PUBLISHED ON : டிச 25, 2022

பொங்கி வரும்
பூம்புனல் வெள்ளமாய்
பிறக்கட்டும் புத்தாண்டு
துயரங்கள் விலகி
மகிழ்ச்சி நிலைத்திட
மலரட்டும் புத்தாண்டு!
பசுமை போர்த்திய
நன்செய் வயலாய்
சிறக்கட்டும் புத்தாண்டு
பகைமை கழண்டு
நட்பே சேர்ந்திட
ஒளிரட்டும் புத்தாண்டு!
திறமையுடையோர்
திக்கெட்டும் சாதிக்க
வழி விடட்டும் புத்தாண்டு...
மனிதம் கொண்டோர்
கருணையோடு காத்திட
கை கொடுக்கட்டும் புத்தாண்டு!
வேலையின்மையை துரத்தி
வாட்டும் வறுமையை விரட்டி
வளமாக்கட்டும் புத்தாண்டு
நெருக்கடிகளை களைந்து
மிரட்டும் அச்சம் அகற்றி
இன்பமாகட்டும் புத்தாண்டு!
சமூகக் கொடுமைகளை
வேரோடு சாய்த்திட
சாட்டை வீசட்டும் புத்தாண்டு
எல்லாரும் ஓரினமாய்
சமத்துவம் படைத்திட
பாட்டை போடட்டும் புத்தாண்டு!
புதுமைகள் பல கண்டு
மனிதகுலம் மேம்பட
உதவி செய்யட்டும் புத்தாண்டு
எதிர்கால தலைமுறை
நினைவில் கொண்டிட
நல்லன வழங்கட்டும் புத்தாண்டு!
அ.ப. சங்கர், தலைக்குளம், கடலுார்.