
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தவிர்ப்பதா, தக்க வைப்பதா?
ஏன், எதற்கு?
என்றெண்ணி
சந்தேகம் கேட்பதையும்
பதில் கூறுவதையும்
ஆசிரியரிடம் தவிர்த்தேன்
பள்ளிப் பருவங்களில்!
பிற்காலத்தில்
திருப்பித் தர வேண்டுமோ
என்ற ஐயத்தில்
தவிர்த்தேன்
அம்மாவின் அன்பையும்
ஆதரவையும்!
நமக்கிது உதவாது
என்றைக்குமேயென்று
தவிர்த்தேன்
அப்பாவின் அறிவுரைகளையும்
அனுபவங்களையும்!
நல் நண்பர்களிடம்
பழகிப் பொழுது கழிப்பதை
மனம் விட்டுப் பேசுவதைத்
தவிர்த்தேன்
நம் ரகசியம்
காக்கப்பட வேண்டுமென்று!
நான் மட்டுமே
வளர வேண்டுமென
நெருங்கி வர விடாமல்
தவிர்த்தேன்
நல் உறவுகளை!
நிரந்தர ஆரோக்கியம்
இதுதானென்று
கடின உழைப்பையும்
கடமைகளையும்
தவிர்த்தேன்
அலுவலகத்தில்!
தவிர்த்து
விட்டதெல்லாம்
புத்திசாலித்தனம்
என்றெண்ணி
வேகமாக பயணித்தபோது...
தோல்விகள் ஒவ்வொன்றும்
புரிய வைத்தது
தவிர்த்தது எல்லாம்
நான்
தக்க வைத்துக் கொள்ள
வேண்டியவையென்று!
வா. முகிலன், கோவை