/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
இரண்டு மாதங்களுக்கு மட்டுமே திறந்திருக்கும், தபால் நிலையம்!
/
இரண்டு மாதங்களுக்கு மட்டுமே திறந்திருக்கும், தபால் நிலையம்!
இரண்டு மாதங்களுக்கு மட்டுமே திறந்திருக்கும், தபால் நிலையம்!
இரண்டு மாதங்களுக்கு மட்டுமே திறந்திருக்கும், தபால் நிலையம்!
PUBLISHED ON : டிச 17, 2023

இந்தியாவில் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே, ஒரு தபால் நிலையம் இயங்குகிறது. அது தான், சபரிமலையில் அய்யப்பன் சன்னிதிக்கு அருகில் இயங்கும், தபால் நிலையம்.
இந்த சன்னிதான தபால் நிலையம், ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 16 முதல், ஜனவரி 20 வரை திறந்திருக்கும். அஞ்சல் மற்றும் அஞ்சல் குறியீடு, இந்த காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். மேலும், இந்த தபால் நிலையம், விஷு பண்டிகை ஒட்டி, 10 நாட்களுக்கு திறந்திருக்கும்.
கடந்த, 60 ஆண்டுகளாக, சாமி அய்யப்பன் சன்னிதானம், பி.ஓ 689713 என்ற விலாசத்தில், செயல்பட்டு வருகிறது. தற்போது மண்டல, மகர விளக்கு காலத்தை முன்னிட்டு நடை திறக்கப்பட்டுள்ளதால், தபால் நிலைய பணியும் சுறுசுறுப்படைந்து உள்ளது.
இந்த தபால் நிலையத்தில், நான்கு பேர் பணியில் உள்ளனர். தபால் நிலையத்தில் ஒருவர் இருப்பார். மற்ற மூவர், பிற பணிகளை செய்வர். தபால் நிலையத்தில் உள்ள ஒரு அறையிலேயே தங்கியுள்ள ஊழியர்கள், அய்யப்பன் சீசன் முடிந்ததும் வீடு திரும்புவர்.
கடந்த, 1963-ல் துவங்கப்பட்ட இந்த தபால் நிலையத்தில் பயன்படுத்தப்படும் அஞ்சல் முத்திரையில், சபரிமலையின் 18ம் படி மற்றும் அய்யப்பன் சிலை உலோகத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த உலோக அஞ்சல் முத்திரை, 1974-ம் ஆண்டு முதல், சன்னிதானம் தபால் நிலையத்தில் அமலுக்கு வந்தது. இதுபோன்ற உலோகத்தாலான தனி அஞ்சல் முத்திரையை, தபால் துறை வேறெங்கும் பயன்படுத்துவதில்லை.
நாடு முழுவதும், 39 இடங்களில் மட்டுமே வெவ்வேறு தனி தபால் முத்திரைகள் உள்ளன. அதில் சன்னிதானத்தில் உள்ள இந்த தபால் நிலையமும் ஒன்று.
குடியரசுத் தலைவர் மற்றும் சபரிமலை சாஸ்தா ஆகியோருக்கு மட்டுமே, தபால் துறையில் சொந்த பின் குறியீடு உள்ளது என்பதும் தனிச்சிறப்பு. சன்னிதானம் தபால் நிலைய பின்கோடு: 689713.
இங்கு தினமும், 60 - 70 மணியார்டர்களும், இன்லான்டு லெட்டர், கவர், தபால் அட்டை என, மொத்தம் 100 - 200 கடிதங்கள் வருகின்றன. அதில், சபரிமலை அய்யப்பனுக்கு தங்களது இல்ல குழந்தைகள் பெயர் சூட்டு விழா, புதுமனை புகு விழா மற்றும் திருமண விழாக்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைப்பதுண்டு.
அதுமட்டுமின்றி, தங்களது வருத்தம், குறை மற்றும் வாழ்க்கை துயரங்களையும் அய்யப்பனுக்கு தெரிவித்து கடிதங்கள் அனுப்புகின்றனர், பலர்.
அய்யப்பன் பெயரில் வரும் கடிதங்களை பெறும் தபால் நிலைய நிர்வாகிகள், அதை சுவாமி பாதங்களில் வைத்து, பின்னர், கோவில் சன்னிதான அதிகாரிகளிடம் ஒப்படைப்பர்.
தபால் நிலையம் மூடும்போது, அஞ்சல் முத்திரையை, பத்தனம்திட்டா தபால் நிலையத்தில் உள்ள அஞ்சல் கண்காணிப்பாளரின் லாக்கரில் வைத்து விடுவர்.
சன்னிதானத்தில் பல்வேறு துறை சார்பில் வருவோர், இந்த தபால் நிலையத்திலிருந்து அப்பம் மற்றும் அரவணை பாயசம் போன்ற பிரசாத பொருட்களை, தங்களின் வீடுகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.
பிற தபால் நிலையங்களில் உள்ளது போல, இந்த தபால் நிலையத்திலும், 'இந்தியா போஸ்ட் பேமென்ட்' வங்கி வசதியும் உள்ளது.
இத்தனை சிறப்பு பெற்ற சபரிமலை சன்னிதானம் தபால் நிலையத்திற்கு, தினமும் திரளான பக்தர்கள் வருகின்றனர். 18ம் படி மற்றும் அய்யப்பன் முத்திரையிடப்பட்ட கவர்களை வாங்கி, ஞாபகார்த்தமாக எடுத்துச் செல்கின்றனர்.
ஞானதேவ்ராஜ்