PUBLISHED ON : மே 14, 2023

அ நிறம் | அளவு
மே 14 - அன்னையர் தினம்
சொர்க்கம்
பூமியிலேயே உண்டு
அம்மாவுக்கு நேசத்தோடு
பணிவிடை செய்து பாருங்கள்!
தெய்வம்
உங்களுடனே உண்டு
அம்மாவை பக்தியோடு
கால் தொட்டு வணங்குங்கள்!
நீங்கள் கேட்டதெல்லாம்
உங்களுக்கு கிடைக்கும்
அம்மா வாய் திறந்து கேளாமல்
குறிப்பறிந்து நீங்கள் கொடுத்தால்!
அகிலமே கைக்கு கிடைக்கும்
ஆனந்தம் எப்போதும் நிலைக்கும்
அம்மாவின் மனம் கோணாமல்
தேவைகளை நிறைவேற்றினால்!
தியாகத் திருவுருவான
ஒரு தேவதையின் தோழமை கிட்டும்
அம்மாவிடம் புன்னகை பூக்க
பாசத்தை நீங்கள் பொழியும்போது!
கருவறை சிம்மாசனத்திலிருந்து
இதய சிம்மாசனத்திற்கு இடமாற்றி
இறப்பு வரை இறக்கிடாமல் வைக்கும்
அம்மா எனும் இணையற்ற மனுஷியை
அன்னையர் தினத்தில் மட்டுமின்றி
அன்றாடம் காத்து மகிழ்ந்திடுங்கள்!
— ஆர். ஜெயசங்கரன், வானுார், விழுப்புரம்.
