
''சரிம்மா... மாத்திரை எல்லாம் சரியா எடுத்துக்கிறேன். ஓ... சாப்பாடா, எல்லாம் ரொம்ப அருமையா இருக்கும்மா. 'டூர்' நல்லாவே போயிட்டு இருக்கு. எனக்கு, பேரன் - பேத்திகளை பார்க்கணும் போல, மனசு ரொம்ப தேடுது. ஆமா, இன்னைக்கு ஸ்கூல் உண்டே, எழுந்திருச்சிட்டாங்களா?'' என்றாள், காமாட்சி அம்மாள்.
''ஆமா, அத்தை... குளிச்சு, யூனிபார்ம் மாட்டி, ரெடியா இருக்காங்க. நான் சீக்கிரமா டிபன் தயார் செய்து அனுப்பணும்.''
''சொல்ல மறந்திட்டேனே, ரோஸ் மூடி பிளாஸ்டிக் டப்பாவில், வத்தல், வடாகம் எல்லாம் கீழ் ரேக்குல வைத்துள்ளேன்; எடுத்து, பிள்ளைகளுக்கு பொரித்து கொடு. அப்புறம், அந்த மாவடு ஊறுகாய, ரெண்டு நாள் வெயிலில் காய வைம்மா. அப்பத்தான் கெட்டுப் போகாம இருக்கும். சரியா!''
கர்நாடக மாநிலத்திலுள்ள சுற்றுலா இடங்களைப் பார்க்க, காமாட்சி அம்மாள் வந்திருக்கிறாள். மத்திய கர்நாடகாவிலுள்ள மிர்டேஸ்வர் கோவில் அருகே உள்ள கடற்கரை. காலை, 7:00 மணி. இருட்டை விரட்டி, காலை கதிரவன் வெளிச்சத்தை பரப்ப துவங்கிய சமயம்.
மிர்டேஸ்வரர் கோவில் கோபுரம் மிகப்பெரியது. அங்கே தவக்கோலத்தில், மிக பிரமாண்டமாக கடற்கரையில் காட்சி தருகிறார், சிவன். அதையெல்லாம் ரசித்த பின், 'டூர்' தோழி பங்கஜத்துடன் கடற்கரையில் அமர்ந்து, தன் மருமகளிடம் போனில் பேசி முடித்தாள், காமாட்சி அம்மாள்.
மொபைல்போனில் பேசி முடித்த, காமாட்சி, தோழி பங்கஜத்தை பார்த்தாள். ஆனால், அவளை எரிப்பது போல கண்களில் கோபப் பார்வை காட்டினாள், பங்கஜம்.
''என்னடி அப்படி பார்க்கிற,'' என்றாள், காமாட்சி.
''ஏன்டி காமாட்சி, மொபைல்போனில் கொஞ்சல், குழைச்சல். எப்பப் பார்த்தாலும் உங்க புராணக் கதை தானா. அவள், உனக்கு மருமகள் தானே. மகளுக்கு மேல, நீ தலையில் துாக்கி வைத்து ஆடுறே. ரொம்பத்தான் ஓவரா இருக்கு. ஊர்ல இல்லாத மாமியார் - மருமகள்.
''இதுக்கு நீ, 'டூர்' வராமல் வீட்டிலேயே கொஞ்சிட்டு இருக்க வேண்டியதுதானே... கொஞ்சல், தொண, தொண பேச்சு. சீ சீ...'' என, பொரிந்து தள்ளினாள், பங்கஜம்.
காமாட்சிக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. ஆனாலும், அதை அடக்கி, ''உன் கவலை, ஆத்திரம் எல்லாம் எனக்குப் புரியுது. நானும் பார்த்துட்டுதான் இருக்கேன். நாம, 'டூர்' வந்து இரண்டு நாள் ஆகி விட்டது.
''உன் வீட்டிலிருந்து, யாரும் போனில் கூப்பிட்டு, உன்னை நலம் விசாரிக்கவில்லை. அந்த வேதனையைத்தான் நீ வெளிப்படுத்துகிறாய். இதுல, யார் மேல குற்றம் சொல்ல. ஏற்கனவே நீ, உன் வீட்டு விஷயத்தை என்னிடம் சொன்னதிலிருந்து, குற்றம் உன் பெயரில் தான்.''
காமாட்சியை முறைத்தாள், பங்கஜம்.
''ஆமான்டி, அதுதான் உண்மை. உனக்கு புரியணும்னா, நான் வாழ்ந்த கதையை நீ தெரிந்து கொள்ளணும். என்ன, கேட்பியா...'' என, அவள் பதிலை எதிர்பாராமல் சொல்ல துவங்கினாள், காமாட்சி...
''பிறந்து, வளர்ந்தது எல்லாம் சேலத்தில். என் அப்பாவிற்கு புடவை வியாபாரம். ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டி என்பர். அப்பாவுக்கு நாங்கள் நாலு பெண்கள். எங்களையெல்லாம் கரையேத்த அவர் பட்ட பாடு எனக்கு நல்லாத் தெரியும். அதனால், எனக்கு கஷ்டம் புதிதல்ல.
''எனக்கு கல்யாணம் ஆனது திருநெல்வேலியில். கணவருக்கு, கோ ஆப்ரேட்டிவ் பாங்க் வேலை. அதனால், சாப்பாட்டிற்கு பிரச்னை இல்லை. பிரச்னையெல்லாம் மாமியார், நாத்தனார் இவர்களால் தான். கல்யாணம் ஆனதிலிருந்து நானும், கணவரும் தனியாக பேசி சந்தோஷமாக வாழ்ந்த நாட்கள், மிக குறைவு.
''அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி, அது இதுன்னு விரத பெயரைச் சொல்லி, எங்களை தனிமைப்படுத்தி, தன் கூடவே, என்னை படுக்க வைத்து விடுவார், மாமியார். ஏன், சினிமாவுக்கு போனால், கூட நாத்தனாரை அனுப்பி வைப்பார். இல்லையென்றால், நீ தரை டிக்கெட்டுக்குப் போ, அவன் பெஞ்சில் இருந்து படம் பார்க்கட்டும் என்று நா கூசாமல், என்னிடம் சொல்வார்.
''எனக்கு தெரிஞ்சு, நாங்க தனியா வெளியே போன நாட்கள் மிக குறைவு. எப்படியோ ஒரு பையன் பிறந்தான். அவனுக்கு இரண்டு வயது இருக்கும். அப்போ, ஊர் முழுக்க விஷக் காய்ச்சல். அது, என் கணவருக்கும் தொற்றி, ஒரே வாரத்தில், அவரை காவு வாங்கி விட்டது.
''அதிர்ச்சியில் உறைந்தே போனேன். திக்கற்ற நிலை. அந்த பாதிப்பில், என்னிடம் பேச முடியாமல் முடங்கி, சில மாதங்களிலேயே, மாமியாரும் படுத்த படுக்கையானார். முதலில், கணவர் வேலை பார்த்த கோ ஆப்ரேட்டிவ் பாங்கில், வேலைக்குப் போனேன்.
''ஆனால், அங்கே உடல் தின்னும் கழுகுகள், தினம் என்னை பார்வையால் கொத்தின. அது சரிபடாது என வேலையை விட்டேன். மாமியாரையும் கவனிக்கணும். என்ன செய்ய, விழி பிதுங்கி தவித்தேன். அப்போதுதான் ஒரு யோசனை தோன்றியது.
''எனக்கு தையல் வேலை தெரியும். என்னிடம் தையல் மிஷின் இருந்ததால், பாவாடை தைத்து, விற்க ஆரம்பித்தேன். கடவுள் புண்ணியத்தில் அது அமோகமாக போனது. வீட்டுப் பிரச்னை அதில் மறைந்து போனது.
''எல்லா வேலைகளுக்கு இடையேயும் மாமியாரை கவனித்துக் கொள்ள வேண்டும். அவர் மகள் செய்ய மறுத்ததை, முகம் சுழிக்காமல், படுக்கையை மாற்றி, கழிவுகளை அகற்றி, குளிப்பாட்டுவேன்.
''அப்போதெல்லாம், என்னைப் பார்க்க சங்கடப்படுவார். அவரின் கண்களில் தாரை, தாரையாக நீர் வழியும். அதையும் துடைத்து விடுவேன். பேச முடியாமல் தவிப்பார். மூன்று நேர உணவும் நானே ஊட்டி விடுவேன்.
''என்னை விட அவர் தான் நரக வேதனை அனுபவித்தார். அது என் மனதில் பதிந்தது. நம் செயல் தான் நம்மை திரும்பவும் வந்தடையும் என, உணர்ந்ததால், துளி கூட எனக்கு அவர் மீது கோபம் வரவில்லை. காரணம்?'' என, நிறுத்தினாள், காமாட்சி.
தன்னையே பார்த்த பங்கஜத்திடம், ''ஏன்டி, நீ கேட்கிறயா?''
''ம்... சொல்லுடி கேட்கிறேன்,'' பங்கஜத்தின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்திருந்தது, சேலைத் தலைப்பால் துடைத்தாள்.
''அத்தைக்கும், என்னை மாதிரியே, மகன் பிறந்த ஆறு மாதத்தில், அவரது கணவர் இறந்து விட்டார். அவருக்கு கணவருடன் வாழும் வாழ்க்கை கலைந்து போன வருத்தம், கோபம், ஏக்கம், அதை என்னிடம் காட்டினார். வேறு வடிகால் அவங்களுக்கு தெரியல; அதனால்தான். அது புரிந்ததும், எனக்கு அவர்கள் மேல் கோபம் துளி கூட வரவில்லை, பாசம் தான் வந்தது.''
''என்னடி, சாதாரணமாக சொல்றே... அவங்க செய்ததும் தப்புதானே,'' என்றாள், பங்கஜம்.
''சரியில்லை தான். ஆனா பாரு, நமக்கு ஒண்ணு கிடைக்கலைன்னா வருவது தானே, பொறாமை. அதை வலிமை இல்லாதவங்ககிட்டே காட்டுறோம். அவ்வளவு தான்,'' சிரித்தபடியே யதார்த்தத்தைப் போட்டு உடைத்தாள், காமாட்சி.
ஆனால், அதை கவனிக்காதது போல, அப்புறம் என்பது போல் பார்த்தாள், பங்கஜம்.
''சுமார் ஒரு வருஷம் படுக்கையில் ரொம்ப கஷ்டப்பட்ட மாமியார், ஒருநாள் போய் சேர்ந்துட்டாங்க. அவங்க கிடந்த கட்டில பார்க்கும் போதெல்லாம் அழுகை வரும். மனசை தேத்திக்கிட்டேன்.
''நாத்தனார் கல்யாணத்தை நானே சிறப்பாக நடத்தினேன். என் பையனையும் நல்லா படிக்க வைச்சேன். அவன் இப்ப ஒரு லட்ச ரூபா சம்பளம் வாங்குகிறான். அதுமட்டுமா, நான் பிறந்த சேலத்திலேயே அவனுக்கு பெண் பார்த்து கட்டி வைச்சேன். அதுதான் கவுசல்யா. இப்ப பேசிட்டு இருந்தேன் பாரு. ஒரு ஆண், ஒரு பெண், இரண்டு பேரப்பிள்ளைகள்.
''யாரிடமும் எதையும் எதிர்பார்க்க மாட்டேன். நம் ஏமாற்றம் தான் வாழ்வில் கோபமாக மாறுகிறது. அது தவறு என உணர்ந்து புரிந்து கொண்டால் துக்கமில்லை. எதுவும் எதிர்பார்க்காமல் பழகுவதால் வாழ்க்கை சந்தோஷமாக போயிட்டு இருக்கு. மருமகளும், தன் அம்மா மாதிரி என்னை பார்த்துக் கொள்கிறாள். இதைவிட வேறு என்ன வேணும் சொல்லு,'' என்றபடியே பங்கஜத்தை ஏறிட்டாள், காமாட்சி.
பங்கஜத்தின் கண்கள் குளமாகியிருந்தன.
''அட ஏன்டி அழறே,'' என, பங்கஜத்தின் கண்களை துடைத்து விட்டாள், காமாட்சி.
'அன்புக்காக ஏங்கும் மனம், அவளை எப்படியாவது என்னை போல் மாற வைக்க வேண்டும். அன்பை பெறுவது எப்படி என புரிய வைக்க வேண்டும். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை...' என்று நினைத்து, ''பங்கஜம், உன் மருமகளை கூப்பிட்டு நலம் விசாரி,'' என்றாள், காமாட்சி.
''அட போடி நீ ஒண்ணு. அவ என்னை கூப்பிடவே இல்லை. நான் எப்படி பேசுவேன்.''
''இப்படியே வாழ்நாள் பூராவும் இருந்தா, யாருக்கு என்ன லாபம். சந்தோஷத்தை தொலைச்சுட்டு முகத்தை உம்முன்னு வைத்திருக்க வேண்டியது தான். என்ன வாழ்க்கை இது,'' என்ற காமாட்சி, பங்கஜத்தை அவள் மருமகளிடம் பேச வைத்தாள்.
மருமகளிடம் நலம் விசாரித்தாள், பங்கஜம்.
எப்போதும் குத்தம் சொல்லி நம்மை வேதனைப்படுத்தும் மாமியாரா இப்படி குழைந்து அன்பொழுக பேசுகிறார் என்று, மருமகளுக்கு ஆச்சரியம்! கோவில், குளம் என போய், நல்ல புத்தி வந்துவிட்டதா என, ஆச்சரியப்பட்டாள்.
அதன்பின், நன்கு பேசலானாள். உரையாடல் அடுத்த நாள், இரண்டு, மூன்று தடவை ஆனது. பின் அடிக்கடி ஆனது. பங்கஜம் முகம் இப்போது தாமரை போல் பிரகாசித்தது. சந்தோஷமாக வலம் வந்தாள். காமாட்சிக்கும் அது சந்தோஷத்தை தந்தது.
தற்போது கர்நாடகாவில் பழைய தலைநகரான மைசூரை நோக்கி பயணித்தது, பஸ். பஸ்சில் பங்கஜமும், காமாட்சியும் அரை உறக்கத்தில் இருந்தனர்.
காலை 7:00 மணி, பங்கஜத்திற்கு போன் அழைப்பு, துாக்க கலக்கத்துடன் எடுத்தாள். அந்த பக்கம் பேசுவது, பேத்தி தான் என, உற்சாகமானாள்.
''ஆச்சி நல்லா இருக்கீங்களா? எப்ப வருவீங்க, அம்மா உங்களை நினைச்சு அழுதாங்க. உங்களை, எங்களுக்கு பார்க்கணும் போல இருக்கு.''
''கண்ணுகளா, எனக்கும் உங்களைப் பார்க்கணும் போல இருக்கு. இன்னும் இரண்டு நாள்ல வந்துருவேன்,'' என, மொபைல் போனை, 'ஆப்' செய்து, குலுங்கி குலுங்கி அழுதாள், பங்கஜம்.
தற்செயலாக பார்த்த காமாட்சிக்கு, அது ஆனந்த கதறல் என்று புரிந்து, பங்கஜத்தை இறுக அணைத்துக் கொண்டாள்.
அவள் நல்ல ஒரு மாமியாராக, இல்லை இல்லை, தாயாக மாறி விட்டாள். இனி, அவள் வாழ்வில் ஆனந்தம் பொங்கி வழியட்டும்.
வி. எம். முருகன்