sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மார் 03, 2019

Google News

PUBLISHED ON : மார் 03, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு —

என் வயது: 30, கணவர் வயது: 36. நான், பிளஸ் 2 வரையே படித்துள்ளேன். கிராமத்தை சேர்ந்தவள். குழந்தை இல்லை. என் கணவர், எம்.ஏ., - பிஎச்.டி., படித்தவர். கல்லுாரி பேராசிரியராக உள்ளார். 'நிறைய படித்தவர், அறிவுஜீவி' என்று மற்றவர்கள் புகழ்வர்.

நான் படிக்காதவள், கிராமத்து பெண் என்று தெரிந்து தான் திருமணம் செய்தார். ஆனால், என்னுடன் சரியாக பேச மறுக்கிறார். நான், 10 வார்த்தை பேசினால், அவர், ஒரு வார்த்தை தான் பேசுகிறார்.

புத்தகங்களுக்கும், நண்பர்களுக்கும் அதிக மதிப்பளிப்பார். அவரது பட்டும் படாத பேச்சை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

அவருக்கு ஈடுகொடுத்து, நானும், நகரத்து பழக்க வழக்கங்களை கற்க ஆரம்பித்தேன். அவர் படிக்கும் புத்தகங்களை புரட்டி பார்ப்பேன், ஒன்றும் புரியாது.

சிறுவர், 'காமிக்ஸ்' புத்தகங்களாக வாங்கி, ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தேன். ஆனாலும், புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது. கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறது. கணவரிடம் கூறினால், 'அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்; வீட்டு வேலைகளை ஒழுங்காக பார்...' என்று கூறுகிறார்.

அம்மா, நான் என்ன செய்தால், அவர், என்னுடன் அன்பாக இருப்பார் என்று சொல்லுங்கள்.

இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —

சமுதாயத்தில், ஆணோ - பெண்ணோ, கற்றுக்கொள்ள மூன்று வகையான கல்விகள் உள்ளன. ஒன்று, ஏட்டு கல்வி. இதை கற்க, ஆரம்ப, மேல்நிலை பள்ளிகள், கல்லுாரி, பல்கலை கழகங்கள் தேவை.

ஏட்டு கல்வியை கற்க ஏராளமான பணமும், ஆண்டுகளும் செலவாகும். கற்கும் அளவிற்கு பட்டங்கள் பெறலாம், பட்டங்களை வைத்து வேலைக்கு போகலாம். இந்த கல்வியை உணர்ந்து படித்து, அறிவாய் சேமித்து வைப்போர், 20 சதவீதமே.

இரண்டாவது, மார்க்க கல்வி. நாம் எந்த மார்க்கத்தை சேர்ந்து இருக்கிறோமோ, அதை பற்றி முழுமையாகவோ, பகுதியாகவோ கற்றல்.

மூன்றாவது, வாழ்க்கை கல்வி. இதை கற்க, பள்ளிக்கூடமோ, ஆசிரியர்களோ தேவையில்லை. அனுபவங்களின் மூலம், நாம் எதை செய்யலாம், எதை செய்யக் கூடாது, உறவுகளை, நட்புகளை எப்படி பராமரிக்கலாம் போன்ற, அனைத்தையும் கற்றுக் கொள்ளலாம்.

வாழ்க்கை கல்வியும், அடிப்படை ஏட்டு கல்வியும் இருந்தால், ஒரு ஆணோ - பெண்ணோ, சிறப்பான, ஆக்கபூர்வமான வாழ்க்கை வாழ முடியும்.

ஆங்கில மொழியில் சிறப்பாக பேசுவது அறிவல்ல; திறமை. ஆங்கில மொழியில், 30 ஆயிரம் வார்த்தைகளை அர்த்தபூர்வமாக தெரிந்து வைத்திருந்து, தயக்கமில்லாமல், சிறு சிறு வாக்கியங்களில் பேசினால், ஆங்கில மொழி எளிதாக வந்து விடும்.

உன் கணவருக்கு, மெத்த படித்து விட்டோம் என்ற இறுமாப்பு. அவரை திருப்திப்படுத்த, அவரின் அங்கீகாரம் பெற முயற்சிப்பது வீண்.

உன் கணவரிடம், 'அறிவாளி' என்கிற சான்றிதழை வாங்கி, 'பிரேம்' போட்டு, வரவேற்பறையில் மாட்டி வைக்கப் போகிறாயா என்ன...

இல்லத்தரசிக்குரிய பணிகளை செய்தபடியே, உன்னை பல வகையிலும் மேம்படுத்த தனி முயற்சிகள் செய். தொலைதுார கல்வி இயக்ககம் மூலம், பட்டப் படிப்புகளை படிக்கலாம். தினமும் ஒரு ஆங்கில தினசரியும், தமிழ் தினசரியும் வாசி.

தொலைக்காட்சியில், தினமும் ஒரு மணி நேரம், நடுநிலையான செய்தி அறிக்கை கேள். நீ எந்த மதத்தை சார்ந்திருக்கிறாயோ, அந்த மதத்தின் புனித நுால்களை வாசி. மொழிபெயர்ப்பு சுயசரிதைகளை வாசி.

கிராமத்து பெண்மணி என்பது, இழிவான விஷயமல்ல. கிராமங்களில் தான், இந்தியாவின் ஆன்மா வாழ்கிறது. கிராமத்து பெண்களிடம் தான் இந்திய பாரம்பரியம், கலாசாரம், ஒப்பனையற்ற அழகு, விருந்தோம்பல், சித்த மருத்துவம், இன்னுமே உயிர்த்து நிற்கிறது.

அடிமை மனோபாவத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் துாக்கி எறி. 10 ஆண்டுகளுக்கு பின், உன் விஸ்வரூபம் பார்த்து, திகைத்து, கும்பிடுவார், உன் கணவர்.

வாழ்க்கை கல்வியில், பல படிகளை தொட்ட பெண்மணிகளின் வரிசையில் சேர் மகளே!

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.







      Dinamalar
      Follow us