
அன்பு சகோதரிக்கு —
என் வயது: 60. சமீபத்தில் இறந்து விட்டார், கணவர். எனக்கு ஒரே மகன், வயது: 31, திருமணமானவன். நல்ல வேலையில் இருக்கிறான்.
திருமணமானதிலிருந்து அவனுக்கும், மருமகளுக்கும் ஒத்துவரவில்லை. மருமகளுக்கு வலிப்பு நோய் இருந்ததை மறைத்து, திருமணம் செய்து வைத்துள்ளனர், அவளது பெற்றோர்.
முறையான சிகிச்சை எடுத்தால் சரியாகி விடும் என்று, நானும், கணவரும் முயற்சி செய்தோம். மகனோடு ஒத்து வராததால், எங்களையும் எதிரியாக பார்த்தாள்.
நாங்கள் எவ்வளவோ பேசி பார்த்தும், ஒரே ஆண்டில், இருவரும் விவாகரத்து வாங்கி, பிரிந்து விட்டனர்.
மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தியும், மறுத்து விட்டான், மகன்.
மகனின் வாழ்க்கை இப்படியாகி விட்டதே என்று வருத்தப்பட்டே, மாரடைப்பால் இறந்து விட்டார், கணவர். என் உடல்நிலையும் அடிக்கடி சரியில்லாமல் போகிறது.
என் காலத்துக்கு பின், மகன் நிலை என்னாகுமோ என்று பயமாக இருக்கிறது. மகனை, மறுமணத்துக்கு சம்மதிக்க வைப்பது எப்படி?
—இப்படிக்கு, உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு—
ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வந்து விட்டால், அவளது நல்லது கெட்டது அனைத்துக்கும் புகுந்த வீடே பொறுப்பு. அவள் வழி நகை, சொத்து, பணம் வந்தால் குதுாகலம். அவளுக்கு சிறு நோய் தொற்று இருந்தால் பெரும் கூச்சல்...
நீயோ, உன் மகனோ மாட்டுப்பெண்ணுக்கு முறையான சிகிச்சை தரவில்லை. பதிலாக, சதா அவளை குத்திக் காண்பித்துக் கொண்டே இருந்திருப்பீர்கள். இருந்த ஒரு ஆண்டும், மருமகளுக்கு நரக வேதனை கொடுத்திருப்பீர்கள் என்று சந்தேகிக்கிறேன்.
நோய் உபாதை, 20 சதவீதம் என்றால், உங்களின் குடைச்சல், 80 சதவீதம். கூண்டை விட்டு கிளி தப்பித்து பறந்து விட்டது.
விவாகரத்து பெற்ற மகன், சற்று ஆசுவாசிக்கட்டும். மீண்டும் கொடுமைப்படுத்த ஒரு மருமகள் உனக்கு தேவைப்படுகிறாளா? உன்னுடைய கண்ணுக்கு பின், மகனின் நிலை நன்றாகவே இருக்கும். சொல்லித்தர யாருமில்லாமல் அவனே சுயமாய் சிந்திப்பான்.
திருமணம், சர்வரோக நிவாராணி அல்ல. உன் ஆயுள் காலத்துக்குள், மகனுக்கு மீண்டும் திருமண ஆசை வந்தால், சரியான இணையை தேடிக் கொடு.
'திருமணம் வேண்டாம், பிரம்மச்சாரி வாழ்க்கையை அனுபவிப்போம்...' என, மகன் இருந்தால், விட்டு விடு. மகனுக்கு மீண்டும் திருமணமாகி, பேரன் - பேத்தி பிறந்தால், கொஞ்சலாம் தான். அந்த வாய்ப்பு உனக்கு தகையா விட்டால், பேரன் - பேத்தி வயதுள்ள பிற குழந்தைகளை கொஞ்சி விட்டு போ.
இல்லாத மற்றும் கிடைக்காத ஒன்றுக்காக, விழுந்து புரண்டு புலம்பி அழுவதை விட, இருக்கும், கிடைக்கும் சிறு சிறு விஷயங்களை, பரமானந்தமாய் அனுபவித்து, நிகழ்கணங்களில் வாழ், சகோதரி!
—-என்றென்றும் பாசத்துடன்,சகுந்தலா கோபிநாத்.