PUBLISHED ON : ஆக 20, 2023

கல்வி எனும் அஸ்திவாரம் மேல்
வலிமையும், வாய்ப்பை சாதகமாக்கும் திறமையும்
உருவாக்கிக் கொண்டு வருவது தான்
வாழ்க்கை எனும் கட்டடம்!
நம் எந்த ஒரு செயலிலும்
முயற்சி என்பது துவக்கமே தவிர
எல்லை என்பது
அதற்கு என்றுமே இல்லை!
பயணத்தில் களைப்பு என்பது
வெறும் காற்புள்ளி தான்
இலக்கை கீழ் இறக்கச் சொல்லும்
முற்றுப்புள்ளி அல்ல!
பயிற்சி என்பது விடாப்பழக்கம்
வாழ்நாள் முழுதும் அது தொடர
கிடைக்குமே என்றும்
இனிமையான அனுபவம்!
தோல்வி என்பது தடை அல்ல
நம் உத்தியைச் சிறிது
மாற்றச் சொல்லி கற்றுக் கொடுக்கும்
அருமையான பாடம்!
இல்லறம் எனும்
சதிபதியின் கூட்டு முயற்சியின் ஊடே
அன்பும், பாசமும் இழையோடுகையில்
இனிது உதயமாவதே நல்லறம்!
இன்ப துன்பம் கலந்ததே வாழ்க்கை
என்றும் இல்லாளுடன்
கைகோர்த்து நடக்க
எளிதாக அடைய முடியுமே இலக்கை!
அன்பை அள்ளித் தரும்
பிள்ளைகள் ஒருபுறம் நடக்க
பாச நட்புகளும், நேச உறவுகளும்
மறுபுறம் புடைசூழ
வலம் வரும் வாழ்க்கைப் பயணம்
என்றுமே இனிமை தான்!
— பூவை சுபாவாணன், கோவை.
