தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஆக 20, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள சகோதரிக்கு —

என் வயது: 46, கணவர் வயது: 49. எங்களுக்கு, 16 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். திருமணமான புதிதில், வறுமையிலிருந்து படிப்படியாக உயர்ந்து, இன்று ஓரளவுக்கு நல்ல நிலைமையில் உள்ளோம். தனியார் நிறுவனத்தில், பொறுப்பான பதவியில் இருக்கிறார், கணவர்.

சமீபகாலமாக, தன் கல்லுாரி கால தோழி ஒருவரை பற்றி அடிக்கடி பேசுகிறார், கணவர்.

'எனக்கு வேலை கிடைப்பதற்கு அத்தோழி தான் காரணம். தற்சமயம் அவள், ஆதரவற்ற நிலையில் இருக்கிறாள். நான் உதவி செய்ய கடமைப்பட்டுள்ளேன்...' என்று கூறுகிறார்.

எங்களது, 21 ஆண்டு திருமண வாழ்வில், தன் தோழி பற்றி ஒருமுறையேனும் வாய் திறந்து பேசாதவர், திடீரென இப்படி கூறுவதை நம்ப முடியவில்லை.

உதவி செய்கிறேன் என்று, அந்த தோழியை வீட்டுக்கே அழைத்து வந்து விடுவாரோ என்று பயமாக இருக்கிறது.

நான் என்ன செய்ய வேண்டும், தகுந்த ஆலோசனை தாருங்கள் அம்மா!

— இப்படிக்கு,

உங்கள் சகோதரி.



அன்பு சகோதரிக்கு —

உன் கணவரிடம் கீழ்க்கண்ட கேள்விகளை எரிச்சலுாட்டா வண்ணம், ஆனால், பட்டு தெறித்தாற் போல கேள்.

1. அவள், கல்லுாரி கால தோழியா அல்லது காதலியா? தோழி என்றால், ஓ.கே., காதலி என்றால் அவளை திருமணம் செய்து கொள்ள முடியாமல், எது உங்களை தடுத்தது?

2. உங்களுக்கு வேலை கிடைப்பதற்கு பொருளுதவி செய்தாளா அல்லது வெறும் சிபாரிசு

செய்தாளா?

3. இத்தனை ஆண்டு திருமண வாழ்வில், அவளை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத நீங்கள், இப்போது பேசுவது ஏன்?

4. திருமண வாழ்வில் நான், தாம்பத்யத்தில் ஏதேனும் குறை வைத்தேனா அல்லது என்னுடனான தாம்பத்யம் உங்களுக்கு சலித்து போய் விட்டதா?

5. ஆதரவற்ற நிலையில் இருக்கிறாள் என்றால்-, அவளது கணவர் இறந்து விட்டாரா? அவளுக்கும், அவளது கணவருக்கும் இடையே விவாகரத்து நடந்து விட்டதா அல்லது அவளது கணவர் இன்னொரு பெண் துணை தேடிக் கொண்டாரா?

6. உங்களுக்கு, 50 வயதாகிறது. 16 வயதில் மகள் இருக்கிறாள். மகளின் எதிர்காலத்தை திட்டமிடாமல், உங்கள் இறக்கைகளை யாருக்கோ கடன் கொடுக்க யத்தனிக்கலாமா?

7. பிறழ் உறவுகள் தற்கொலை, கொலை அல்லது இரு குடும்பங்களின் நிர்மூலத்தில் தான் முடியும். பிறழ் உறவில் ஈடுபட்டு, தற்கொலை வெடிகுண்டாக தீர்மானித்து விட்டீர்களா?

8. அவளுக்கு குழந்தைகள் இருக்கின்றனவா, எத்தனை குழந்தைகள், என்ன படிக்கின்றனர்?

9. உண்ட உணவு, -உடுத்திய ஆடை,- வசிக்கும் வீடு-, அனுபவிக்கும் தாம்பத்யம் இவற்றில் திருப்தியடையாத ஆணோ, பெண்ணோ நாசமாக போவர். நீங்கள் நாசமாக விரும்புகிறீர்களா?

10. உங்கள் வாழ்க்கையில், எதாவது ஒரு விதத்தில் உங்களுக்கு உதவிய பெண்கள் பத்துக்கும் மேற்பட்டோர் இருப்பர். அவர்களுக்கு எல்லாம் உதவி செய்ய கிளம்பி விடுவீர்களா... வாங்கும் சம்பளத்தை பத்து பேருக்கும் பிரித்து கொடுத்து விடலாமா?

11. உங்களுக்கும், அவளுக்குமான உறவு அல்லது நட்பு, உடல் வரை போய் விட்டதா?

12. கடந்த, 21 ஆண்டுகளில், நான் உங்களை ஒரு வார்த்தை எதிர்த்து பேசாமல் குடும்பம் நடத்தியதால், என்னை ஒன்றும் தெரியாத அம்மாஞ்சி என, கணக்கு போட்டு விட்டீர்களா?

13. அவளுக்கு என்ன மாதிரியான உதவி செய்ய விரும்புகிறீர்கள்? பண உதவியா அல்லது அவளை நம் வீட்டில் கொண்டு வந்து குடியமர்த்த போகிறீர்களா?

14. பண உதவி என்றால், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து, 'ஒன்ஸ் பார் ஆல், குட் பை' சொல்லுங்கள். அவளை நம் வீட்டில் குடியமர்த்தினால் பூகம்பம் வெடிக்கும். நீங்கள் தயாரா?

15. ஐம்பது வயது கிழங்களுக்கு, சட்டையில் இன்னொரு கலர் பேனா வைத்துக் கொள்ள ஆசை வரும். அந்த ஆசை உங்களுக்கும் வந்து விட்டதா?

16.வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதையாய், -கூடாரத்துக்குள் ஒட்டகம் புகுந்த கதையாய், காக்கை கூட்டின் குயில் கதையாய்,- கறையான் புற்றுக்குள் கருநாகம் புகுந்த கதையாய் ஆகி விடும். அவளுக்கு நீங்கள் செய்யும் உதவி- தேவையா?

17.இரட்டைக்குதிரை சவாரிக்கு ஆசைப்பட்டால், அழுது புலம்பி, விவாகரத்து பிச்சை கேட்க மாட்டேன். அதிரடியான செயலில் இறங்குவேன்.

இவ்வளவு கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாமல், வாலை சுருட்டி, சொந்த மரக்கிளையில் தங்குவார், கணவர்.-

— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us