PUBLISHED ON : ஏப் 30, 2023

மே 1 - உழைப்பாளர் தினம்
உலகம் இயங்க
உயிர்கள் செழிக்க
உற்பத்தி பெருக
உலகின் அச்சாணிகளாம்
உழைக்கும் நம் தோழர்கள்!
உழைப்பை மதித்து
உழைப்பாளிகளின்
உன்னத நிலையறிந்து
கோரிக்கைகளை
முன் வைத்து
போராடும் முன்னரே
அழைத்துப் பேசிஅவர்களின் மனம் குளிர
வைப்போரே
உன்னத முதலாளியாய்
உழைப்பாளர் கண் முன்
தெய்வமாய் நிற்பர்!
கூடுதல் வேலை
குறைவான சம்பளம்
உழைப்பைச் சுரண்டும்
முதலாளிகள்...
தொழிலாளர்களின்
வயிற்றில் அடிக்கலாமா
வெந்த புண்ணில்
வேல் பாய்ச்சலாமா?
இரவு நேரப் பணிகளிலும்
ஆபத்தான தொழிலகங்களிலும்
கட்டுமானப் பணிகளிலும்
உழைக்கும் தோழர்களே
நம் உற்ற நண்பர்களாம்!
உலகம் இயங்க
பெட்ரோலும், டீசலும்
மின்சாரமும்
நிலக்கரியுடன் கூடவே
நம் தொழிலாளர்களும் வேண்டும்!
நமக்காக உழைக்கும்
தொழிலாளர்கள்
நம்முடன் கலந்துள்ள
தொழிலாளர்கள்
நம் குடும்பத்திலும்
தொழிலாளர்கள்
இவர்களுக்கு
நன்றி சொல்லி
கொண்டாடுவோம்
தொழிலாளர் தினத்தை!
வி.எஸ். ராமு, செம்பட்டி, திண்டுக்கல்.
