
வேலைக்குக் கிளம்பும் கணவன் அருணுக்கு டிபன் வைத்தபடி, ''மாமாவுக்கு பணம் அனுப்பிட்டீங்களா?'' கேட்டாள், உமா.
''ம், அனுப்பியாச்சு.''
''பத்து வருஷமாக, மாசம் தவறாமல், 5,000 அனுப்பறோம். நீங்க மட்டும் இல்லை, உங்க தம்பியும் அனுப்பறாரு.''
''ஆமாம், அதுக்கென்ன இப்போ?''
''அப்ப நமக்கு செலவுகள் கம்மி, இந்தத் தொகை பெரிசா தெரியலை. இப்ப பிள்ளைங்க வளர்ந்துட்டாங்க... அவங்க படிப்புச் செலவு அதிகமாயிருச்சு. வங்கி கடன் வாங்கி, வீடு கட்டப் போறோம்.
''மாமாவும் அரசு வேலை பார்த்து ஓய்வுப் பெற்றதால், 'பென்ஷன்' வருது. கிராம வாழ்க்கைக்கு அதுவே அதிகம்; இன்னும் நாம் கொடுக்கணுமா சொல்லுங்க.''
'அருண், விஜய்... நான், 'ரிடையர்ட்' ஆயிட்டேன். இவ்வளவு வருஷமும் ஊர் ஊராக குடிசை துாக்கினேன். இனி, நான் பிறந்த கிராமத்தில் அம்மாவோடு போய், 'செட்டில்' ஆகலாம்ன்னு நினைக்கிறேன். நீங்க இரண்டு பேரும் குடும்பத்தோடு, உங்கள் வாழ்க்கையை வாழுங்க... தயவுசெய்து எங்களைக் கூப்பிடாதீங்க...' என்றார், அப்பா.
'இருந்தாலும், உங்களுக்காக நாங்க எதுவும் செய்ய வேண்டாமா... இப்படி ஒதுக்கினால் எப்படிப்பா?' என்றான், அருண்.
'நீ அப்படி சொல்றியா, சரி... இவ்வளவு நாளும் வேலை வேலைன்னு அலைஞ்சோம். இனிமேலாவது உங்க அம்மாவை அழைச்சுக்கிட்டு நாலு இடம் போயிட்டு வர்றோம். எனக்கு 'பென்ஷன்' வருது. இருந்தாலும், நீயும், தம்பியும், மாசம், ௫,௦௦௦ ரூபாய் அனுப்பி வைங்கப்பா. முடியும் இல்லையா?' என, கேட்டார்.
'என்னப்பா இப்படி கேட்கறீங்க, கட்டாயம் அனுப்பி வைக்கிறோம்; அது எங்க கடமை. நீங்க அம்மாவோடு நினைச்ச இடத்துக்கு போயிட்டு வாங்க...' என்றான், விஜய்.
அதன்படி இருவரும், அப்பாவுக்கு பணம் அனுப்புகின்றனர்.
இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, 'திருப்பதி, போனேன், திருச்செந்துார் போனேன். அம்மா ஆசைப்பட்டான்னு, என் நண்பர்களோடு வேன் எடுத்துட்டு கொடைக்கானல், பழனின்னு ஒரு வாரம் நல்லா சுத்திட்டு வர்றோம்...' என, சந்தோஷக் குரலில் சொல்வார்.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை, இரண்டு மகன் வீட்டிற்கும் வந்து, ௧௦ நாட்கள் பேரன், பேத்தியோடு இருந்துவிட்டுப் போவர்.
இவர்களும் ஆண்டிற்கு ஒருமுறை பிள்ளைகளுக்கு விடுமுறை சமயம், கிராமத்திற்கு போய் அப்பா, அம்மாவோடு இருந்துவிட்டு வருவர்.
'உமா சொல்வது போல், இப்போது செலவுகள் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது. அதுக்காக, அப்பாவுக்குப் பணம் அனுப்பாமல் இருக்க முடியுமா?' என, நினைத்துக் கொண்டான், அருண்.
தம்பியிடம், ''அண்ணி சொல்றது சரிதான். அப்பாவுக்கும், 70 வயது ஆச்சு. 'பென்ஷன்' பணமே போதுமானது தான். அதுக்காக நாம் கொடுப்பதை நிறுத்த முடியாது. அவங்க மனசு எப்பவுமே கஷ்டப்படக் கூடாது.
''நமக்குன்னு எத்தனையோ செலவு செய்யறோம். அதில் இதுவும் ஒண்ணுன்னு நினைச்சுக்கணும். எந்தக் காரணம் கொண்டும் அனுப்பறதை நிறுத்தக் கூடாது,'' என்றான், அருண்.
அந்த ஆண்டு, விடுமுறைக்கு இருவரும் குடும்பத்தோடு கிராமத்துக்குச் சென்றனர்.
தன் முதுமையைப் பொருட்படுத்தாமல், மகன், பேரன் மற்றும் பேத்திக்கு பிடித்ததைச் சமைத்துப் பரிமாறினாள், அம்மா.
''என்னப்பா, அம்மாவை அழைச்சுக்கிட்டு வெளியூர் போயிட்டு வர்றீங்களா?'' கேட்டான், அருண்.
''அதெல்லாம் குறைஞ்சு போச்சுப்பா... வயசாகிட்டு வருதுல்லையா... உடம்பில் தெம்பு குறைஞ்சாச்சு... இனி, இருக்கிற இடத்தில் இருந்து பகவானை தரிசிக்க வேண்டியது தான்,'' என சொல்பவரை, பார்த்தபடி இருந்தாள். உமா.
இரவு குழந்தைகள் துாங்கியபின், அப்பா மற்றும் இரு மகன்களும் வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்தனர்.
வானத்தில் பூரண சந்திரன் ஒளி பிரகாசித்தது.
''பரபரப்பான சென்னையில் இருந்துட்டு, இந்த இடம் ரொம்பவுமே அமைதியாக இருக்கிற மாதிரி தோணுதுப்பா,'' என்றான், விஜய்.
''நானும் இப்படிதான்பா... 'டிரான்ஸ்பரில்' ஊர், ஊராக உங்களையும் அழைச்சுக்கிட்டு அம்மாவோடு போவேன். ஒவ்வொரு இடத்திலும் இரண்டு வருஷம். ஓடி ஓடி உழைச்சாச்சு; உங்களுக்கும் நல்ல வழி காட்டிட்டேன்.
''இப்ப மனசு நிறைவோடு வாழ்ந்துட்டு இருக்கேன்பா. இந்த முறை விடுமுறைக்கு நீங்க வரும்போது, உங்ககிட்டே ஒரு விஷயம் சொல்லணும்ன்னு இருந்தேன்,'' என்றார், அப்பா.
'என்னப்பா?' என்றனர், அருண் மற்றும் விஜய்.
''இனிமேல் நீங்க, எங்களுக்கு பணம் அனுப்ப வேண்டாம்பா. பிள்ளைகள் வளர்ந்துட்டாங்க, உங்களுக்கும் பல செலவுகள் இருக்கும்; அதைப் பாருங்க. என்னோட செலவும் குறைஞ்சிடுச்சு. இனிமேல் எங்களால் அதிகம் அலைய முடியாது. இருக்கிறதை வச்சு காலத்தை ஓட்டிடுவோம்,'' என்றார்.
''எதுக்குப்பா வேண்டாம்ன்னு சொல்றீங்க, எங்களால் முடியும்பா. அனுப்பி வைக்கிறோம்,'' என்றான், அருண்.
''இல்லப்பா, இவ்வளவு நாளா, உங்க திருப்திக்காக தான் வாங்கினேன். உங்களுக்கு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்ன்னு, அந்த பணத்தை நான் செலவு செய்யலைப்பா. நாளைக்கு உங்களுக்கு அந்தப் பணம் உதவும்னுதான் அனுப்பச் சொன்னேன்.
''உன்கிட்டே கொடுத்தேனே, 'டெபாசிட் ரசீது' அதை எடுத்துட்டு வாம்மா,'' என்று மனைவியிடம் கூறினார்.
இருவரிடமும் ரசீதை தந்து, ''இரண்டு பேர் பெயரிலும், இன்று வரை, 15 லட்சம் வட்டியோடு சேர்த்து இருக்குப்பா. உங்க தேவைகளுக்கு உபயோகப்படுத்திக்கங்க.
''உங்களைப் படிக்க வைக்கவும், வீட்டு செலவுக்குமே என் சம்பளம் சரியாப் போச்சு. பெரிசா சொத்து சுகம் சேர்க்க முடியலை. உங்க வருமானத்தையே, சேமிப்பாக்கி திரும்ப உங்ககிட்டேயே கொடுக்கிறேன். சந்தோஷமாக வாங்கிக்கோங்க,'' என்றார், அப்பா.
'என்னப்பா இது, நாங்க தந்ததை திரும்ப எங்ககிட்டயே கொடுக்கிறீங்களே?' என்றனர்.
''பெத்தவங்க என்னைக்கும் பிள்ளைகளுக்கு கொடுக்கணும்ன்னு தான் நினைப்பாங்க. சூழ்நிலைகள் சிலசமயம், பெத்தவங்களே பிள்ளைகளை எதிர்பார்த்து வாழும்படி செய்துடுது. நிச்சயம் பெத்தவங்களை வயதான காலத்தில் பாதுகாக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை தான்.
''அந்தக் கடமையைக் கூட பெத்தவங்கள் தங்களால் இயலாத சூழ்நிலையில் தான் ஏத்துப்பாங்களே தவிர, முடிந்தவரை பிள்ளைகளுக்கு சிரமம் தராமல் வாழணும்ன்னு தான் நினைப்பாங்க. அதுதான்மா பெத்தவங்க மனசு. வாங்கிக்கோங்க,'' என்றார்.
மனம் நெகிழ இருவரும் அப்பாவைப் பார்த்தனர்.
பரிமளா ராஜேந்திரன்