PUBLISHED ON : மே 14, 2023

தஞ்சை எஸ்.ராஜவேலு எழுதிய, 'முயற்சி எனும் அரிய பொக்கிஷம்' நுாலிலிருந்து:
தாமஸ் ஆல்வா எடிசன், பாலர் பள்ளியில் படித்தபோது, அவரது ஆசிரியை, 'மண்டு' எனக் குறிப்பிட்டார்.
'என் பிள்ளையை எப்படி, மண்டு என்று சொல்லுவாய். வீட்டிலேயே அவனுக்கு நானே பாடம் சொல்லிக் கொடுத்து, அவனை ஆளாக்குகிறேன் பார்...' என்று, சவால் விட்டு சென்றவர் தான், தாமஸ் ஆல்வா எடிசனின் தாய்.
அன்றிலிருந்து, எடிசனுக்கு, அவர் தான் ஆசிரியை. கற்றுக்கொடுத்து, அவனை பெரிய ஆளாக, உலகம் போற்றும் விஞ்ஞானியாக மாற்றினார்.
அன்று, அந்த தாய் மேற்கொண்ட வைராக்கியமே, ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளை கண்டு, உலகத்தையே விஞ்ஞான மயமாக்கிய, தாமஸ் ஆல்வா எடிசனை உருவாக்கித் தந்தது. அவன் இல்லாவிட்டால், இன்று நாம் எல்லாரும் இருளில் தான் இரவை போக்கிக் கொண்டிருப்போம்.
***
உலகில் மிகப்பெரிய சர்வாதிகாரிகள் என்றதும், முதலில் நம் நினைவுக்கு வருபவர்கள், ஹிட்லர், முசோலினி, இடி அமீன் ஆகியோர் தான். அந்த அளவிற்கு தங்கள் கொடுங்கோல் ஆட்சியால், உலகையே அதிர வைத்து, பிரபலமானவர்கள்.
இதில், ஹிட்லரின் அடக்கு முறையும், கொடூரமும் மற்ற அனைவரையும் விஞ்சியவை. அப்படிப்பட்ட ஹிட்லர், ஜெர்மனி, ரஷ்ய படையினரிடம் தோல்வியுறப் போகிறது என்பதை அறிந்தான்.
உடனே, எதிரியின் கையில் அகப்பட்டு சித்ரவதைப்படுவதை விட, இறப்பதே மேல் என்று கருதி, தன் காதலியும், மனைவியுமான, ஈவாபிரானுடன் அறைக்குள் சென்று தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்து போனான். அவனது மனைவி, ஈராபிரானும் சயனைடு சாப்பிட்டு இறந்து போனாள்.
தன்னைத் தானே சுட்டு இறந்த ஹிட்லரின் வலது கையில், மார்போடு சேர்த்து அணைத்த நிலையில் ஒரு புகைப்படம் இருந்தது. அது, அவனுடைய தாய் கிளாரா போல்சின் படம். ஹிட்லரின் தாய்ப்பாசம் கண்டு அங்கிருந்த அனைவரும் வியந்தனர்.
எப்படிப்பட்ட மனிதனாக இருந்தாலும், அவன் மனதில் தாயின் அன்பும், பாசமும் நிறைந்திருக்கும் என்பதற்கு, ஹிட்லரின் தாய் ஒரு உதாரணம்.
தன் மகனுக்கு வரும் எப்படிப்பட்ட இழிவையும் எதிர்த்து, புகழ்பெறச் செய்வாள், தாய்.
***
'புகழ் பெற்றவர்களின் வாழ்க்கையில்...' என்ற நுாலிலிருந்து:
டாக்டர் சங்கர் தயாள் சர்மா, குடியரசு தலைவராக இருந்த சமயம், அரசு முறை பயணமாக, மேற்கு ஆசிய நாடான ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு சென்றார்.
அந்நாட்டின் மரபை மீறி, அரசரே விமான நிலையம் வந்து, அவரை வரவேற்க காத்திருந்தார். விமானம் நின்று, படிகள் இணைக்கப்பட வெளியே வந்தார், சர்மா.
அவரைக் கண்டதும், படியில் ஏறி, அவர் கைகளை பற்றி அளவளாவியபடியே இறங்கி வந்தார், அரசர்.
இது, அந்நாட்டு அதிகாரிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றுகிறது. ஆனால், யாரும் கருத்து சொல்லவில்லை.
பத்திரிகையாளர் சந்திப்பின்போது, அந்நாட்டு பத்திரிகை நிருபர், அந்த கேள்வியை அரசரின் முன் வைத்தார்.
அதாவது, 'எத்தனையோ நாட்டின் உயர் தலைவர்கள் வந்தபோதும், நேரில் வராத அரசர், குடியரசுத் தலைவரை வரவேற்க, ஏன், மரபை மீறி வரவேண்டும்... அப்படியென்ன அவர் சிறப்பு...' என்றார்.
அங்கே ஒரு சிறு சலசலப்பு.
'நான் இப்போது அரசனாக இருக்கலாம். ஆனால், இந்தியாவில், புனே பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது, எனக்குக் கல்வி போதித்த ஆசான், அவர். வெறுமனே கல்வி போதித்தலையும் தாண்டி, அந்நாட்டின் கலாசார, பண்பாடுகளைப் பற்றி தெளிவான பார்வையை எனக்கு கொடுத்தவர்.
'இன்றளவும் நான் ஓரளவு பண்பானவனாக இருப்பதாக நினைப்பதற்கு, அவரின் தோழமையான வழிகாட்டுதலும், ஒரு காரணம்.
'கல்வி போதிக்கும் ஆசிரியரைக் கண்ணில் வைத்துப் போற்றும் பண்பாடு கொண்டவர்கள், இந்தியர்கள். கொஞ்ச காலம் நானும் அந்த மண்ணில் இருந்தவன் அல்லவா, அந்தப் பண்பாடு எனக்கும் வந்திருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கப் போகிறது...' என, பெருமையாக சொன்னார், அரசர்.
- நடுத்தெரு நாராயணன்
