/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை! பயணத்திற்கு உதவாத மாய கப்பல்!
/
கவிதைச்சோலை! பயணத்திற்கு உதவாத மாய கப்பல்!
PUBLISHED ON : நவ 20, 2022

கனவு போலத்தான்
வாழ்க்கை!
கனவு விடிந்தால்
கரைந்து போகும்
வாழ்க்கை கனவு
கலைந்து எழுந்தால்
உடன் நடித்த ஒரு
கதாபாத்திரம் காணாமல்
போயிருக்கும்!
பணம், பதவி, மரியாதையெல்லாம்
நாம் உண்ணும் உணவைப் போல்
ருசிக்க, ருசிக்க பசிக்கும்...
ஆனால்,
நிரந்தரமின்றி வீணாய்ப் போகும்!
ஆயிரம் பேர் சூழ்ந்திருக்க
நான் யார் தெரியுமா?
என்று கேட்கும் ஆணவம்
அதே கேள்வியை
தனிமையில் தன்னை நோக்கி
கேட்க, 'நான்'
காணாமல் போயிருக்கும்!
காலுக்கு கீழ் அடிமையைப் போல்
கிடக்கும் பூமி
நிரந்தரமானது!
நானே எஜமான் என
மார் தட்டி திரிந்தவன்
மக்கி, மண்ணாய் அதே
பூமியோடு ஐக்கியமாவது
வாழ்வியல் சூத்திரம்!
உன்னை எரிக்கலாம்
அல்லது புதைக்கலாம்
இதுவரை நீ சேர்த்து வைத்த
சொத்துகள்
சொந்தங்கள்
பதவிகள்
அதிகாரங்கள்
தம்பட்டங்கள்
அடுத்தவர்களின் வயிற்றெரிச்சல்
ஆசிர்வாதங்கள்
ஏதேனும் துணை வருமா?
தீ சுடும்
வாழ்ந்தோர் சொல் கேட்டும்
தெளியலாம்
தொட்டுப் பார்த்தும்
பாடம் கற்கலாம்!
ஆறடி நிலம் கூட
உறுதியில்லாத வாழ்வில்
கொண்டு போவதற்கு
என்ன இருக்கிறது?
வாழ்ந்த நாளில்
உனக்கு பயந்து எத்தனை பேர்
உன்னுடன் வந்தனர்
என்பது பெரிதில்லை!
மனிதனாய் பிறப்பது எளிது
மிருகமாய் வாழ்வது எளிது
தெரு நாயைப் போல்
செத்துப் போவது எளிது!
நீ
மனிதனா
மிருகமா?
உன் கடைசி யாத்திரையில்
கண்ணீருடன் வருகிறவர்களின்
எண்ணிக்கை நீ வாழ்ந்த
வாழ்க்கையை சொல்லிவிடும்!
எஸ்.ஏ. சரவணக்குமார், சென்னை.