PUBLISHED ON : டிச 17, 2023

குளிர் காலத்தில் பழங்களை சாப்பிட்டால், ஜலதோஷம் பிடிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இது தவறு. அவ்வாறு சாப்பிடாமல் இருந்தால் தான், கிருமிகள் எளிதில் உடலில் புகுந்து விடும். குளிர்காலத்தில் சாப்பிட வேண்டியவைகள் என்னென்ன என்று பார்ப்போம்!
ஆரஞ்சு: குளிர்காலத்தில், ஜலதோஷ பாதிப்பு அதிகம் இருக்கும். ஆகவே, அவற்றை தடுக்க உடலில் போதிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின் சி அவசியம். அந்த சத்து, ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளது.
பசலைக் கீரை: பொதுவாகவே கீரை வகைகளை அதிகம் சேர்த்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும், பசலைக் கீரையை உணவில் அதிகமாகச் சேர்த்து வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் சேர்ந்து, நோய் தாக்காமல் ஆரோக்கியமாக வைக்கும்.
வேர்க்கடலை: வேர்க்கடலையை வறுத்து சாப்பிட்டால், உடலில் உள்ள வெப்பம் சரியான அளவு இருப்பதோடு, புரோட்டீனும் அதிகம் கிடைக்கும்.
கொய்யாப்பழம்: நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதுடன், இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்கும். கொய்யாவில் உள்ள, 'லைகோபைன்' இதயத்தில் ஏற்படும் பிரச்னையை தடுக்கிறது. ஆகவே, குளிர்காலத்தில் சிவப்பான உட்பகுதி கொண்ட கொய்யா பழத்தை அதிகம் சாப்பிடுவது நல்லது.
கேரட்: கேரட்டில் வைட்டமின் பி, சி, டி, ஈ மற்றும் கே உள்ளன. இதில் உள்ள கரோட்டீன், உடலினுள் செல்லும்போது வைட்டமின், 'ஏ'வாக மாறி விடுகிறது. எனவே, கேரட்டை சேர்ப்பது அவசியமாகிறது.
நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்: ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உலர் பழங்களை குளிர்காலத்தில் சாப்பிட்டால், கிருமிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.
- ஜி.செங்கனிராஜ்