/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை! - வீரர்களே நம்முடைய வித்தைகளை காட்டுங்கள்!
/
கவிதைச்சோலை! - வீரர்களே நம்முடைய வித்தைகளை காட்டுங்கள்!
கவிதைச்சோலை! - வீரர்களே நம்முடைய வித்தைகளை காட்டுங்கள்!
கவிதைச்சோலை! - வீரர்களே நம்முடைய வித்தைகளை காட்டுங்கள்!
PUBLISHED ON : மார் 03, 2019

கல்லனைய இரும்பனைய காதகர்கள் இங்கு வந்து
புல்லனையார் புல்வாமா என்னுமொரு இடந்தன்னில்
செல்லரித்த சிந்தையராய் நடமாடும் தீக்குண்டாய்
வல்லரக்க நஞ்சனையார் வஞ்சகத்தைச் செய்தாரோ...
அஞ்சலிலா இந்தியர்காள்! ஆண்மை மிகு சிங்கங்காள்
வஞ்சகத்தால், வாழ்விழந்த வீரர்களை எண்ணுங்கள்
நஞ்சதனை பயிர் செய்து, நாசங்கள் செய்கின்ற
நெஞ்சில்லா நாடதனைக் கொல்லுங்கள் கொல்லுங்கள்!
நுதல் விழியை கொண்டவராய் நோக்குங்கள் நோக்குங்கள்
சதியிழைக்கும் பாவியுயிர் போக்குங்கள் போக்குங்கள்
முதற்குலிசன் அறுத்த சிறை முளைத்தெழுந்த மலைகள் போல்
விதியிதுவாய் பகை நாட்டை தாக்குங்கள் தாக்குங்கள்!
நாட்பொழுதும் அதற்கிதுவே, நாழிகையும் ஈதே தான்
வேட்டைக்கு போகும் நல்ல வேளையதும் ஈதே தான்
ஈட்டியயெம் புண்ணியம் உம் இணைத்தோளில் ஏறட்டும்
காட்டுகின்ற கடுஞ்சினமே கனலாக மாறட்டும்!
வெங்களத்தில் வெற்றியினை மேவிடவே ஏகுங்கள்
சிங்கமென பிடரியினை சிலிர்த்தங்கே தோன்றுங்கள்
அங்கமெலாம் கந்தகமாய் அவர் மேலே பாயுங்கள்
கங்குகனல் கொண்டந்தக் காதகரைச் சாயுங்கள்!
எத்தகையோர் நாமென்றே இக்கணமே காட்டுங்கள்
இத்தரையோர் கண்டிடவே இடியேறாய் தோன்றுங்கள்
வித்தகரே நம்முடைய வித்தைகளை காட்டுங்கள்
சித்தமெல்லாம் மாகாளி திறம் வந்து நிற்கட்டும்!
- சிவ.சூரியநாராயணன், சென்னை.