PUBLISHED ON : ஏப் 24, 2022

அ நிறம் | அளவு
உத்தமம்!
சிறகு உள்ள வரை
சிட்டுக்குருவியால்
பறக்க முடியுமென்றால்
உழைப்பு
இருக்கும் வரை
உன்னாலும்
உயர முடியும்!
முயல் ஆமையிடம்
தோற்றதற்கு
என்ன காரணம்?
இயலாமை அல்ல
முயலாமை தான்
என்பதை
மறந்து விடாதே!
இதுவரை
வாழ்ந்ததையெல்லாம்
மறந்துவிட்டு
இன்று
புதிதாய் பிறந்தோம்
என்று எண்ணி
செயல்படு
பழைய செடிகளில்
பார் தினசரி
புதிய பூக்கள்!
கட்டுமரக்காரனுக்கு
கடலின்
கொந்தளிப்பும்
தாலாட்டு தான்
அதுபோல
கடுமையாக
உழைப்பவனுக்கு
கண்ணீர் என்பதும்
கானல் நீர்தான்
என்பதை
மறந்து விடாதே!
கையூட்டு வாங்கி
காலா காலத்துக்கும்
சொத்து
சேர்ப்பதை விட
கால் வயிற்றுக்
கஞ்சிக்காக
கல் உடைத்து
காசு பார்ப்பதே
கவுரவம்!
ஆம்...
ஊழலை
மூலதனமாகக்
கொண்டு
உல்லாசமாய்
வாழ்வதை விட
உழைப்பை
மூலதனமாகக்
கொண்டு
வாழ்வதே உத்தமம்!
பெ. கருணைவள்ளல்,
சென்னை.
