PUBLISHED ON : பிப் 02, 2014

இதயம் வலிக்கிறது!
பூலோக சொர்க்கமே
நீ சிரித்தால்
சப்த ஸ்வரங்களும்
சப்தமற்று போய் விடுகிறது!
ம்ம்மா... ம்மா... ம்மா...
ப்ப்பா... ப்பா... ப்பா...
த்த்தா... த்தா... த்தா...
உன் கவிதைக்கு
அர்த்தம் தேடியதில்
உலகத்து அகராதிகள் எல்லாம்
அச்சடித்த வெற்று காகிதமாய்
அர்த்தமற்று தெரிகிறது!
தேனீக்கள் சேகரித்த தேன்
உன் உமிழ் தேனின் முன்
சுவையற்று போய்விட்டது!
உன் பிஞ்சு விரல் படும் போது
ஒரே நேரத்தில்
ஓராயிரம் வீணைகள்
என் உடம்பிற்குள் மீட்டப்படுகின்றன!
உலகத்து மொழிகள் எல்லாம்
உன் மழலை மொழியின் முன்
அனர்த்தமாய் ஒலிக்கிறது!
நடராஜன் நாணுகிறான்
உன் கை அசைப்பையும்
கால் அசைப்பையும் கண்டு!
நீ விழித்திருக்கும்
நேரமெல்லாம்
பூகம்பத்தில் சிதறுண்ட
பொருட்களைப் போல்
வீடு அலங்கோலமாய்
கிடக்கிறது!
நீ துயிலும் நேரமோ
மண், மரம், செடி கூட
மவுன விரதம்
அனுஷ்டிக்கிறது!
என் செல்லமே...
நீயும் வளர்வாய்
காமம், கோபம், குரோதம்
வெறுப்பு, விரோதம், கயமை
அத்தனை உணர்வும்
உன்னையும் ஆட்டிப் படைக்குமே
எனும் போது
இதயம் ஏனோ வலிக்கிறது!
— ப.லட்சுமி, கோட்டூர்.
