PUBLISHED ON : ஏப் 24, 2022

தன் மருமகன் கணேசனுடன், கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்தார், சுந்தரம்.
வாசலில் நின்ற நபர், ''என்ன வேணும்?'' என்றார்.
''ஐயாவ பார்த்து, மனு கொடுக்கணும்,'' என்றார், சுந்தரம்.
''சரி... எழுதி அந்த பெட்டியில் போட்டுட்டு போங்க,'' என்று அலட்சியமாக சொன்னவரிடம், ''இல்லீங்க, நான் நேரா பார்த்து பேசணும்,'' என்றார், சுந்தரம்.
கடுப்பான அந்த நபர், ''யோவ், கலெக்டருக்கு ஆயிரம் வேலை இருக்கு... நீ என்ன, 'அப்பாயின்மென்ட்'டா வாங்கியிருக்க,'' என்றார்.
''எப்படியும் வெளில வருவாரில்ல, அப்ப பார்த்துவிடலாம்,'' எனக்கூறி, ஓரமாக சென்று அமர்ந்தார், சுந்தரம்.
''மாமா... கலெக்டர் நின்னு பேசுவாரா?'' கேட்டான், கணேஷ்.
''நாம முயற்சி பண்ணுவோம். இவரு சொல்றா மாதிரி பொட்டியில போட்டா அது சமாதி தான்,'' சொன்னார், சுந்தரம்.
இருவரும் காத்திருந்தனர்.
மதிய உணவு வேளையில், கலெக்டர் வெளியே வர, சுந்தரம் பாய்ந்து சென்று, காலில் விழாத குறையாக பணிந்து, ''ஐயா... என் மருமவனுக்கு நல்ல காலேஜ் கிடைச்சும், பணம் கட்ட வழியில்லீங்க... கொஞ்சம் ஒத்தாசை பண்ணுங்க,'' கெஞ்சியபடி மனுவை நீட்டினார்.
புரியாமல் கொஞ்சம், 'டென்ஷனாக' பார்த்தார், கலெக்டர். ஏதோ யோசித்தவர், மனுவை வாங்கி, ''கொஞ்சம், 'வெய்ட்' பண்ணுங்க. சாப்பிட்டுட்டு வரேன்,'' என்று, காரை நோக்கி சென்றார்.
'அப்பாடா...' என, ஓரளவு நிம்மதியானார், சுந்தரம்.
அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து திரும்பினார், கலெக்டர். ஒரு சிலரை பார்த்துவிட்டு, பிறகு சுந்தரத்தை உள்ளே அழைத்தார்.
சுந்தரமும், கணேஷும் பவ்யமாக கலெக்டர் முன் நின்றனர்.
''பெரியவரே... உங்க மனுவை படிச்சேன்; விசாரிச்சேன். இந்த பையன், முதல் தலைமுறை பட்டதாரி. கட்டணத்தை கம்மி செய்யணும்ன்னு கேட்டிருக்கீங்க. ஆனா, வி.ஏ.ஓ.,கிட்ட விசாரிச்சதுல, இந்த பையனோட அக்கா ஏற்கனவே அந்த சலுகையை பயன்படுத்தினதா சொல்றாரே... அப்புறம் எப்படி சட்டத்தை மீறி சலுகையை அனுபவிக்க முடியும் சொல்லுங்க,'' கேட்டார், கலெக்டர்.
''ஐயா, இதுல பாதி உண்மைங்க. அதாவது, இவனோட அப்பாவுக்கு ரெண்டு சம்சாரம். முதல் சம்சாரத்தோட பொண்ணு இந்த கோட்டாவுல படிச்சது வாஸ்தவம்தாங்க... ஆனா, அந்த பொண்ணு இப்ப உயிரோட இல்ல. இவன், ரெண்டாவது சம்சாரத்தோட பையனுங்க.
''இந்த வம்சத்துல, இவன் முதல் பட்டதாரியா வரக்கூடாதாங்கைய்யா... என் மச்சானும் இப்ப உயிரோட இல்ல. படிச்சாலும் வேலை கிடைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கறபோது, படிக்கிறதே கஷ்டமா போனா... புரியலீங்கய்யா, ஏதாவது பார்த்து செய்யுங்க,'' கெஞ்சினார், சுந்தரம்.
பி.ஏ.,வை பார்த்தார், கலெக்டர்.
அவரோ, ''அவருக்கு சொன்னா புரியாது, சார். நாம, சட்டத்தை மீறி எதுவும் செய்ய முடியாது,'' என்றவர், சுந்தரத்தை பார்த்து, ''என்ன பேசறீங்க... அரசு, ஒரு குடும்பத்துக்கு தான் சலுகை தர முடியும். இப்படி ஒவ்வொருத்தரும் ரெண்டு, மூணு குடும்பம்ன்னு சொன்னா எப்படீங்க,'' என, கேட்டார்.
''ஐயா, தயவுசெய்து ஏதாவது பார்த்து செய்யுங்க,'' மீண்டும் தயவுடன் கேட்டார், சுந்தரம்.
''உங்க நிலைமை புரியுது. உங்களுக்கு சர்டிபிகேட் தரக்கூடாதுன்னு எங்களுக்கு எந்த எண்ணமும் இல்ல... வி.ஏ.ஓ., -- ஆர்.ஐ., இப்படி பல பேர் கையெழுத்து போட்டு மேல வரணும். ஆனா, அங்கேயே சிக்கல் இருக்கு. ப்ளீஸ்... சட்டப்படிதான் நடக்க முடியும்,'' விரட்டாத குறையாக பேசினார், கலெக்டர்.
'சே... அந்த வி.ஏ.ஓ., அஞ்சாயிரம் கேட்டாரு... எப்படியாவது புரட்டி கொடுத்திருந்தா இப்படி கெஞ்சிகிட்டிருக்க வேண்டாம். ஆனால், அதுக்கு கூட வக்கில்லையே... இந்த லஞ்சத்தை ஒழிக்க, கலெக்டர் சொல்ற சட்டத்துல இடம் இருக்கான்னு தெரியலியே?' என நொந்து, சுந்தரம் கிளம்புகையில், அந்த மாவட்ட விவசாய சங்க தலைவர் வேணுகோபால், கலெக்டர் அறைக்குள் நுழைந்தார்.
கலெக்டருக்கு வணக்கம் தெரிவித்து, எதேச்சையாக, சுந்தரத்தை பார்த்தார்.
''என்னப்பா சுந்தரம் இந்த பக்கம்?'' என, கேட்டார்.
''மிஸ்டர் வேணுகோபால்... உங்க மேட்டர பேசலாம்; அவர்கிட்ட அப்புறம் விசாரிக்கலாம்,'' இடை புகுந்தார், கலெக்டர்.
புரிந்து கொண்டவர், ''சரி, சுந்தரம் வெளில இரு. நான் பேசிட்டு வந்துடறேன்,'' என்றார், வேணுகோபால்.
சுந்தரமும், கணேசும் வெளியேறினர்.
வேணுகோபாலை பார்த்து, ''சொல்லுங்க...'' என்றார், கலெக்டர்.
''ஐயா, எங்களுக்கு பயிர் நிவாரண தொகை வரல. மழை நின்னு ஒரு மாசம் ஆவுது. நாங்க வட்டி கட்ட முடியல. வழக்கம் போல சமாதானம் சொல்லாதீங்க. வர்ற, 1ம் தேதி, நாங்க மறியல் நடத்தப் போறோம். அதுக்குள்ளாற கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணுங்க,'' என்றார், வேணுகோபால்.
கலெக்டர் சிரித்தபடி, ''உங்க நிலைமை புரியுது. இப்ப, 'லாக்டவுண்'ல இந்த போராட்டம் எல்லாம் வேண்டாம். அப்புறம் வீணா கைது பண்ண வேண்டி வரும். நான் முயற்சி பண்றேன்... அவ்வளவுதான் சொல்ல முடியும்,'' என்றார்.
''சரிங்கய்யா... உங்களுக்கு சட்டம் முக்கியம்; எங்களுக்கு சாப்பாடு முக்கியம்; நாங்க போராடுறதே அதுக்குதான். இந்தாங்க என்னோட மனு,'' என்று கொடுத்து விட்டு வெளியே வந்தார், வேணுகோபால்.
வாசலில் சுந்தரத்தை பார்த்து விசாரித்தார். விஷயம் புரிந்தது.
''சரி... பக்கத்து டவுன்ல விநாயகா அறக்கட்டளைன்னு ஒண்ணு இருக்கு. உண்மையான ஏழை பசங்களுக்கு பணம் கட்டுவாங்க... நான் லெட்டர் தர்றேன்... போய் கேட்டுப் பாரு,'' என்று வேணுகோபால் சொல்ல, கண் பார்வை பெற்றது போல் மகிழ்ந்தார், சுந்தரம்.
உடனே லெட்டரை வாங்கிக் கொண்டு, அந்த அறக்கட்டளை ஆபீசிற்கு கிளம்பினார்.
அந்த அலுவலகத்தில், 'வேணுகோபால் ஐயா சிபாரிசுன்னா, ரொம்ப பாதிக்கப்பட்டவர்களாய் தான் இருப்பீங்க. சரி, பணம் கட்ட கடைசி தேதி எதுன்னு சொல்லிட்டு போங்க, நாங்களே கூப்பிடறோம். உங்க போன் நம்பரையும் மறக்காம எழுதிக் கொடுங்க...' என்று ஆதரவாக கூறினர்.
கணேஷுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. இன்னும் எங்கல்லாம் அலைய வேண்டி வருமோ என்று கவலைப்பட்டவனுக்கு, இது, லாட்டரி பரிசு போல் அமைந்தது.
சொன்னபடியே நடந்து கொண்டது, அறக்கட்டளை. காலேஜ் பெயரில் காசோலை வழங்கப்பட்டது. காசோலையுடன் வேணுகோபாலை சந்தித்தனர். அவரும் ஆசிர்வதித்தார்.
''என்ன தம்பி... சந்தோஷமா... நல்லா படிக்கணும்,'' கணேசை வாழ்த்தினார்.
ஒரு நல்ல நாள் பார்த்து, கல்லுாரியில் காசோலையை அளித்துவிட்டு, மாமாவும், மருமகனும் வெளியே வந்தனர்.
''கணேஷ்... இன்னும் நாலு வருஷத்துல நீ ஒரு இன்ஜினியர். உன்னால உன் தலைமுறையே மாறப் போகுது.
இதோ சட்னு ஒரு வருஷம் ஓடிடும்,'' நெகிழ்ந்தார், சுந்தரம்.
கலங்கிய கண்களுடன், ''மாமா... நீங்க மட்டும் இல்லேன்னா, நான் இவ்வளவு பெரிய காலேஜுல சேர்ந்திருக்க முடியாது. என்னை வாழ்த்துங்க,'' என்று, சுந்தரத்தின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்ட கணேஷ், ''உங்களுக்கு நான் என்ன கைம்மாறு பண்ண முடியும்... சொல்லுங்க மாமா,'' என்றான்.
''ம்... ஒண்ணு செய்வியா?'' என, கேட்டார்.
''சொல்லுங்க மாமா,'' என்றான், கணேஷ்.
''நீ நல்லா படிச்சு, வேலைக்கு போனதும், இதோ இப்போ நாம கேட்டோமே உதவின்னு, அது மாதிரி யாராவது வந்து கேட்டா, முதல்ல, மனசால அத செய்ய என்ன வழின்னு யோசிக்கணும். அதுல சிக்கல் வந்தால், அதை போக்க வழிய தேடணும்.
''அதவிட்டு, இந்த கலெக்டர் ஆபீசுல பார்த்தோமே படிச்சவங்க, மேதாவிங்க, அவங்கள மாதிரி சுலபமா, 'நாங்க என்ன பண்ண முடியும்'ன்னு தப்பிச்சுக்க கூடாதுப்பா. படிப்புங்கிறது கரன்ட்டும் இல்ல, படிச்சவங்க மிஷினும் இல்ல. சக மனிதர்களை உயர்த்த, மனசால விரும்பி, இந்த படிக்காத வேணுகோபால் ஐயா மாதிரி நடந்துக்கணும். அத நீ செஞ்சாலே இந்த மாமாவுக்கு ரொம்ப சந்தோஷம்பா,'' என்றார்.
சுந்தரத்தின் வார்த்தைகள், கணேஷிற்கு வேத வாக்காக தோன்றின. மொத்தத்தில் கல்வி என்பது, கல்லாதவர்களுக்கு வழி காட்டும் கருவி என, அவனுக்கு புரிந்தது.
கீதா சீனிவாசன்
