனு கொடுத்திருக்கிறார், மனுதாரர்.

''கோட்டாட்சியர் அங்கிருந்த, 40 வீடுகளுக்கும், ஆக்கிரமிப்பை காலி பண்ணும்படி, 'நோட்டீஸ்' கொடுத்ததோட சரி... மேற்கொண்டு, வருவாய் அலுவலர் அலுவலகத்தில் சீராய்வு மனு தாக்கல் பண்ணியும், மேல் நடவடிக்கை இல்லாததால், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் பண்ணிட்டார், மனுதாரர்.

''எல்லாத்தையும் விசாரிச்ச நீதிமன்றம், 'ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரசுக்கு அறிக்கை தாக்கல் பண்ணணும்'ன்னு, நமக்கு கண்டிப்புடன் உத்தரவிட்டிருக்கு சார்,'' என்று சொல்லி முடித்தார்.

இரண்டு அதிகாரிகளையும் பார்த்து, ''இப்ப சொல்லுங்க என்ன பண்ணலாம்,'' கேட்டார், மாவட்ட ஆட்சியர்.

''பாதுகாப்புக்கு ஆயுதப் படையிலிருந்து, 200 போலீசை வரவழைச்சு இருக்கேன்,'' என்றார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.

''சார்... நாம காலி பண்ண போற, 40 குடும்பத்துக்கும், வேற இடத்தில், 1,000 சதுரடி இடத்தை பட்டா போட்டுத் தர, அரசு தயாராயிருக்கு. ஆனால், மக்கள் அதை ஏற்காமல் தகராறு பண்றாங்க,'' என்றார், நில அளவைத் துறை உதவி இயக்குனர்.

''அவங்களோட தொழில், வாழ்வாதாரம், உறவுகள் எல்லாம் இங்க இருக்குறப்ப, 60 கி.மீ., தள்ளி, மனித நடமாட்டமே இல்லாத, ஒரு மலை அடிவாரத்தில் இடம் கொடுக்கிறேன் போன்னு சொன்னா... அவங்க எப்படி சார் போவாங்க,'' கேட்டார், மாவட்ட ஆட்சியர்.

ஒன்றும் சொல்லவில்லை, உதவி இயக்குனர்.

அந்த காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டரை அழைத்து, ''கடந்த இரண்டு முறையும் நீங்கதானே பாதுகாப்புக்குப் போனீங்க,'' கேட்டார், ஆட்சியர்.

''ஆமா சார்.''

''நீங்க சொல்லுங்க, அவங்க மொத்தம் எத்தனைப் பேரு. அவங்க மனநிலை என்னவாயிருக்கு?''

''ஆண்கள், பெண்கள், குழந்தைகள்னு மொத்தம், 200 பேர் இருப்பாங்க சார்... நாங்க அமைதியான முறையில் அரசு ஆணையை விளக்கிச் சொன்னோம். ஆனா, அவங்க ரொம்ப, 'எமோஷனலா' இருக்கிறாங்க.''

''போலீஸ் மேல ஏதாவது தாக்குதல் நடத்தினாங்களா?''

''இல்ல சார்... அவங்களே அவங்கள காயப்படுத்திக்கிட்டாங்க. போலீஸ் பக்கத்துல போனா, தற்கொலைக்கு முயற்சி பண்றாங்க. முதல் தடவை, ஒரு பெரியவர், கத்தியால் கழுத்தை அறுத்துக்கிட்டு விழுந்துட்டார். இரண்டாவது முறை, ஒரு பொண்ணு, தீக்குளிக்க முயற்சி பண்ணுச்சு.

''ஒரு நடுத்தர வயதுக்காரர், கை நரம்பை அறுத்துக்கிட்டார். அனைவரையும் ஆஸ்பத்திரிக்கு துாக்கிட்டு போய் காப்பாத்திட்டோம். அதனால தான் இந்த முறை, தீயணைப்பு வண்டியோட சேர்த்து, '108' ஆம்புலன்சையும் வரவழைச்சு நிறுத்தி இருக்கோம்,'' என்றார், இன்ஸ்பெக்டர்.

பெருமூச்சு விட்டார், ஆட்சியர்.

''அந்த, 40 குடும்பத்தாரிடமும் ரேஷன் கார்டு, மின் இணைப்பு மற்றும் குடி தண்ணீர் குழாய் இணைப்பு எல்லாம் இருக்கிறதா, 'பைல்' சொல்லுது. அரசு புறம்போக்குல தற்காலிக குடியிருப்பா இருந்த அவங்களுக்கு, இந்த அதிகாரிகள் இதையெல்லாம் எப்படிக் கொடுத்தாங்க?''

''அரசு இயந்திரத்தின் பல்சக்கரம் எல்லா இடத்துலயும் சரியாக பொருந்தி போறதில்ல சார். தவிர, இதிலயிருக்கிற அரசியலையும் நாம் கவனத்தில் எடுத்துக்கணும். இது, 50 வருஷத்து கதை,'' என்றார், காவல்துறை கண்காணிப்பாளர்.

ஆமோதித்தார், ஆட்சியர்.

''உண்மை தான். முளையிலேயே கிள்ளி எறியாமல் தண்ணீர் விட்டு வளர்த்துட்டு, இப்ப வெட்டு வெட்டுன்னு கதறுது அரசு. எதிர்த்து நிக்கிற மக்களை அடிச்சு விரட்டலாம். இப்படி தங்களையே வதைச்சுக்கிற மக்களை எப்படி சமாளிக்கிறது?'' என்ற ஆட்சியர் நிமிர்ந்து, ''மறுபடியும் பேச்சு நடத்திப் பார்க்கலாமா?''

''பலமுறை பேச்சு நடத்தியாச்சு சார். ஒத்தே வர மாட்றாங்க,'' என்றார், உதவி இயக்குனர்.

இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டு, ''இதுல இன்னொரு பிரச்னையும் இருக்கு சார்,'' மூவரும் நிமிர்ந்து, என்ன என்பது போல் அவரைப் பார்த்தனர்.

''ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கிறதுக்காக, பொதுப்பணித் துறையில் இருந்து பொக்லைனை வரவழைச்சோம். 'ஸ்பாட்'டுக்கு வந்ததும், அதோட டிரைவர், 'எனக்கு உடம்பு சரியில்லை; என்னால வண்டி ஓட்ட முடியாது'ன்னு போயிட்டான். இரண்டாவது முறை வந்த வேற ஒரு டிரைவர், 'எனக்கு வயிறு வலிக்குது; ஆஸ்பத்திரிக்கு போகணும்'ன்னு போயிட்டான்.''

''தனியார் டிரைவர்களை முயற்சி பண்ணீங்களா?'' என்று கேட்டார், உதவி இயக்குனர்.

''ஒத்துகிட்டு வர்றாங்க சார்... வந்து, இந்த மக்களோட அழுகையையும், வேதனையையும் பார்த்து மனசு மாறிடறாங்க. 'லட்ச ரூபாய் கொடுத்தாலும் இந்த பாவச் செயலை எங்களால செய்ய முடியாது'ன்னு போயிடறாங்க சார்.''

அந்த, 'டென்ஷனிலும்' புன்னகையுடன், ''மனிதர்களுள் வலிய, எளிய என்ற பேதமெல்லாம் இல்லை. எல்லாருக்குள்ளும் மனசாட்சி என்ற ஒன்று உள்ளது,'' என்றார், ஆட்சியர்.

''இப்ப என்ன சார் பண்றது,'' கேட்டார், காவல்துறை கண்காணிப்பாளர்.

''சார்... சொன்ன மாதிரி மறுபடியும் அவங்களோட பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க வேண்டியதுதான்,'' என்றார், உதவி இயக்குனர்.

ஒன்றும் சொல்லாமல் யோசனையில் ஆழ்ந்தார், ஆட்சியர்.

தயக்கத்துடன் குறுக்கிட்டு, ''சார்... இது சம்பந்தமா நம் ஸ்டேஷன் கான்ஸ்டபிள் உங்ககிட்ட ஏதோ சொல்லணும்ன்னு அனுமதி கேட்கிறார்,'' என்றார், இன்ஸ்பெக்டர்.

''வரச் சொல்லுங்க,'' என்றார், ஆட்சியர்.

வந்து நின்ற கான்ஸ்டபிள் முருகேசனுக்கு, வயது, 50 இருக்கும். அவர் மரியாதையை ஏற்று, ''சொல்லுங்க முருகேசன்... என்ன சொல்லணும்?''

சொல்ல ஆரம்பித்தார், முருகேசன்.

அவர் கூறி முடித்ததும், ஆட்சியர் உட்பட அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்.

ஒரு வாரத்துக்கு பின்...

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் நில அளவை துறை உதவி இயக்குனர் ஆகியோருடன் கிளம்பிய ஆட்சியர், அந்த இடத்திற்கு வந்து இறங்கியபோது, ஏக களேபரமாய் இருந்தது.

கட்டப்பட்ட கயிறுக்கு அந்தப்புறம் நின்றிருந்த மக்களில், கண்ணீரும் கம்பலையுமாய் பெண்கள் அழுது கொண்டிருக்க, அரசை எதிர்த்துக் கோஷமிட்டு கொண்டிருந்தனர், ஆண்கள்.

அந்தக் கூச்சல்களுக்கு இடையே அப்படியும் இப்படியுமாய் நடந்து, ஆக்கிரமிப்பு வீடுகளை பார்வையிட்டார், ஆட்சியர். பாதிக்குமேல் ஓட்டு வீடுகள், நான்கு குடிசைகள், மீதியெல்லாம் கான்கிரீட் வீடுகள்.

முக்கியமாய் சாலையோரம் முன்னணியில் இருந்த பச்சை வண்ணம் பூசப்பட்ட அந்த வீட்டைப் பார்த்தார். 800 சதுரடி இருக்கும், மாடி கட்டடம். எப்படியும், 20 லட்சத்திற்கு குறையாமல் செலவாகி இருக்கும்.

வாயிலில் மாவிலைத் தோரணம், இருபுறமும் ஒற்றைச் சர மாலை தொங்கிக் கொண்டிருந்தது. தோரணமும், மாலையும் இன்னும் காயவில்லை. கிரஹப்பிரவேசம் முடிந்து இரண்டு மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம்.

கையிலிருக்கும் அரை குறை சான்றுகளும், ஒரு தலைமுறையை தாண்டிய இருப்பும் தந்த அதீத நம்பிக்கையுமே இவர்களை இவ்வாறு செயல்பட வைத்திருக்கிறது.- மெல்ல நடந்து பொக்லைன் அருகே நின்றார்.

அவர் வருகையை கவனித்த மக்களின் ஆவேசம் இரட்டிப்பானது. மண்ணை வாரித் துாவி சாபமிட்டனர், பெண்கள். ஆண்களின் கோஷம் உச்சஸ்தாயிக்கு போனது.

இவ்வளவு நேரம் காவல்துறை கண்காணிப்பாளரின் காரில் அமர்ந்திருந்த ஒருவன் இறங்கி வந்து, ஆட்சியர் முன் நின்றான். அவனுக்கு, 45 வயதிருக்கும். உழைப்பால் இறுகிய உறுதியான உடல். காக்கி சட்டையும், பேன்டும் அணிந்திருந்தான்.

தலையை மட்டும் அசைத்தார், ஆட்சியர்.

அவன் பொக்லைனில் ஏறி, இருக்கையில் அமர்ந்து, வண்டியை, 'ஸ்டார்ட்' செய்தான்.

அந்த மக்களைப் பார்த்தார், ஆட்சியர். அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்திருப்பது போல் தோன்றியது. விழி விரிய அவனையும், வண்டியையும் பார்த்தபடி நின்றனர்.

கயிற்றை அறுத்து மெல்லிய குலுக்களுடன் பொக்லைன் முன்னேறியது. திகைத்துப் போயிருந்த மக்கள் கூட்டம், அனிச்சையாக மெல்ல விலகி வழி விட்டது.

கிரஹப்பிரவேசம் நடந்து முடிந்து இரண்டு மூன்று நாட்களே ஆகியிருந்த, பச்சை வண்ணம் பூசப்பட்ட அந்த மாடி வீட்டை இடிக்க ஆரம்பித்தது, பொக்லைன்.

ஒரு மணி நேரத்தில் அந்தக் கட்டடம், வீடு என்ற அந்தஸ்தை இழந்து, கான்கிரீட் கட்டட கழிவுகளாய் மாறியிருந்தது. வண்டியை விட்டு இறங்கியவன், அந்த மக்களிடையே போனான்.

அடுத்த இரண்டு மணி நேரத்திற்குப் பின், 'நாளை மாலைக்குள் வீடுகளை காலி செய்து கொள்கிறோம்...' என்று, அந்த மக்கள் சார்பாக ஆட்சியரிடம் உறுதியளிக்கப்பட்டது.

'நிவாரணமாக, அரசிடமிருந்து அந்த குடும்பங்களுக்கு, உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும்...' என்று, ஆட்சியர் தரப்பிலிருந்து உறுதியளிக்கப்பட்டது.

மரத்தடியில் ஒதுங்கி நின்றிருந்தவனிடம் போனார், ஆட்சியர்.

''மணிவேல்... நீ அரசுக்கு உதவ தயாராக இருக்கிறதா, கான்ஸ்டபிள் முருகேசன் சொன்னபோது கூட, நான் முடியுமான்னு சந்தேகப்பட்டேன். ஆனால், நீ சாதிச்சிட்ட,'' என்றார்.

நிமிர்ந்த அவன், ''அரண்மனைக்கு எதிர்மனை கிடையாது. நான் எல்லா வகையிலும் விசாரிச்சுட்டேன். நம்ம வீடுகளை காப்பாத்த முடியாதுங்கிற உண்மை எனக்குப் புரிஞ்சிடுச்சு. சட்டத்தை எதிர்த்து நம்மை நாமே வதைச்சுகிட்டு நடத்தற இந்தப் போராட்டத்துக்கு எந்த அர்த்தமும் இல்லை.

''என் புது வீட்டை இடித்து தள்ளியதன் மூலமாக, எல்லாரும் காலி பண்ணித்தான் ஆகணும்ங்கிற உண்மையை அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொன்னேன். ஒத்துகிட்டாங்க சார்,'' என்ற மணிவேல், திரும்பி இடிந்துக் கிடந்த கட்டடக் குவியலை பார்த்தவன் தொடர்ந்தான்...

''தனியார் தொழிற்சாலையில் பொக்லைன் டிரைவரா வேலை செய்றேன் சார். இந்த வீடு எங்க குடும்பத்தோட, 20 வருஷ கனவு. உழைச்சு சேர்த்த அத்தனை பணத்தையும் போட்டு, பார்த்துப் பார்த்துக் கட்டினேன். கடைசியா அதை என் கையாலேயே இடிக்க வேண்டியதாயிற்று,'' என, குலுங்கி அழும் அவனை இழுத்து அணைத்துக் கொண்டார், ஆட்சியர்.

சுபாகர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us