sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/ரம்மி!

ரம்மி!

ரம்மி!


PUBLISHED ON : ஆக 20, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2023


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''ரம்மி! அவன் தாண்டா...'' என்ற, வீரய்யாவின் ஆள்காட்டி விரல் சென்ற திசையைப் பார்த்தான், ரம்மி என்ற செல்வன்.

நீலநிறச் சட்டை அணிந்திருக்கும் ஒருவனின் முதுகு மட்டும் தெரிந்தது. அதனால், இளைஞனா அல்லது நடுத்தர வயதுக்காரனா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த ஆள், தொப்பி அணிந்திருந்தான். இப்போது வெயில் இல்லை. வழுக்கையை மறைக்கவே அணிந்திருக்கிறான் என்று எண்ணினான். அந்த ஆளின் அருகில் நெருக்கமாக அமர்ந்திருக்கும் பெண். இருவரும் அமர்ந்திருக்கும் விதம், கணவன், மனைவி என்று உறுதியான முடிவிற்கு வர உதவின.

'இப்பவே முடிச்சிட முயற்சி பண்ணு. இல்லேன்னா நாளைக்கு. ஆனா, ஒரு நிபந்தனை, மூணு நாள் தான் உனக்கு டயம்...' வீரய்யா கூறிய இந்த வார்த்தைகள், திரும்பத் திரும்ப செல்வனின் மனதில் எதிரொலித்தன.

'இது உனக்கு முதல் ஆபர். மறந்திடாதே. அதனால தான் சிம்பிளா ஒரு கேஸ் குடுத்திருக்கேன்...' என்றான்.

அந்த ஆளை ஏன் கொல்ல வேண்டுமென்று அப்போது கேட்கத் தோன்றவில்லை. தொழில் என்று வரும்போது கறாராக இருப்பான், வீரய்யா. அப்போது, 'பாஸ்' என்பான். திருப்பிக் கேள்வி கேட்பது அவனுக்குப் பிடிக்காது.

அந்த நீல நிறச்சட்டை அணிந்த ஆள், சாதாரணமானவன் என்று தான் தெரிந்தது. ஏனெனில் வீரய்யா, இன்று காலை, ஆயிரம் ரூபாயைத் திணித்து, 'இது அட்வான்ஸ் மட்டும்தான். காரியத்தை முடி, இதே அளவு தருவேன்...' என்றான். பெரிய மனிதன் என்றால் பணம் அதிகமாக இருக்கும் என்ற எண்ணம்.

செல்வனுக்கு உடனடியாக பணம் தேவைப்பட்டது. சரியென்று கூறி விட்டான். யாரை கொல்ல வேண்டும்; ஏன் கொல்ல வேண்டும் என்ற கேள்விகள், அப்போது அநாவசியம் என்றே பட்டது. ஆனால், மனம் இப்போது, கேள்வி கேட்கிறது.

இதே மனம் ஒரு கணத்திலேயே, 'இந்த கேள்விக்கு விடை கண்டு என்ன செய்யப் போகிறேன். அஞ்சலைக்கு கொடுக்க பணம் கொண்டு வந்து தருமா இந்த விடை?' என்றது.

காந்தி சிலைக்கு சில அடிகள் தள்ளி அமர்ந்திருக்கும் அந்த மனிதனின் முகத்தைப் பார்க்கும் எண்ணத்துடன், அந்த இடத்தை நோக்கி நடந்தான், செல்வன். இப்போது கடற்கரையில் ஆட்கள் இல்லை. அந்த ஆள் மட்டும் தான், மனைவியுடன் வந்திருந்தான்.

இவர்களை விட்டால் வேறு மூவர் தான்; அதுவும் அருகில் இல்லை. இது சாதகமானது என்றே இவன் எண்ணினான். வேகமாக நடந்தால் சந்தேகம் வருமென்று மெதுவாகவே கால்களை எடுத்து வைத்தான்.

இப்போது இவனுக்கே, 'செல்வன்' என்ற பெயர் எப்போதாவது தான் நினைவிற்கு வருகிறது. ரம்மி என்ற பெயரே நிலைத்து விட்டது. ரம்மி பெயர் எப்போது, எவரால் சூட்டப்பட்டது என்று, அடிக்கடி தன்னிடமே கேட்டுப் பார்ப்பான். தெளிவான விடை கிடைக்காது.

பதினோரு வயதிலேயே ரம்மி ஆட்டத்தில் நிபுணன் என்று பெயெரெடுத்தான். ரம்மி விளையாட்டினால் தான், இப்பெயர் வந்தது என்பதை நன்கறிவான்.

வீரய்யாவை பற்றிய முதல் நினைவு, ஆறு வயதில் வாழைப் பழத்துக்காக நடந்த ஒரு சண்டை தான்! அன்று அந்த வாழைப்பழம், இவனுக்குத் தான் கிடைத்தது. வீரய்யா விட்டுக் கொடுத்து விட்டான். அன்றிலிருந்து வீரய்யாவுடன் இவன் சண்டை போடுவதில்லை. வீரய்யா மட்டும்தான் தனக்குத் துணை என்று புரிந்து கொண்டான். இப்போது பத்தொன்பது வயது. இதுவரை இதுதான் உண்மை.

ரம்மிக்கு பெற்றோர் பற்றி எதுவும் தெரியாது. அவர்களைப் பற்றிய நினைவு ஒன்று கூட இல்லை. அவர்களைப் பற்றி அறிய இவன் முயன்றதும் இல்லை. பெற்றோரை பற்றி மட்டுமல்ல, ஓராண்டு வளர்த்து, வீரய்யாவுடன் சேர்த்து வைத்த முனியக்காவின் நினைவும் இல்லை.

இட்லி சுட்டு விற்பது முனியக்காவின் தொழில். இது மட்டும் தான் வருமானம். அப்போது பன்னிரெண்டு வயதான வீரய்யா, தாய்க்கு உதவியாக இருப்பான். கணவன் இறப்பதற்கு முன்னரே முனியக்காவின் வருமானத்துக்கு உதவியது, இது தான்.

ஒருநாள் அதிகாலையில், முனியக்கா கடை பரப்பும் இடத்தில் ரம்மி சுருண்டு படுத்திருந்தான். தட்டி எழுப்பி விபரம் கேட்ட போது, 'செல்வா! செல்வா!' என்று மட்டும் கூறினான்.

அடுத்த ஒரு ஆண்டில், முனியக்கா இறந்து போக வீரய்யாவும், செல்வனும் தனித்து விடப்பட்டனர். வீரய்யாவிடம் தங்கி வாழும் நிலை ரம்மிக்கு. அவன் எப்படிப் பணம் சம்பாதிக்கிறான் என்று, எட்டு வயது வரை அறியாமல் தான் இருந்தான்.

ஒருநாள் மார்க்கெட்டில் புகுந்து, பெண்ணின் கையில் இருக்கும் இருபது ரூபாயைப் பறித்துச் செல்லப் பழக்கினான், வீரய்யா. அப்போதுதான் வீரய்யாவின் தொழில் என்னவென்று அறிந்தான். நாளாக நாளாகத்தான் எல்லாம் புரிந்தது.

சில வேளைகளில் வீரய்யா, மாதக் கணக்கில் கூட வராமல் இருப்பான். திரும்பிய பிறகு எங்கே போனாய் என்று இவனும் கேட்பதில்லை; எங்கே போனேன் என்று அவனும் கூறியதில்லை.

முதல் முறை இவன் கைதான போது தான், வீரய்யா மாதக்கணக்கில் வராமல் இருந்ததற்கான காரணத்தை அறிந்து கொண்டான்.

என்னென்னவோ எல்லாம் செய்வான், ரம்மி. கையில் எப்போதும் காசு இருக்கவேண்டும் என்பது மட்டும் தான் இவனுடைய கொள்கை. பிக்பாக்கெட், வழிப்பறிக்காரன், சங்கிலித் திருடன், வண்டித் திருடன் என்று பெயர் எடுத்திருக்கிறான். இப்போது கொலைகாரன் என்ற பெயர் எடுக்கவும் தயாராகி விட்டான்.

இரண்டு காரணங்கள் மட்டும் தான் இருக்கின்றன. வீரய்யாவின் குழுவில் அவனுக்கு அடுத்தது யார் என்ற போட்டி வந்தால், அவன் ரம்மியை தான் முன்னிறுத்துகிறான்.

அடுத்த காரணம் அஞ்சலை. அவளுக்கு அவசரமாக இரண்டாயிரம் ரூபாய் தேவை என்று கூறினாள். காலையில் வீரய்யாவிடம் ஆயிரம் ரூபாயை வாங்கியவுடனேயே கொடுத்து விட்டான்.

அஞ்சலையை பற்றிய நினைவு வந்தது. இத்தனை வயதிற்குள் எத்தனையோ பெண்களுடன் இவனுக்குத் தொடர்பு இருக்கிறது. அந்த நிமிடங்களுடன் தொடர்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும். இவளது தொடர்பு மட்டும் நீடிக்கிறது. என்ன காரணம் என்றே இவனுக்குத் தெரியவில்லை.

கணவனை இழந்தவள் என்ற அனுதாபமா? குழந்தைகளுடன் கஷ்டப்படுபவளா? இல்லை என்று தான் கூறவேண்டும். அனுதாபம், இரக்கம் போன்ற வார்த்தைகள் இவனுடைய அகராதியில் இல்லையே!

முதல் முறை மார்க்கெட்டில் இருபது ரூபாய் பறிக்கும்போது எதுவும் ஆகவில்லை. இரண்டாவது முறை ஐந்து ரூபாய் பறிக்கும் போது அகப்பட்டு விட்டான்.

இது நடந்தது வடபழனி முருகன் கோவிலில். இரண்டு, மூன்று அடிகள் மட்டும் தான் விழுந்தது. பணம் பறிகொடுத்த பெண்மணி தடுத்து விட்டார்.

'விட்டிடுங்க. அப்பாம்மா வளத்த வளர்ப்பு சரியில்லை...' என்றாள்.

அந்தச் சம்பவம் இப்போது நினைவுக்கு வந்தது. அந்தப் பெண்மணி சொன்னது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணம் அப்போது போலவே, இப்போதும் எழுந்தது.

இனி மாற்ற முடியாது. இதுதான் வாழ்க்கை என்று எண்ணியபடி நடந்தான், ரம்மி. காந்தி சிலையின் கீழ் வந்தான். இவனுக்கு இடது பக்கம் கடல், வலது பக்கம் சாலை. இரண்டுமே வழக்கமான பரபரப்பை இழந்து சற்று அமைதி காத்தன. இன்னமும் கூட்டம் சேரவில்லை. இன்று தான் விடுமுறை நாள் இல்லையே!

தோளில் தொங்கும் பையை ஒரு முறை தொட்டுப் பார்த்தான், ரம்மி. வீரய்யா கொடுத்த கத்தி எடுப்பதற்கு வசதியாக வைக்கப்பட்டிருந்தது. இவனைக் கொல்வதென்பது சிரமமான காரியமல்ல என்று மனம் உறுதியாக கூறியது.

இப்போதே காரியத்தை முடிக்காமல் கொஞ்ச நேரம் கண்காணித்து பிறகு நிறைவேற்றலாம் என்று எண்ணியபடி, அந்த நீலநிறச் சட்டை ஆளை கடந்து சென்றான். கடக்கும் போது தான் குழந்தையொன்றையும் கண்டான்.

கடைக் கண்களால் பார்ப்பது, சந்தேகத்தை கொடுக்கும் என்பதால் திரும்பும் போது பார்க்கலாம் என்று எண்ணித் தொடர்ந்து நடந்தான். ஏறத்தாழ பத்தடி துாரம் போனவன் திரும்பி நடந்தான்.

அந்த ஆளின் முகத்தைப் பார்த்தான், ரம்மி. இதற்கு முன்னர் பார்த்ததாக நினைவில்லை. அவனின் முகத்தில் அப்பாவித்தனம் இருந்தது. திட்டமிட்டுக் கொல்லப்படும் அளவுக்கு என்ன பாவம் செய்திருப்பான் என்றது மனம்.

ஆளை அடையாளம் காட்டுவதில், வீரய்யா தவறி விட்டானோ என்று எண்ணினான். இன்னும் அருகில் மிக நெருக்கமாக வந்து விட்டான். மூக்கில் இருக்கும் சிறு மச்சம் நன்கு தெரிந்தது. வீரய்யா சரியாகவே அடையாளம் காட்டியுள்ளான், என்றது மனம்.

எதிரில் வரும்போது தான், இரு குழந்தைகள் என்று தெரிந்தது. அந்த நீலநிறச் சட்டை ஆளின் மடியில், ஒரு பெண் குழந்தை அமர்ந்திருக்கிறது. முன்னால் இருக்கும் ஆண் குழந்தை, மணலைக் குவியலாக்குவதும், கலைப்பதுமாக இருந்தான். இதைக் கவனித்தவாறே ஏதாவது உரையாடினால் கேட்கும் துாரத்தில் அமர்ந்தான், ரம்மி.

அந்த ஆளின் மடியில் அமர்ந்திருக்கும் பெண் குழந்தைக்கு, ஒன்றரை வயது தான் இருக்கும். மணல் குவியலுடன் ஐக்கியமாகி இருக்கும் குழந்தைக்கு, ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும். கணவனும்,- மனைவியும் ஆண் குழந்தையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

திடீரென்று அந்தப் பையன், மணல் விளையாட்டை விட்டு, தன்னுடைய தங்கையின் வயிற்றில் முகம் புதைத்துக் கொஞ்சினான். அவளோ கூச்சம் தாங்காமல் தமையனின் முடியைப் பிடித்து இழுத்தாள்; சிரிக்கவும் செய்தாள். அவளின் மென்மையான சிரிப்பு ரம்மிக்கும் கேட்டது.

சுற்றும் முற்றும் பார்த்தான். பையையும் தொட்டுப் பார்த்துக் கொண்டான். எதேச்சையாக அந்த பெண்ணின் முகத்தைப் பார்த்தன, கண்கள். தன்னுடைய குழந்தைகளின் செயல் இவளின் மஞ்சள் பூசிய முகத்தை மேலும் பொலிவாக்கியது. உடனேயே நீலநிறச் சட்டை ஆளைப் பார்த்தான். அவனும் அவ்விதமே!

தங்கையைக் கொஞ்சிக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் எழுந்து, அந்த ஆளின் முதுகுப் பக்கம் போய் கழுத்தை கட்டியபடி, ''அப்பா...'' என்றான்.

அந்த ஆள், இடது கையால் மகளை அணைத்தபடி, வலது கையால் பையனின் கையைப் பிடித்து, ''என்னப்பா?'' என்றான்.

''அங்கே பாருங்கப்பா.''

அந்த ஆள், அவனுடைய மனைவி மட்டுமின்றி, ரம்மியும் பார்த்தான். ஆம்புலன்ஸ் வண்டி ஒன்றில் பெண் மருத்துவர் ஒருவர் ஏறிக்கொண்டிருந்தார்.

''அவங்களைப் பாருங்கப்பா.''

''அவங்களுக்கு என்னப்பா?''

''இவளும், அந்த டாக்டர் ஆன்ட்டியைப் போலதான் வரணும்,'' தங்கையின் தலையைத் தடவியவாறே கூறினான், சிறுவன்.

''நீதானே டாக்டராகணும்ன்னு சொன்னே!''

''ஆமாப்பா. இவளும் டாக்டராகணும்.''

''ஏம்பா?''

''எங்க தாத்தா, பாட்டியைப் போல யாருமே சாகக் கூடாதுப்பா,'' என்ற பையனின் குரலில் கலக்கம்.

ஓரிரு நொடி மவுனத்திற்கு பின், ''அப்பா... அம்மா சொன்னாங்க... தாத்தாவும், பாட்டியும் கஷ்டப்பட்டுப் படிக்க வைச்சு, உங்களை வேலைக்கு அனுப்பினாங்களாம். அப்படிப்பட்டவங்களைக் காப்பாத்த முடியலேன்னு அழுதாங்கப்பா.

''என்னை நீங்க தானேப்பா ரொம்ப கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறீங்க. உங்களுக்கு ஒண்ணும் ஆகக் கூடாதுப்பா. நானும், இவளும் டாக்டராகி உங்களையும், அம்மாவையும் காப்பாத்துவோம்பா...'' என்றான், சிறுவன்.

சிறு பையனா இவ்வளவு முதிர்ச்சியுடன் பேசுவது என்ற வினா, ரம்மியின் மனதில் எழுந்தது.

அந்த ஆளையும், மகனையும், மனைவியையும், மகளையும் மாறி மாறிப் பார்த்தான்.

'என்னைப் போல இன்னொருவன் ஆகணுமா?' என்றது, மனம்; கையில் இருந்த பை நழுவியது.

எஸ். ஹரிஹரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us