
இரவில் வாங்கிய விடுதலை!
அஹிம்சையை மண்ணில் விதைத்து
அனைவருக்கும் விடுதலை விளைவித்த அண்ணல்!
கணக்கிலா செல்வமுடையான்
காந்தியோடு களி தின்ற பண்டிதன்!
காந்தியத்தை நெஞ்சில் சுமந்து
கல்விக் கண் திறந்த கர்ம வீரர்!
'ஜெய்ஹிந்த்' மந்திரத்தை பிரசவித்த
செந்தமிழன் செண்பகராமன் பிள்ளை!
'ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என
அடையுமுன்னே ஆரூடம் கணித்த பாரதி!
24 வயதிலேயே துாக்குக் கயிற்றை முத்தமிட்ட
இளமை மாறா இளவல் பகத்சிங்!
'காலியோ, லாவோ' தன் கப்பல்களை விட்ட
தன்மான கப்பலோட்டிய தமிழன்!
தாயின் மணிக்கொடி உருவாக்கிய
தந்தை பிங்கலி வெங்கையா!
562 சமஸ்தானங்களை ஐக்கியமாக்கிய
ஆற்றல் மிகு இரும்பு மனிதர் வல்லபாய் படேல்!
ஊர் பேர் தெரியா இன்னும் எத்தனையோ உத்தமர்கள்
உதிரம் சிந்தி பெற்றுத் தந்த உன்னதச் சுடர்கள்!
பாரத மாதா பெற்றெடுத்த குழந்தை
பவள விழா காணுகிறது!
நாட்டின் வளர்ச்சிக்கு சுதந்திரம் பயன்படுகிறதா?
நாலு பேர் படிக்கும் வரலாற்று புத்தகத்தில் புதைந்து விட்டதா?
ஒரு பறவையின் சிறகு
இன்னொரு பறவையின் சிறகை உரசுவதில்லை!
பணம், புகழ், பதவி, அதிகாரம்
பறந்து பறந்து தேடியபோது
'கொரோனா' வந்து நம்மை கொட்டியது
கொடையாய் கிடைத்த சுதந்திரத்தின் மதிப்பு தெரிந்தது!
எல்லாரும் எல்லாமும் பெறத்தான் சுதந்திரம்
எண்ணச் சிதறலின்றி எடுத்து வைப்போம் - இது நிரந்தரம்!
போத்திலிங்கம், சங்கரன்கோவில்.