/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை - வெற்றிச் சூத்திரங்கள்!
/
கவிதைச்சோலை - வெற்றிச் சூத்திரங்கள்!
PUBLISHED ON : டிச 17, 2023

வாழ்க்கையென்பது
தோல்வியாளர்களுக்கு
ஆயிரம் வாசல்
அரண்மனை
இலக்குகள் புரிவதற்குள்
வாழ்க்கை
தொலைந்து விடுகிறது!
வெற்றியாளர்களுக்கோ
ஒரே வாசல் கொண்ட
கர்ப்பகிரகம்
இலக்குகள் தெளிவாக
வாழ்க்கையும் எளிதாக!
எல்லாவற்றையும்
நம்புவதென்பது
மாலுமியில்லாத கப்பல் போல
ஊர் போய் சேராது!
எதையுமே
நம்பாமல் இருப்பதோ
கரையிலேயே ஒதுங்கியிருக்கிற
கப்பல் போல
ஊரைக் கூட தாண்டாது!
முட்களால் தான்
பாதையென்றாலும்
நடக்க தயங்க மாட்டான்
வெற்றியாளன்!
மலர்களாலேயே
பாதையென்றாலும்
துணைக்கு ஆள் தேடுவான்
தோல்வியாளன்!
வாழ்க்கை
வெற்றியாளர்களுக்கு
தலையாட்டி பொம்மை
தோல்வியாளர்களுக்கோ
உடைந்துபோகும்
கண்ணாடி பொம்மை!
வாழ்ந்தது
வானவில் மாதிரி
தற்காலிகமாய் இருந்தாலும்
பூமிக்கு வந்து போனது
ராமர் வில் மாதிரி
நிலைத்திருக்க வேண்டாமா!
பொக்கைவாய்
குழந்தை பொய்ப் பல்
மாட்டிக்கொள்கிற மாதிரி
தோல்விகள் உனக்கு
செயற்கையானவை
வெற்றி உனது இயற்கை
இயல்பாய் இரு
வெற்றியே நீ!
— கஜலட்சுமி முருகானந்தன், திருப்பூர்.